நாரதரின் கர்வத்தை அடக்கிய நாராயணர்....
நாரதர் "நாராயணா நாராயணா" என்று சொல்லிக் கொண்டே வைகுண்டத்திற்குள் நுழைந்தார். அப்போது எம்பெருமான் விஷ்ணுவோ அதைக் கவனிக்காமல் தன்னை எண்ணி வணங்கும் ஒரு ஏழை மனிதருக்கு ஆசிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்த மனிதர் காலை எழுந்ததும் ஒரு முறை.. இரவு படுக்கப் போகும் முன் ஒரு முறை "நாராயணா" என்று சொல்லி வருபவர். இதை நாரதரும் கவனித்திருக்கிறார்.
'நாராயணா நாராயணா' என்று நம்மைப் போல் வேறு யாரும் நாராயணன் பேரை இவ்வளவு உச்சாடனம் பண்ணுவதில்லை என்று நாரதருக்கு ஒரு கர்வமும் இருந்தது.
இதை எம்பெருமானும் கவனித்துக் கொண்டே வருகிறார். நான் "நாராயணா நாராயணா" என்று நொடிப் பொழுதும் விடாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்..
ஆனால், நீங்களோ காலை மற்றும் இரவு ஒரேயொரு முறை நாராயணா என்று சொல்பவனுக்கு ஆசிகள் வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.. நான் வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை, என்று ரொம்பக் கோபப்பட்டார் நாரதர். நாரதருக்குத் தக்க தருணத்தில் பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நாராயணர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தீர்மானிக்கிறார்.
அதனால் எம்பெருமான் நாராயணன் புன்சிரிப்புடன் எண்ணெய் நிரம்பிய ஒரு கிண்ணத்தை நாரதர் கையில் கொடுத்தார். இந்தக் கிண்ணத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, ஒரு துளி எண்ணெய் கூடச் சிந்தாமல் ஒருமுறை உலகை வலம் வந்து காட்டு என்கிறார். நாரதரும் இதென்ன பெரிய வேலை? என்று மனதில் நினைத்துக் கொண்டு கிளம்புகிறார்.
ஆனால் உலகை வலம் வரத் தொடங்கிய போது தான் எண்ணெய் தளும்புவதைப் பார்த்துத் திகைக்கத் தொடங்குகிறார்.. துளி கூடச் சிந்தக் கூடாது என்பதல்லவா இறைவனின் நிபந்தனை? மெதுவாக வலம் வந்து முடித்து நாரணன் முன் வந்து நிற்கிறார். புன்னகையுடன் எம்பெருமான் கேட்கிறார் - "நாரதா, இந்த எண்ணெய்க் கிண்ணத்துடன் வலம் வரும் போது எத்தனை முறை என் பெயரை உச்சரித்தாய்?
எங்கே உங்கள் பெயரை உச்சரிப்பது? நீங்கள் தான் எண்ணெய் துளியும் சிந்தக் கூடாது என்று நிபந்தனை விதித்து விட்டீரே? அதனால் எண்ணெய் தளும்பிச் சிந்தாமல் இருக்கிறதா என்று பார்ப்பதிலேயே என் கவனம் முழுவதும் இருந்து விட்டது என்று பாதி கோபமும் பாதி பெருமையுமாகச் சொன்னார் நாரதர்.
எம்பெருமான் வாய் விட்டுச் சிரித்தார்.
எண்ணெய் நிரம்பிய ஒரேயொரு கிண்ணம் உன் கவனத்தை மாற்றி விட்டது பார்.. என் பெயரைச் சொல்ல விடாமல் உன் கவனத்தைச் சிதறடித்து விட்டது பார்..
அந்த மனிதனோ மிகச் சாதாரணமானவன். மிகவும் கொஞ்சமே கொஞ்சம் நிலம் வைத்து.. அதில் வேலை செய்து.. தன் குடும்பம் உற்றார் சுற்றம்.. மாடு கன்றுகள் என்று தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் பராமரிப்பவன்... பல்வேறு கடமைகளை அவன் நிறைவேற்ற வேண்டும்..
அவனால் காலை மற்றும் இரவு என்று இரண்டே இரண்டு முறை மட்டுமே என் பெயரைச் சொல்ல முடிகிறது.. அதுவும் ஒரேயொரு முறை.. ஆனால் கர்வம் ஏதுமின்றி மனதார என் பெயரை உச்சரிக்கிறான். அவனுடைய ஆத்மார்த்தமான அந்தப் பக்தி தான் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. என்று சொல்லி நாரதரை உற்று நோக்கினார்.
நாரதர் தன் தவறை உணர்ந்து.. கர்வம் மறைய எம்பெருமான் பாதம் பணிகிறார்.
பகவான் கிருஷ்ணர் கீதையில் சொன்னது....
"ஒரு பத்ரம்.. ஒரு துளி நீர் எடுத்து விட்டு.. கிருஷ்ணார்ப்பணம் என்று மனதாரச் சொல்லி இவற்றை எனக்குச் சமர்ப்பியுங்கள்.. நான் அங்கு வந்து அதைப் பூரணமாக ஏற்றுக் கொள்வேன்!"
(பத்ரம் என்றால் இலை)
இதையே நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொன்னால்…
"உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை..
உயிர்களை வதைத்து ஹோமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை..
மாதவா.. மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை.. அதுவே இறைவன் விரும்பும் மனது.
நமக்குத் தேவை உண்மையான பக்தி. உள்ளம் நிறைந்த அன்பு ஆண்டவன் மேல். அதையும் தாண்டி எந்தப் பிரச்சனையையும் தரும் அவனே அதற்கான தீர்வையும் தருவான் என்கிற ஆத்மார்த்தமான எண்ணம்.. பரிபூரண சரணாகதி.
அதற்காக பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றும் இறை அடியார்களை நாம் தவறாக எண்ணவும் கூடாது.. எண்ணவும் வேண்டாம்!
அவரவர்க்கு உகந்த முறையில் ஆண்டவனை வழிபடுவோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 

No comments:
Post a Comment