மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் *மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்*
மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்.
மோகினி அவதாரம் எடுத்த திருமால், தன்னுருவம் பெற வழிபட்ட தலம், அனுமனும், சிங்கியும் இசை எழுப்ப சிவபெருமான் ஆடி மகிழ்ந்த அற்புத ஆலயம், வீணை தாங்கிய அனுமன் வீற்றிருக்கும் திருக்கோவில், இசைத்துறையில் புகழ்பெற உதவும் திருத்தலம், மூல நட்சத்திரக்காரர்கள் குறை நீக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்.
தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அமிர்தத்தை தேவர் களுக்கும், அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக திருமால், மோகினி வடிவம் எடுத்தார். பின்னர் தன்னுடைய மெய்யான திருமால் வடிவத்தைப் பெறுவதற்காக அவர் வழிபட்ட தலம் இது என்பதால் ‘மெய்ப்பேடு’ என்று பெயர் பெற்றது. மெய்- உண்மை, பேடு- பெண். இந்த மெய்ப்பேடு என்பதே காலப்போக்கில் மருவி ‘மப்பேடு’ என்றானதாக கூறப்படுகிறது.
திருவாலங்காட்டில் சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது மிருதங்கம் வாசித்த ‘சிங்கி’ என்பவர் சிவபெருமானின் நடனத்தைக் காணாமல், இசைப்பதிலேயே கவனமாக இருந்தார். எம்பெருமானார் நடனத்தைக் காணமுடியவில்லையே என்று எண்ணி வருந்தியபோது, அன்றிரவு அவர் கனவில் தோன்றிய இறைவன், ‘மெய்ப்பேடு திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் மீண்டும் எனது காட்சியைக் காணலாம்’ என்றார். அதன்படி, மெய்ப்பேடு சென்ற சிங்கிக்கு, சிவபெருமான் நடனமாடி காட்சிதந்தார். இதனால் இத்தலத்து இறைவன், ‘சிங்கி + ஈஸ்வரன் = சிங்கீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
சுவாமியின் சன்னிதிக்கு வலதுபுறம் அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. நறுமணம் மிகுந்த மலருக்கு உரியவள் என்ற பொருளில் ‘ஸ்ரீ புஷ்பகுஜாம்பாள்’ என்ற திருநாமத்துடன் அன்னை காட்சி தருகின்றாள். இவளே பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றாள். சதுரமான கருவறையில் நின்றகோலத்தில் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருளாசி வழங்குகிறாள், இந்த அன்னை.
கருவறை முன் உள்ள அர்த்தமண்டபம் இரு வரிசையில் நான்கு தூண்கள், முன் மண்டபம் பன்னிரண்டு தூண்கள் தாங்கி நிற்கின்றது. இத்துடன் விஜயநகர கால பூ வேலைப்பாடுகள், இறை உருவங்கள், விலங்குகள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தல தீர்த்தமாக வெண் தாமரைக் குளமும் உள்ளன. ஆலயத்தில் உள்ள நந்தி மண்டபத்தின் முன்பாக, நவ வியாகரணக் கல் என்னும் சிறிய கருங்கல் ஒன்று காணப்படுகிறது. தீராத மூட்டு வலி உள்ளவர்கள், மருத்துவம் பார்ப்பதோடு நில்லாமல், இந்தக் கல்லின் மீது நம்பிக்கையோடு ஏறி நின்று நந்தியையும், இறைவனையும் மனமுருகி வேண்டிக் கொண்டால், வலியின் தாக்கம் படிப்படியாக குறையும் என்கிறார்கள். இந்த வழிபாட்டை பிரதோஷம் மற்றும் கார்த்திகை சோம வாரங்களில் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்கள், பலன் பெற்ற பக்தர்கள்.
வீணை ஆஞ்சநேயர் :
சிவபெருமான் திருநடனம் புரிந்த இந்த ஆலயத்தில், ஈசனின் நடனத்திற்கு ஆஞ்சநேயர் வீணை இசைத்ததாக கூறப்படுகிறது. ஆஞ்சநேயர், விரபாலீஸ்வரர் சன்னிதியின் எதிரில் நின்று வீணையை இசைத்து சிவபெருமானின் அருளைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அதே போல் வீணையை கையில் ஏந்தியிருக்கும் கலைமகளான சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர். எனவே இத்தலத்தில் வீணையுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வணங்கினால், இசைத்துறையில் சங்கீத சக்ரவர்த்தியாகலாம் என்றும், இத்தலம் மூல நட்சத்திரம் உள்ள வர்களின் குறைகளை நீக்கும் தலம் என்றும் பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மப்பேடு திருத்தலம். பூந்தமல்லியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும், காஞ்சீபுரத்தில் இருந்து 41 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும் புதூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலம் இருக் கிறது

No comments:
Post a Comment