ஜோதிடத்தில் கால தேச வர்த்தமான யுக்தி ச்ருதி ஸ்மிருதி நிறபேதம்!
இறைநம்பிக்கையும் ஆழ்ந்த ஈடுபாடும் ஜோதிட பலன் சொல்வதில் முழுமையான வெற்றியை தரும்.
ஜோதிடம் என்பது வானமண்டலத்தில் கோள்களின் இயக்கம் அதற்கு பின்ணணியாக உள்ள நட்சத்திரங்கள் ராசிகள் இவற்றை அடிப்படையாக கொண்டது
ராசிகள் நட்சத்திரங்கள் இவற்றின் இருப்பிடங்கள் நம்முன்னோர்களால் கணிதரீதியாக பெரும்பாலும் மிகச்சரியாகவே கணக்கிடப்பட்டு சொல்லப்பட்டிருக்கின்றன.
கோள்களின் இயக்கங்களையும் சரியாகவே கணக்கிட்டுள்ளனர்
மேற்படி இரண்டு விஷயங்களுக்கும் விஞ்ஞான அடிப்படை உண்டு என்பதை உறுதியாக ஏற்கலாம்
அதேசமயம் பலன்கள் சொல்வது என்பது விஞ்ஞான அடிப்படைக்குள் வராது
பலன்கள் என்பவை ராசிகள் நட்சத்திரங்கள் கோள்கள் இவற்றுக்கு நம்முன்னோர்கள் கற்பித்த காரகங்கள் அடிப்படையிலானவை.
ஆக ஜோதிடம் என்பது நமது முன்னோர்கள் தங்கள் அனுபவத்தால் அறிந்து அனுபவித்த உண்மைகளின் தொகுப்பே தவிர விஞ்ஞானபூர்வமானது அல்ல.
சரி! விஷயத்துக்கு வருவோம். காலதேச வர்த்தமான யுக்தி ச்ருதி ஸ்மிருதி நிறபேதம் என்பதை ஜோதிடத்தில் எவ்வாறு பயன்பாட்டுக்கு வருகிறது என்பதை பார்ப்போம்.
காலம்:
சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாக இடம்பெயர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாத சூரியனுக்கும் தனித்தனியே பெயர்கள் உண்டு. மேலும் அந்த ஒவ்வொரு பெயருடைய சூரியனுக்கும் தனித்தனி குணாதிசயங்கள்/காரகங்கள் உண்டு
மேற்படி குணாதிசய /காரகங்களையும் ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ள காலத்தில் சூரியன் செயல்படுத்துவார்/தருவார்.
அதாவது ஆறு ருதுக்களின் காலத்தின் அடிப்படையில் தனது பன்னிரண்டு விதமான பலன்களை சூரியன் வெளிப்படுத்துவார் என்பதே காலம் அறிந்து சொல்லல் என்பது.
தேசம்:
தேசம் என்ற சொல்லுக்கு இடம் என்றும் ராசி என்றும் பொருள். பழங்கால இந்தியா 56 தேசங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு தேசமும் கோள்களின் இணைவுகளால் ஆனவை.இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள பழங்கால நூலான வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதை மற்றும் வீமகவி சினேந்திரமாலை சூடாமணி உள்ளமுடையான் போன்ற நூல்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆக எந்த தேசத்தில் எந்த கோளின் ஆதிக்கம் அல்லது கோள்களின் ஆதிக்கம் மிகுந்துள்ளது என்பதை அறிந்து அவற்றின் காரகங்களின் தன்மையின் அடிப்படையில் பலன்களை சொல்ல வேண்டும் என்பதே தேசத்தின் முக்கியத்துமாகும்.
வர்த்தமானம்:
ஒவ்வொரு தேசத்திலும் வாழும் மக்களிடமும் ஆங்காங்கே உள்ள கோள்களின் ஆதிக்கத்தின் தன்மையில் சடங்குகள் சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் போன்றவை நடைமுறையில் இருக்கும்.அவற்றை நன்கு அறிந்து அவற்றின் அடிப்படையிலேயே பலன்கள் சொல்லப்பட வேண்டும்.
யுக்தி:
எந்தவொரு விஷயத்தையும் அணுக யுக்தி வேண்டும். யுக்தி நான்கு வகைப்படும். சாம தான பேத தண்ட என நால்வகை யுக்திகளை கொண்டே எந்தவொரு விஷயமும் அணுகப்படும்
ஒருவரை போற்றுதல் செய்வது சாம யுக்தி
போற்றுதலுக்கு மயங்காதவரை தான யுக்தி அதாவது பொருளை கொடுத்து சரிசெய்தல். இது இரண்டாவது யுக்தி
தானத்துக்கும் மயங்காதவரை பேத யுக்தி கொண்டு பலவீனப்படுத்துதல்.அதாவது அவரது பலவீனங்களை அறிந்து அவரின் பலத்தை குறைத்தல்
பேதயுக்திக்கும் கட்டுப்படாதவரை தண்டயுக்தி கொண்டு சரி செய்தல்.அதாவது மந்திர தந்திரங்கள் பலப்பிரயோகம் செய்தல்.
இந்த நான்கு விதமான யுக்திகளையும் ஒரு ஜோதிடர் அறிந்து இருக்க வேண்டும்.
ச்ருதி:
வேதங்கள் புராணங்கள் இவற்றில் சொல்லப்பட்டவை அதாவது மூலநூல்களில் சொல்லப்பட்டவையெல்லாம் ச்ருதி எனப்படும்.
இவற்றை ஒரு ஜோதிடர் நன்கு கற்று அறிந்து இருக்கவேண்டும்
ஸ்மிருதி:
ச்ருதிகளில் சொல்லப்பட்டனவற்றுக்கு வியாக்கியானங்கள் பாஷ்யங்கள் அதாவது உரைகள் பல ஆச்சாரியார்களால் சொல்லப்பட்டு அவை மக்கள் அனுசரிக்க தர்மசாஸ்திரங்களாக கூறப்பட்டு இருக்கும்
இவற்றையும் ஜோதிடர் நன்கு அறிந்து அவை பயன்பாட்டில் உள்ள இடங்களுக்கு ஏற்ப பலன்களை சொல்ல வேண்டும்
நிறபேதம்:
கோள்கள் ராசிகளில் சஞ்சரிக்கும்போது சுவர்ணமூர்த்தி(பொன்னிறம்) ரஜதமூர்த்தி(வெள்ளி நிறம்) தாமிரமூர்த்தி(பித்தளை நிறம்) இரும்புமூர்த்தி(கருப்பு நிறம்) என நான்குவிதமான நிறபேதங்களை அடைவார்கள். இவற்றின் அடிப்படையிலும் ஜோதிடர் பலன்களை வகுத்து உரைக்க வேண்டும்.
ஆக காலதேசவர்த்தமான யுக்தி ச்ருதி ஸ்மிருதி நிறபேதம் என்பது ஜோதிட பலன் உரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

No comments:
Post a Comment