தந்தை சிவபெருமான் என்ற இருவாச்சி பறவை...
சோலை வனங்களில் வசிக்கும் இருவாச்சி எனும் இருவாய்ச்சி பறவை தந்தை சிவபெருமானை போல சிறப்பு இயல்புகளை கொண்டது. தனது வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு துணையுடன் வாழ்ந்து தனது காலத்தை முடித்து விடும் இந்த இருவாச்சி பறவை. இந்த இருவாச்சி பறவையின் வாழ்வை போல, கல்பத்தில் ஒருமுறை ஜோதியாக வரும் தந்தை ஈசன் தாய் பிரம்மாவுடன் இணைந்து தனது ஆத்ம குழந்தைகளுக்கான பாதுகாப்பை அளித்து அவர்களை உருவாக்கி பரப்பிரம்மம் எனும் பரந்தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார் என்பது ஒரு அதிசயக்கத்தக்க உண்மை. 5000ம் வருடங்களுக்கு ஒருமுறை ஜோதியாக உலகத்திற்கு வரும் தந்தை சிவபெருமான் தனக்கு உடல் இல்லாத காரணத்தினால் ஒரு வயதான மானுட உடலை ஆதாரமாக எடுத்து அதன் இரு புருவ மத்தியில் அமர்ந்து ஞானத்தை வழங்குகின்றார். அந்த வயதான மானுட உடலில் வசிக்கும் ஆன்மாவிற்கு பிரம்மா என்று பெயர் இடுகின்றார். தனது பாகம் பூமியில் முடியும் வரை தனது துணையாக இருக்கும் ஜீவாத்மாவாகிய பிரம்மாவை தனது மனைவியாக கருதி அவர் வாயின் மூலம் படைக்கப்படும் ஞானத்தின் படைப்புக்களை தனது குழந்தைகளாக ஏற்று அவர்களை இந்த சிருஷ்டியின் இறுதியில் வளர்ப்பு செய்கின்றார். இருவாச்சி என்றால் இரு வாயை உடையது என்பது அர்த்தமாகும். அதாவது யார் அந்த உடலை ஆதாரமாக எடுத்தாரோ அந்த தந்தை சிவபெருமானின் வாய், இரண்டாவதாக அந்த உடலில் வசிக்கும் ஆன்மாவாகிய தந்தை பிரம்மாவின் வாய். ஆக, இருவாய்ச்சி ஆகிவிட்டது. ஒரு வாயாக இருந்தாலும் இருவரும் பேசுவதால் அது இருவாய்ச்சி. அந்தப் பறவையை பார்க்கும் பொழுது அதற்கு மேலே ஒரு வாய் இருப்பதாகவும் கீழே இருக்கும் அலகு ஒரு வாயாக தென்படும். ஆணும் பெண்ணும் துணையாக இறுதி வரை இருவாச்சி பறவைகள் பிரிவதே இல்லை. அதன் இனப்பெருக்க காலத்தில் மரத்தில் கூடுகட்டும் அந்த பறவை, பெண் பறவை மட்டும் கூட்டின் உள்ளே இருந்து கொண்டு அதன் அலகு மட்டும் வெளியே தெரியுமாறு சுற்றிலும் களிமண்ணை வைத்து அடைத்துவிடும். பெண் பறவையானது உள்ளே அடைகாக்கும். அதன் குஞ்சுகள் பொறித்து வெளிவரும் வரை அது தனது இறகுகளை உதிர்த்து உள்ளேயே உணவுக்காக காத்திருக்கும். இது போல தான் நம் தந்தை சிவபெருமானும் பூமிக்கு வரும் வரை சிருஷ்டியின் ஆரம்பத்திலிருந்து
ஒவ்வொரு பிறவியாக எடுத்து பிறவி எனும் இறகுகளை உதிர்த்து ஞானம் எதுவும் இன்றி ஆன்மாவானது உலக பந்தனங்கள் என்ற வாழ்க்கையை பூமியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்னதான் உலகியலான வாழ்க்கை வாழ்ந்தாலும் அது தனது மேலான பதி பரமேஸ்வரனை நம்பி நம்மை இந்த உலக பந்தங்களில் இருந்து விடுவித்து கூட்டிச் செல்வார் என்று காத்துக் கொண்டிருக்கின்றது. உடலற்ற தந்தை ஜோதியான இறைவன் சிவனும் அந்த பிரம்மா என்ற தாயின் மூலமாக குழந்தைகளாகிய நமக்கு வேண்டிய உணவை இந்த உலகம் என்ற கூட்டுக்குள் இருக்கும் நமக்கு மறைமுகமாக
