Saturday 1 January 2022

ஆன்மீகம் கேள்வி பதில்கள் & சந்தேகங்கள்-2

 

  ஆன்மீகம் கேள்வி பதில்கள் & சந்தேகங்கள்-2

மற்றவர் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?

யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர் ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள். அதிகமாக தீக்குச்சிகளை உபயோகிப்பதால் குச்சிகள் குவியும் தொந்தரவும் இருக்காது.

நவக்கிரக படங்களை வீட்டு பூஜையறையில் வைத்து வணங்கலாமா?

சுவாமி படங்கள் என்ற நிலையில் எல்லா படங்களையுமே வீட்டில் வைத்து பூஜிக்கலாம்.

சில வீடுகளில் வாஸ்து புருஷன் படத்தை வாசலில் திருஷ்டிக்காக கட்டி தொங்க விட்டுள்ளனர். சில வீடுகளில் பூஜையறையிலேயே வைத்துள்ளார்கள். இது எந்த அளவுக்கு சரி?

சுவாமி படங்களைத் தான் வீட்டில் வைக்கலாம். வாஸ்து புருஷன் ஒரு அரக்கன். அவனுக்காகத்தான் வீடு கட்டத் துவங்கும் முன், பூசணிக்காய் வெட்டி பலி கொடுக்கிறோம். அவனது படம் வைக்கக்கூடாது.

உற்சவர் புறப்பாட்டின் போது மூலவரை வணங்குவது சரிதானா?

மூலவரின் எழுந்தருளித் திருமேனி (விழாக்காலத்தில் பவனி வருபவர்) தான் உற்சவர். உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழா. அந்நேரத்தில் நாமும் திருவீதியுலாவில் கலந்து கொண்டு தரிசிப்பது சிறப்பு. சில கோவில்களில் உற்சவர் புறப்பாடானதும், மூலவர் சந்நிதியை நடை சாத்தும் வழக்கமும் உண்டு.

எனக்கு 84 வயது, தரையில் உட்கார்ந்து சந்தியா வந்தனம் செய்ய இயலவில்லை. நாற்காலி, ஊஞ்சலில் அமர்ந்து செய்யலாமா?

இத்தனை வயதிலும் அனுஷ்டானங்களை விடாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களே! அதுவே, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும். நாற்காலி, பெஞ்சில் அமர்ந்து செய்யலாம். ஊஞ்சல் வேண்டாம். ஜபம் செய்யும் போது நாம் அமரும் ஆசனம் ஆடக்கூடாது.

நிஷ்டை என்பதன் பொருள் என்ன?

புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தியானத்தில் அமர்வதே நிஷ்டை. “ஷட்” என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருவதே இந்தச் சொல். “ஷ்ட கதி நிவ்ருத்தென” என்பது இலக்கணம். அதாவது “இயக்கத்தை நிறுத்திக் கொள்வது” என்று பொருள். கண், காது, மூக்கு, வாய் உடல் ஆகியன இயங்குவதற்கு தகுந்தாற் போல் நம் மனமும் செயல்படுகிறது. கண் பார்ப்பதை காது கேட்பதை, மூக்கு நுகர்வதை, வாய் சுவைப்பதை உடல் இயங்குவதைப் பின்பற்றியே மனமும் செல்கிறது. இவற்றின் இயக்கம் அதிகமாகும் போது, மனம் நிலையில்லாமல் அலை பாய்கிறது. அமைதி குறைகிறது. மன அழுத்தம் கூடுகிறது. இந்நிலையில் மனதில் இறைவனை நிலை நிறுத்தி அமர்வது சாத்தியமில்லை. எனவே தான் முனிவர்கள் நிஷ்டை எனும் அரிய வழியைக் கையாண்டார்கள். கண்களை மூடி மனதில் இறைவனை நிலை நிறுத்தி மற்றைய புலன்களில் இயக்கத்தையும் நிறுத்திப் பழகி விட்டால் “ஏகாக்ர சித்தம்” என்னும் ஒருநிலைப்பட்ட மன அமைதி ஏற்பட்டு விடும்.

இறைவனை எந்த வயதில் வழிபட்டால் மனம் பக்குவமடையும்?

இறைவழிபாட்டிற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்? பிரகலாதன் கருப்பையிலேயே பகவான் நாமம் ஜபம் செய்யத் துவங்கிவிட்டான். திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தேவாரம் பாடத் துவங்கிவிட்டார். இக்காலத்தில் கூட ஒரு சிலர் இளம் வயதிலேயே இறைவனை வழிபட்டு பக்குவம் அடைந்திருக்கிறார்கள். இறைவனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பக்தியை உண்டுபண்ண வேண்டும். அந்த பக்தி அவர்களைப் பக்குவப்படுத்தி விடும்.

