Thursday, 15 January 2026

ஏன் சூரியனை வணங்குகின்றோம்?


 ஏன் சூரியனை வணங்குகின்றோம்?

“சூரியன் என்பது ஓர் உயிரற்ற அக்னி பந்து.அதை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?”என்று சிலர் நம்மை பார்த்து கேட்கிறார்கள்.அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.நாம் வெறும் சூரியனை
வணங்கவில்லை.அந்த கதிரவனின் உள்ளிருந்து அதை இயக்கும் பரம்பொருளான இறைவனை தான் நாம் தொழுகிறோம்.யஜுர் வேதம் (சதருத்ரீயம்) கூறுகிறது:
அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: 1.7
சூர்ய மண்டலத்தில் ஆதித்ய ஸ்வரூபத்தில் திகழும் சிவபெருமான் உதிக்கும் பொது தாமிரத்தை ஒத்த கருங்சிவப்பாகவும்,உதித்த பின்பு சற்று சிவப்பாகவும் பின்பு தங்க மஞ்சள் நிறமாகவும் காட்சியளிக்கிறான்.
(சூர்ய உபஸ்தானம் இந்த மந்திரத்துடன் செய்யப்பட வேண்டும் என்கிறது சுக்ல யஜுர் வேதத்தின் சதபத ப்ராஹ்மணம்.
“அஸௌ யஸ்தாம்ர”இத்யனேனா ஆதித்யமுபதிஷ்டதே
சூரியனை “அஸௌ யஸ்தாம்ர”என்னும் மந்திரத்தால் பூஜிக்க வேண்டும்.)
அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம்
கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா
பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந: 1.8
எவர் நீலநிற கழுத்துடன்(நீலக்ரீவ) திகழ்கிறாரோ அவரே இந்த சிவந்த வர்ணமுடைய சூரியனாககீழ்நோக்கி நகர்கின்றார் (அஸ்தமன சமயத்தில்). .
சூர்ய வடிவில் காட்சி தரும் இந்த சிவனை இடையர்களும் தண்ணீர் கொண்டு வரும் பெண்களும் கூட தரிசிக்கிறார்கள்;மற்றும் உலகத்தில் உள்ள எல்லா பிராணிகளும் அவரை தரிசிக்கின்றனர்.அங்ஙனம் தரிசிக்க பெற்ற ஆதித்ய ரூபியான இந்த ஈசன் நம்மை இன்புற செய்யட்டும்.
ஏன் ஈசன் சூரியனாக தோன்றவேண்டும்?தேவர்களாலும் முனிவர்களாலும் கோடி யுகங்கள் தவம் செய்தலும் காணமுடியாத பரமகருணை கடலான சிவபெருமான் எவ்வித வேத ஸம்ஸ்காரமும் கல்வி அறிவும் இல்லாத பாமரர்களான இடையர்கள் முதற்கொண்டு இந்த உலகத்தில் உள்ள அணைத்து ஜீவராசிகளும்,ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் உட்பட அனைவரும் தன்னை தரிசிக்க வேண்டும் என்ற எல்லையற்ற அன்பினாலே சூரியனாக அவன் சுடர்விடுகிறான் என்பதைத்தான் மேற்கண்ட வேத மந்திரம் விவரிக்கிறது என்கிறார் சாயணாச்சார்யார் தமது பாஷ்யத்தில்-உதாபி ச கோபா வேத ஷாஸ்த்ரஸம்ஸ்காரரஹிதா கோபாலா
அப்யேநம் மண்டலவர்தினம் ஆதித்யரூபிணம் ருத்ரமத்ரிஷன்பஷ்யந்தி...சர்வே’பி ப்ராணினா:பஷ்யந்தி/ஸர்வேஷாம் தர்ஷனார்த்தமேவ ஹி ருத்ரஸ்யாதித்யமூர்த்திதாரணம்/
ஈசனின் பார்வையில் அனைத்து உயிரும் ஒன்றே ;அவனுக்கு எவ்வித பேதமும் கிடையாது என்பதற்கு அவன் சூரியனாக தோன்றுவதே சிறந்த அத்தாட்சி.ஈசனின் பெருமையை புரிந்துகொள்வதில் நாம் அனைவரும் பாமரரான இடையர்களை ஒத்தவர்கள் என்கிறார் இன்னொரு பாஷ்யகாரரான பட்ட பாஸ்கரர்.
