காளிதாசனின் ரகுவம்சம் : 38
சப்தம் நோக்கி செல்லும் அந்த அம்பினை ஏவிய தசரதன், "அப்பா" என அலறிய குரல் ஒன்றை கேட்டான். அப்போதுதான் அது யானை அல்ல மானுடன் என்பது புரிந்தது அவன் அஞ்சியபடியே ஓடினான், அவனை பார்க்கமுடியாதபடி நீர்வஞ்சிகொடி மறைத்திருந்தது அதை கிழித்தபடி சென்ற தசரதன் அங்கு சிறுவன் ஒருவன் மார்பில் தன் அம்பு பாய்ந்தபடி குடத்தின் மேல் சரிந்திருப்பதை கண்டான்
தசரதன் நல்லகுடியில் பிறந்தவன், எல்லா நியாய தர்மமும் அறிந்தவன் அதனால் தான் செய்தது பெரும் பாவம் என்றும் இந்த பழி தன் குலத்தை சாரும் என மிகவும் அஞ்சினான், தன் குதிரையில் இருந்து பதறியபடி இறங்கிய அவன் அந்த சிறுவனை கையில் ஏந்தி அவனை பற்றி கேட்டான், அவனோ தான் பிராமணன் அல்லாத முனியின் மகன் எனவும் கண் தெரியா பெற்றோரிடம் தன்னை அழைத்து செல்லும் படியும் பெரும் வலியுடனும் பிரியும் உயிருடனும் மெல்ல முணகினான்
தசரதன் அவனை தன் கைகளில் சுமந்தபடி அவன் பெற்றோரிடம் கொண்டு சென்று அவர்கள் முன் இட்டு யானை என தவறாக நினைந்து தான் தவறுதலாக செய்த காரியத்தை சொல்லி தலைகுனிந்து நின்றான்
கண்ணில்லா அத்தம்பதிகள் தங்கள் மகன் நிலை கண்டு கலங்கினர், அவன் உடலை தடவி தடவி அழுதனர், அங்கே தைக்கபட்டிருந்த அம்பினை தடவியவர்கள் அதை தசரதனையே உருவி எடுக்க சொன்னார்கள், தங்கள் மகனின் உடலில் இருக்கும் அம்பு தங்கள் இதயம் மேல் தைத்ததாக நினைந்து அழுது சொன்னார்கள்
தசரதன் கலங்கியபடியே நடுங்கும் கரங்களுடன் அந்த அம்பை உருவினான், அச்சிறுவன் அக்கணமே இறந்துபோனான், தன் மகன அறிந்தான் என்பதை அவன் தொங்கிபோன தலையினை தொட்டு அறிந்த அவனின் தகப்பன் கைநிறைய மகனின் ரத்தத்தோடு தசரதனுக்கு சாபமிட்டார்
"அரசனே, நான் இந்த முதிர்காலத்தில் என் மகனை இழந்து தவிப்பது போல் நீயும் முதிர்ந்த வயதில் இதே துன்பத்தை உன் மகனை இழந்து அடைவாய், இது நடந்தே தீரும்" என மகனின் ரத்தத்தோடு சாபமிட்டான், தன்னை மிதித்தவனை நாகம் வேகமாக சீறி கடித்து வாயின் விஷத்தினை இறக்குவதுபோல் அவன் தன் வாயால் சாபமிட்டான்
அதனை ஏற்றுகொள்வது போல் மவுனமாக தலையசைத்த தசரதன் மெல்ல சொன்னான்
"முனிவ, நான் இன்னும் என் மகனின் முகத்தை கண்டவனில்லை, பிள்ளையற்றவன் நான். உம் சாபம் பலிக்கவேண்டுமானால் எனக்கோர் மகன் பிறக்கவேண்டும், இதனால் உமது சாபத்தால் எனக்கு அனுக்கிரகமும் அருளியுள்ளீர்கள் முனிவர் வாய்க்கு பொய்க்காது
எம் நாட்டில் விவசாயிகள் துரும்புகள் சிறு விறகுகள் கூட்டி நெருப்பால் எரித்து நிலத்தை முதலில் நன்றாக சுடுவர், அதன் பின் உழுது விதைகலை விதைப்பார்கள், நெருப்பால் சுட்பட்ட நிலம் பெரும் விளைச்சலை கொடுக்கும். நெருப்பால் வதைபடும் நிலம் பின்னர் நல்ல விளைச்சலை கொடுப்பது போல் உங்களின் சாபம் எனக்கு வலிக்கு பின் மிகுந்த நன்மையே தரும்