விநாயகருக்கு விடலைத் தேங்காய் உடைக்கிறார்கள். அதை எடுப்பது பாவமா?

விக்னம் போக்குபவர் விநாயகர். அவரை வழிபட்டால் காரியத்தடை நீங்கும். தொடங்கும் பணி குறைவின்றி நிறைவேற அவரை வேண்டி விடலை போடுவர். சுவாமிக்கு படைத்த பின் அதில் எப்படி பாவம் சேரும். தாராளமாக எடுத்து உண்ணலாம்.

வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது?

பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.

கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?

பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் “கோமாதா” என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

பவுர்ணமி பூஜையை பகலில் செய்யலாமா?

பவுர்ணமியன்று வீட்டில் செய்யும் பூஜையை பகல் அல்லது மாலையிலும், கோவில்களில் இரவிலும் செய்வது சிறந்தது. பவுர்ணமி நிலவு உதயமான பிறகு கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வெளிபிரகாரத்தை வலம்வருவது ஆரோக்கியத்துக்கு நல்லது. மனதைரியமும் வளரும்.

திருநீறு இடுவதற்கு எந்த விரலைப் பயன்படுத்த வேண்டும்?

திருநீறு இடுவதற்கு வலக்கையில் ஆள்காட்டிவிரல், சுண்டுவிரலை கொம்பு போல நீட்டியபடி மற்ற மூன்று விரல்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ரிஷப முத்திரை என்று பெயர். பூசும்போது ஓம் சிவாயநம, ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ போன்ற மந்திரங்களைச் ஜெபிக்க வேண்டும். சிந்தாமல் சற்று நிமிர்ந்தபடி பூச வேண்டும்.

பரிகாரத்திற்கு கட்டுப்படாத பாவம் இருக்கிறதா?

உடலில் நோய் ஏற்பட்டால் தான் மருந்து சாப்பிட வேண்டும். பரிகாரமும் அதுபோலத்தான். அறியாமையால் ஏற்படும் தவறுகளுக்கு, அதாவது தெரியாமல் செய்துவிட்ட பாவத்திற்கு பிராயச்சித்தம் தான் பரிகாரம். தெரிந்தே செய்யும் பாவங்களுக்கு பரிகாரம் செய்து பயனென்ன! பாவமே செய்யாமல் வாழ முயல்வது தான் சிறந்தது.

கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?

ஒருவர் இறந்த பிறகு அவரது ஆவியின் பயணம் பற்றிக் கூறும் நூல் கருட புராணம். இறப்பதற்கு முன் செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது. இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகிறது. இதனால் சாதாரணநாட்களில் இதனைப் படிக்க கூடாது என்பர். ஆனால், இந்நூலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். புத்தகம் என்பது மற்றவர் படிக்கத் தான். இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோவில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம்.

திருப்பாவையை மார்கழியில் மட்டும் தான் பாடவேண்டுமா?

ஆண்டாள் கொண்டிருந்த கிருஷ்ண பக்தியை வெளிப்படுத்தும் நூல் திருப்பாவை ஆகும். இதைப் பாடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும். நீங்காத செல்வம் கிடைக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு கைகூடும். எந்த மாதத்திலும் படிக்கலாம்.

வீட்டில் ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் செய்ய நினைக்கிறேன். என் எண்ணம் சரியானது தானா?

மிக சரியானது. நீங்கள் ஹோமம் செய்வதோடு பிறரையும் செய்யச் சொல்லுங்கள். ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல! உங்கள் ஊரையே காப்பாற்றும். இப்படி எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும்.

சனி பகவானின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

சனீஸ்வரரையும் ஈஸ்வர பட்டத்தோடு பகவான் என்று தான் குறிப்பிடுகிறோம். அவர் இறைவனின் பிரதிநிதியாக இருந்து நம் பாவபுண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை நமக்கு வழங்குகிறார். அவரைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. விரும்பினால், அனுகிரக சனீஸ்வரராக சாந்த கோலத்தில் வைத்து வழிபடுங்கள்.

மாலையில் தீபமேற்றி வழிபட்ட பின், கோவிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடலாமா?

சந்தேகமே வேண்டாம். தாராளமாக வீட்டில் தீபமேற்றிய பின் கோவிலிலும் தீபமேற்றி வழிபடுங்கள். அதனால், உங்களுக்குப் புண்ணியம் பன்மடங்கு சேரும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...