சூரியன் என்பது சிவபெருமானின் எட்டு வடிவங்களில் (அஷ்டமூர்த்தம்)ஒன்றாகும்.
ஆதித்ய புராணம் கூறுகிறது:
சௌரமண்டல மத்யஸ்தம் சாம்பம் சம்சாரபேஷஜாம் /நீலக்ரீவம் விருபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்//
நீலநிறமுடைய கழுத்துடன் மூன்று விழிகளோடு
சூர்யமண்டலத்தின் நடுவில் சம்சாரம் என்னும் பிணிக்கு மருந்தான சிவபிரான் அம்பிகையோடு வீற்றருளுகிறான்.அவனுக்கு நமஸ்காரம்.
வால்மீகி ராமாயணத்தில்,ராவணனை வெல்ல, அகஸ்த்யரின் உபதேசத்தின் பெயரில், ஸ்ரீ ராமன் சூர்ய வடிவில் திகழும் சிவனை “ஆதித்ய
ஹ்ருதயம்” என்ற ஸ்தோத்ரத்தால் வழிபடுகிறார்:
ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே |
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே னமஃ || 19 ||
பிரம்மா,ருத்ரன்,விஷ்ணு என்ற மும்மூர்த்திக்கும் தலைவனும் , ஆதித்யனான உன்னுடைய மகிமையால் ப்ரளயகாலத்தில் அனைத்தும் உண்பவருமான ருத்ரனின் வடிவே போற்றி!
மஹாபாரதம் (சாந்தி பார்வை,285 ) சூரியனை சிவ ஸ்வரூபம் என்கிறது.மேலும்,சூரியனை வணங்குபவர்கள் சிவனை தான் உண்மையில் வணங்குகிறார்கள் என்கிறது.
இதையே அப்பர்
அருக்கன் பாதம் வணங்குவோர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ
என்று அருளியுள்ளார்.
வைஷ்ணவ புராணமான கருட புராணம் (23 ,6 ஆசார கண்டம்)சூரியனை சிவவடிவம் என்றும் சூரியனை சிவசூர்யாய
நமஹ:என்ற மந்திரத்தால் பூஜிக்கும் முறையை விரிவாக பேசுகிறது.
பத்ம புராணம்- (இன்னொரு வைஷ்ணவ புராணம்
5 , 24 ,687 சிவன்தான் சூர்யன் என்கிறது).மேலும் சூரியனை “ருத்ரவபூஷே” -சிவனின் திருமேனி என்கிறது.
காமிக ஆகமம் சிவனுக்கும் சூரியனுக்கும் எந்த
வித பேதமும் கிடையாது என்கிறது(உமாபதி ரவேர்வபி ந பேதோ த்ருஷ்யதே க்வசித் )
சிருஷ்டியின் ஆரம்பத்தில் , சிவபெருமான் சூர்ய
மண்டலத்தில் அமர்ந்த திருக்கோலத்துடன் தேவர்களுக்கு காட்சி தந்து அவர்களுக்கு ஆகமங்களை உபதேசித்தார்:
அஷ்ட பாஹும் சதுர்வக்த்ரம் அர்த்தநாரிக்கமத்புதம் /
த்ருஷ்டியைவ மத்புதாகாரம் தேவா விஷ்ணு புரோகம://
புத்வ திவாகாரம் தேவம் தேவீம் சைவ நிசாகரம்/
சூர்யமண்டலத்தில் அமர்ந்திருந்த ஈசனுக்கு எட்டு கரங்களும் நான்கு முகங்களும் இருந்தன.அவரின் திருமேனியின் பாதியில் உமையவள் விற்றிருந்தால்.இந்த அத்புதமான திருக்காட்சியை கண்ட விஷ்ணு முதலிய தேவர்கள் சிவனே சூரியனாகவும் தேவியே நிலவாகவும் அருளுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டார்கல்.
/ 7.2,8.30 சிவமஹா புராணம்
சூரியனாக இருந்து உலகிற்கே ஒளியும் ஆற்றலும் அருளுகிறார் ஈசன். சூரியன் இல்லமால் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லாமால் உணவே இல்லை.நம் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாக திகழும் சூர்ய வடிவினனான ஈசனை வணங்குகிறோம்.

No comments:

Post a Comment

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...