நான் செய்தது பெரும் குற்றம் , இங்கு நான் அரசனல்ல குற்றவாளி எனக்கு தீர்ப்பிடும் இடத்தில் நீங்களே இருக்கின்றீர்கள், இப்போது நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள்தான் சொல்லவேண்டும், புத்திரசோகத்தில் இருப்போர் சொல்வது எதுவாயினும் அதற்கு நான் கீழ்படிவேன்" என்றான்
அம்முனிவரோ "உமக்கு நான் சாபம் கொடுத்தபின் அதைவிட வேறு எதுவும் நான் சொல்லவேண்டியதில்லை, நானும் என் மனைவியும் எம் மகனற்ற உலகில் இருக்கமாட்டோம் , எங்களை எம் மகனுடன் நெருப்பில் ஏற்ற உதவும்" என மட்டும் சொன்னார்
அப்போது தசரதனை தேடிவந்த வீரர்கள் அங்கு வந்தனர், அவர்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது, தசரதனும் சொல்லவில்லை முனிவர்களும் சொல்லவில்லை, தசரதன் முனிவர் வேண்டிய சிதையினை செய்ய வீரர்களுக்கு கட்டளையிட்டான், அவர்கள் விறகுகளை குவித்து சிதை செய்தார்கள், மகனை எரிக்கும் நெருப்பில் முனிவர் தன் மனைவியோடு ஏறி நெருப்பில் கரைந்தார்
தசரதன் எரியும் நெருப்பை பார்த்து கொண்டே இருந்தான், அது சிதையில் மூவரையும் எரித்து முடித்தபின் அவன் நெஞ்சில் குடிகொண்டது
தான் பெற்ற சாபத்துக்கு தான் ஒன்றே சாட்சியான தசரதன் யாரிடமும் எதுவும் கூறாமல் நகருக்கு திரும்பினான், வடவாக்னி நெருப்பை தன் அடியில் கொண்ட கடல் போல் அச்சாபத்தை தனக்குள் மறைத்தபடி அவன் அரசாட்சி செய்து வந்தான்
அந்த சாபம் பெற்று பதினாறாயிரம் ஆண்டுகள் வரை அவன் குழந்தையின்றி இருந்தான், இந்திரனை போல் ஒளிர்பவனும் குபேரன் போல் செல்வம் கொண்டவனுமான அவன் வாரிசு செல்வம் இல்லாமல் வாடிகிடந்தான்
ஒவ்வொரு மனிதனும் தேவர் கடன், ரிஷிகடன், பித்ருகடன் எனும் மூவகை கடனோடு பிறக்கின்றான், தேவர்களுக்கான கடனை யாகங்களாலும் , ரிஷிகளுக்கான கடனை பணிவிடைகள் பூஜைகளாலும் தீர்க்க வேண்டும், அப்படியே பித்ரு கடன் எனும் முன்னோர் கடனை சரியாக செய்ய தனக்கு பின் ஒரு வாரிசு அவனுக்கு வேண்டும்
முதல் இரு கடன்களை சரியாக தீர்த்து வந்த தசரதன் பித்ருகடனை தீர்க்க ஒரு வாரிசு இல்லையே என கலங்கி நின்றான்
அவன் நிலை அறிந்த முனிவர் சிலர் அவனுக்கு ஆலோசனை சொன்னார்கள் "மன்னா ஒரு காரியம் நடக்கவேண்டி ஒரு காரியம் தாமதிக்கும் இது நியதி, பாற்கடலுக்குள் ரத்தினங்களும் பெரும் செல்வமும் இருந்தது ஆனால் அக்கடல் கடையபடும் வரை அவை இருந்தது யாருக்கும் தெரியாது
அம்மலை கடையபட்டும் காரியம் நடந்தபின்பே அச்செல்வங்கள் வெளி வந்த காரியமும் நடந்தது, அக்கடல் கடையபட வேண்டும் எனும் காரணமே அங்கு காரியமாயிற்று
அவ்வாறே பெரும் யாகம் ஒன்று நடக்க வேண்டும் அதன் பின்பே மன்னனுக்கு வாரிசு வரவேண்டும் என்பதும் விதிக்கபட்டது, பெரிய யாகத்தை மன்னன் செய்யும்படியே வாரிசு இன்னும் வெளிவராத காரியமும் தொடர்கின்றது" என்றார்கள்

No comments:
Post a Comment