கொண்டு வந்து சேர்க்கின்றார். கூட்டின் உள்ளே இருக்கும் அந்த பிரம்மா என்ற தாய்
அதன் குழந்தைகளான நமக்கு அவர் வழங்கிய அந்த ஞானம் என்ற உணவை பகிர்ந்து அளிக்கின்றது. நாமும் தினம் தினம் ஞானத்தின் உணவால் வளர்ந்து சிறகுகள் வளரப் பெற்று பறக்கும் நிலையை அடையும் பொழுது, தந்தை சிவபெருமான் அந்த மாயை என்ற கூட்டை உடைத்து தாயான பிரம்மா என்ற பறவையையும், அதன் குழந்தைகளாகிய நம்மையும் தன்னுடன் பரப்பிரம்மத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அதுவரை மாயை என்ற விஷப் பாம்புகளுக்கும் தீய எண்ணம் கொண்ட பறவைகள் மற்றும் கொடூர ஜந்துக்களின் மூலம் எந்தவிதமான இடையூறும் ஏற்படாத படி பாதுகாப்பான கூண்டில் வைத்து நம்மை பாதுகாக்கின்றார். ஒருவேளை உலகியலான இருவாச்சி பறவை உணவு தேடும் பொழுது வேடன் கையில் அகப்பட்டாலும் அல்லது பல விஷ ஜந்துக்களாலும் இயற்கையின் இடையூறுகளாலும் அது தன் இன்னுயிரை இழக்கலாம். அதற்காக கூட்டில் காத்துக் கொண்டிருக்கும் அந்த பெண் பறவை அந்த ஆண் பறவை வரும் வரும் என்று எதிர்பார்த்து
ஒரு நாள் தன் குழந்தைகளுடன் பசியும் பட்டினியமாக வேதனையில் இறந்து போகும். ஆனால் நாம் நம்பி இருக்கும் பறவை தந்தை ஜோதியான சிவபெருமானோ உலகையே கட்டிக் காக்கும் பறவை. அவர் தன் மனைவி குழந்தைகளை மட்டுமல்ல உலகை இரட்சித்துக் காக்கும்வல்லமை பொருந்தியவர். அந்தத் தந்தையின் வருகைக்காகத் தான் இந்த சிருஷ்டியில் பிரம்மா என்ற தாயுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருந்தோம். பிரம்மாவின் பகல் முடிந்து பிரம்மாவின் இரவு ஆரம்பித்து அந்த இரவு முடியும் பொழுது அந்த மேலான பரம தந்தை சிவபெருமான் என்ற இருவாச்சி பறவை இப்பொழுது இந்த உலகத்திற்கு வந்து தனது அலகுகளின் மூலம் பிரம்மா என்ற தாய்ப்பறவையின் வாயிலாக நம்மை மட்டும் அல்ல முழு உலகத்திற்கும் முக்தியை வழங்குவதற்காகவும் ஜீவன் முக்தியை வழங்குவதற்காகவும் வருகை தந்துள்ளது. அந்த இராஜ பறவையின் அறிமுகத்தை அடைவது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். நேரத்தின் மதிப்பை உணர்ந்து ஆத்மாக்கள் நம் அனைவரும் அந்த பரமாத்மா தந்தை சிவபெருமான் என்ற இருவாச்சி பறவையின் உடன் சேர்ந்து தாயின் ரூபத்தில் இருக்கும் பிரம்மா என்ற இருவாச்சி பறவையுடனும் பறந்து செல்வதற்கு இப்பொழுது குட்டி இருவாச்சி பறவைகள் நாம் அனைவரும் தயாராக வேண்டும் என்பதே இப்போதைய உலகிற்கு வழங்கப்படும் சுபமான செய்தி. நல்லது. வாழ்த்துக்கள்.ஓம் சாந்தி. பரமாத்மா தந்தை சிவபெருமான் ஆத்மாக்களாகிய நாமனைவருக்கும் வழங்கிய இராஜயோகத்தை எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக அருகிலுள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தில் கற்று மகிழ்வோம். நல்லது. வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment