Saturday 24 March 2018

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர பரிகாரங்கள்

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர பரிகாரங்கள்

அசையா சொத்துக்களான காலி மனை, வயல் ,தோட்டம் ,வீடு ஆகியவைகளை குறிக்கும் பாவம் நான்காம் பாவமாகும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு வரவை குறிக்கும் பாவம், அந்த பாவத்திற்கு இரண்டாம் பாவமாகும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு செலவை அல்லது விரையத்தைக்குறிக்கும் பாவம், அந்த பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாகும். இதன் படி நான்காம் பாவத்திற்கு வரவை குறிக்கும் பாவம் நான்கிற்கு இரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவமாகும். நான்காம் பாவத்திற்கு விரையத்தைக் குறிக்கும் பாவம் நான்கிற்கு பன்னிரண்டாவதாக வரும் மூன்றாம் பாவமாகும்.
காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு இரண்டாமிடம் சிம்மமாகும். சிம்ம ராசிக்கு அதிபதி சூரியனாகும். சூரியன் சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். சூரியனுக்கு அதி தேவதை சிவனாகும். எனவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபட்டுவந்தால் சொத்து சேர்க்கைகள் உண்டாகும். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு இரண்டாமிடம் விருச்சிக ராசியாகும். விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாயாகும். விருச்சிகம் ஒரு நீர் ராசியாகும். செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை முருகனாகும். எனவே நீர் நிலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் சொத்துக்கள் சேரும். கடற்கரையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் திருசெந்தூராகும். அங்கு சென்று வழிபட்டு வந்தால் விரைவில் சொத்துக்கள் அமையும். மேலும் ஆயுதத்தை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும், நிலத்தைக்குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான். பரசு ராமன் தன் கையில் உள்ள கோடாரியை கடலில் வீச , அந்த கோடாரி உருவத்தில் கடல் நீர் விலகி நில பரப்பு தோன்றிய இடம் பரசுராம க்ஷேத்திரமாகும். தற்போதைய கேரளாவும்,கன்யாகுமரிப்பகுதியும் இணைந்த பகுதிக்கு பரசுராம க்ஷேத்திரம் என்று பெயர். திருவனந்தபுரம் நகரத்தில் திருவல்லம் என்னுமிடத்தில் பரசு ராமருக்கு தனிக்கோயில் உள்ளது. அங்கு சென்று வழிபட்டு வந்தாலும் விரைவில் சொத்துக்கள் அமையும்.
காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு பன்னிரண்டாமிடம் மிதுனமாகும். மிதுன ராசிக்கு அதிபதி புதனாகும். புதனுக்குரிய அதி தேவதை விஷ்ணுவாகும். விஷ்ணு அவதாரங்களில் மச்ச அவதாரத்திற்கும்,கூர்ம அவதாரதிற்கும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு தனிக்கோயில்கள் இல்லை. ஆனால் வராக மூர்த்திக்கு தனிக்கோயில்கள் உண்டு. வராகம் என்றால் பன்றி என்று பொருள். பன்றி எப்பொழுதும் சேற்று உடலோடு(மண்) காணப்படும் ஒரு மிருகமாகும். எனவே விஷ்ணு அவதாரங்களில் வராக மூர்த்தியை வழிபட சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும். மிதுன ராசியின் உருவம் இரட்டையராகும் எனவே லக்ஷ்மி வராகரை வழிபடவேண்டும். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு பன்னிரண்டாமிடம் கன்னி ராசியாகும். கன்னி ராசியின் அதிபதியும் புதன்தான். கன்னியில் புதன் உச்சமாகும். எனவே மிகவும் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள வராகப்பெருமாளை வழிபட்டாலும் சொத்துக்கள் எளிதில் விற்பனயாகும். மிகவும் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஸ்தலம் திருப்பதியாகும். எனவே திருப்பதியில் உள்ள வரகப்பெருமாளை தசித்தால் சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சிக்கு அருகில் உள்ள கீழப்பாவூர், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம், காஞ்சிபுரம், திருக்கோவிலூர், சென்னைக்கு அருகே உள்ள திருவிடந்தை, திருப்பதி ஆகிய ஊர்களில் வராகப்பெருமாளுக்கு கோயில்கள் அமைந்துள்ளன.
நான்கிற்கு ஆறாமிடம் சொத்து சம்பந்தமான சண்டை சச்சரவு மற்றும் வழக்குகளைக்குறிக்கும். காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு ஆறாமிடம் தனுசு ஆகும். தனுசு ராசியின் உருவம் வில்லாகும். கையில் வில்லேந்தியவன் ராமனாகும். பட்டத்திற்குரிய ராமன் கைகேயின் சூழ்ச்சியால் நாட்டை துறந்து காட்டிற்கு சென்று பலவிதமான பிரச்சினைகளுக்குப்பின் திரும்பவும் நாட்டை அடைந்த கதை ராமாயணம் படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். யாராவது உங்கள் சொத்துக்களை மோசடி செய்து அபகரிக்க நினைத்தால் ஸ்ரீராமனை வழிபட சொத்து மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு ஆறாமிடம் மீனராசியாகும். மீன ராசியில் புதன் நீச்சம். நீச்ச புதன் சயன கோலத்திலிருக்கும் பெருமாளைக்குறிக்கும். எனவே ஸ்ரீ ரங்க நாதரை வழிப்பட்டாலும் சொத்து மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம். வழக்கில் சிக்கியுள்ள மண்ணில் மச்ச யந்திரம் புதைத்து வைத்தால் வழக்கின் தீர்ப்பு நமக்கு சாதகமாக முடியும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...