Tuesday, 23 September 2025

மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்காக

 மகாளய


அமாவாசை அன்று முன்னோர்களுக்காக நாம் செய்யும் தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவை அவர்களின் ஆன்மாவிற்கு அமைதி, யமலோக துன்பங்களில் இருந்து விடுதலை ஆகியவற்றை அளிக்கும்.

இதனால் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடைந்து நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் மனதார வாழ்த்துவார்கள்.
இதன் காரணமாக நம்முடைய குடும்பத்தில் இருக்கும் பித்ருதோஷம், பித்ருசாபம், சுப காரிய தடைகள், பிரச்சனைகள் ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கை.
தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கியமானது பிண்ட தானம்.
மூன்று தலைமுறை முன்னோர்கள் அல்லது 21 தலைமுறை முன்னோர்களை நினைத்து அந்த எண்ணிக்கையில் கருப்பு எள், நெய், தேன் ஆகியவற்றை சாதத்துடன் கலந்து உருண்டைகளாக பிண்டம் பிடித்து வைத்து, அதை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து, பிறகு அதை நீர் நிலைகளில் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும்.
மகாளய அமாவாசை அன்று அளிக்கப்படும் இந்த பிண்ட தானம் நமக்கு இருக்கும் துன்பங்கள், வளர்ச்சியில் இருக்கும் தடை ஆகியவற்றை நீக்கி விடும் என வேதங்கள் சொல்கிறது.
மேற்சொன்ன இந்த முறைகள் எல்லாம் வைஷ்ணவத்தில் தான் காணப்படுகிறதே தவிர சைவத்தில் காணப்படவில்லை.
ராமர் இறந்து போன தன்னுடைய தந்தை தசரதன் நினைவாக தர்ப்பணம் செய்த புராணம் இருக்கிறது. ஆனால் சைவத்தில் சிவனோ அல்லது சிவனடியார்களோ இதுபோன்று தர்ப்பணம் வழங்கியதாக எந்த குறிப்புகளும் இல்லை.
ஆக முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் முறை வைஷ்ணவம் வந்த பிறகு தான் இந்து மதத்திற்குள் நுழைந்து இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மற்ற அமாவாசைகளில் கொடுக்கப்படும் திதியை விட மகாளய அமாவாசை அன்று கொடுக்கும் திதிக்கு அதிக விசேஷம் உண்டு என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அமாவாசை இருக்கின்ற நேரத்தில் அமெரிக்காவில் அமாவாசை இருக்காது. ஆக தமிழ்நாட்டில் முன்னோர்களுக்கு திதி குடுக்கின்ற அதே நேரத்தில் அமெரிக்காவில் திதி கொடுத்தால் அது முன்னோர்களுக்கு போய் சேராது.
பூமியிலேயே இத்தகைய நேர முரண்பாடு இருக்கிறது. பூமியை கடந்து விட்டால் பிறகு அம்மாவாசையும் இல்லை பௌர்ணமியும் இல்லை. பித்ருலோகம் நிச்சயமாக பூமியில் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே பித்ருக்கள் இருக்கும் பித்ருலோகத்தில் அமாவாசையும் கிடையாது. பௌர்ணமியும் கிடையாது.
அப்படியானால் திதி கொடுப்பதற்கான நேரக்குறியீடு தவறானது ஆகாதா?
ஆவியுலக ஆராய்ச்சிப்படி இறந்து போன பிறகு நம்முடைய ஆவிகளுக்கு பசி இருக்குமேயானால் அது நிறைவேறாத ஆசையுடன் அலைகின்ற துர் ஆவியாகும். அத்தகைய துர்ஆவிகள் இருக்கின்ற இடம் விருத்தி ஆகாது.
அதனால் தான் பேய் பிடித்தவர்களிடம் உனக்கு என்ன வேண்டும் என கேட்டு அந்த பேய் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து பேயை விரட்டி விடும் சம்பவம் உலகறிந்தது.
அந்த வகையில் நம்முடைய முன்னோர்கள் நம்முடைய பிண்டங்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் பசியுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
ஒருவேளை அப்படியே இருக்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் நாம் ஏதோ ஒரு அமாவாசையில் திதி கொடுத்து அவர்களை பசியை போக்கி விடுகிறோம். பிறகு எதற்காக அவர்களுக்கு ஒவ்வொரு அமாவாசையிலும் திதி கொடுக்க வேண்டும்?
மீண்டும் மீண்டும் பசி எடுத்துக் கொண்டே இருந்தால் அவர்கள் ஆத்மா சாந்தி அடையாமல் அலைந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அவ்வாறு சாந்தி அடையாமல் இருந்தால் சாந்தி பரிகாரம் தான் செய்ய வேண்டுமே தவிர திதி கொடுப்பதனால் எந்த பலனும் இல்லை.
நல்ல ஆத்மாக்களாக இருக்கும் பட்சத்தில் உண்மையில் உடலை விட்டு பிரிந்த உயிருக்கும் பசி இருக்காது. உயிரை விட்டொழித்த உடலுக்கும் பசி இருக்காது.
பிறகு எதற்காக இந்த தர்ப்பணம்?
தவிர 21 தலைமுறை முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கான சந்ததியினர் இருப்பார்கள். அந்த ஆயிரக்கணக்கானவர்களும் ஒரே நேரத்தில் திதி கொடுத்தால் அந்த பிண்டங்களை சாப்பிடும் அளவிற்கு அவர்களுக்கு வயிற்றில் இடம் இருக்குமா? ஒருவேளை இடம் இருந்தால் ஜீரண உறுப்புகளே இல்லாமல் அது எப்படி ஜீரணம் ஆகும்?
சரி..! பிண்டம் தருவது தான் முன்னோர்களை திருப்திப்படுத்தும் சரியான முறை என்று வைத்துக் கொள்வோம். அதை ஆற்றுக்குள் வைத்து வேஷம் கட்டி மந்திரங்கள் ஓதித்தான் கொடுக்க வேண்டுமா? வீட்டில் வைத்துக் கொடுத்தால் வந்து பெற்றுக் கொள்ள மாட்டார்களா?
மாதம் தவறாமல் திதி கொடுகின்ற அநேக பேர்கள் தரித்திரத்தில் உழண்டு கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் மீதான முன்னோர்கள் சாபங்கள் எல்லாம் இன்னும் போகாமல் இருக்கிறதா? போகாமல் இருக்கிறது என்றால் அந்த திதி கொடுத்து என்ன பயன்? இல்லை சாபமெல்லாம் நீங்கி விட்டது என முன்னோர்கள் சொன்ன பிறகும் பிண்டம் கொடுத்தவனுக்கு தரித்திரம் நீங்காமல் இருந்தால் அந்த பிண்டம் கொடுத்து என்ன பயன்?
ஆக இறந்து கண்களுக்கு தெரியாமல் இருப்பவர்களை நினைத்து கவலைப்பட்டு காசை வீணடிப்பதை விட,
உயிரோடு இருக்கும் பெற்றோர்களுக்கும், முன்னோர்களுக்கும் அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதை விட நம்முடைய சாபங்களை நீக்கும் சக்தி வேறு எந்த வழிமுறையிலும் வழிபாட்டிலும் இருக்காது என்பதே நிதர்சன உண்மை.
🙏🙏🙏

No comments:

Post a Comment

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

 ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு* *ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்...