Monday 13 May 2019

பாவம்

                                                                               பாவம்
கேள்வி - எனக்கு பாவம் செய்வதிலோ, தீங்கு செய்வதிலோ விருப்பமில்லை. ஆனால், நான் நிர்பந்திக்கப்படுகிறேன். என்னைச் சுற்றிலும் வாழ்பவர்களது எண்ணங்களும், செயல்களும் என்னைப் பாவம் செய்யத் தூண்டுகின்றன. எனக்கு சந்தேகம் என்னவென்றால் இப்பொழுது பாவம் எனக்கா என்னைப் பாவம் செய்த் தூண்டுபவர்களுக்கா ?
இராம் மனோகர் - விஷத்தை யார் குடித்தாலும் மரணம்தான். நான் விஷம் குடிக்கிறேன், நீயும் கொஞ்சம் குடி என்று யாராவது கொடுத்தால், நீங்கள் அதை வாங்கிக் குடிப்பீர்களா என்ன ? குடிக்க மாட்டீர்கள். ஏனெனில் மரணித்து விடுவோம் என்பது உங்களுக்குத் தெரியும். அது போலத்தான் இதுவும் நான் பாவம் செய்கிறேன் அல்லது எனக்காக பாவம் செய் என்று யாராவது நிர்பந்தப்படுத்தினால், நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள் ? இதில் கொடிய பாவம் எது தெரியுமா ? நிர்பந்தமோ, இல்லையோ பாவம் என்று தெரிந்தே அதைச் செய்வதுதான்.
ஒரு வலைஞன் மீனுக்காக விடிய விடிய வலை வரித்துக் காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு மீன் கூட வலையில்படவில்லை. அது போலவே ஒரு வேடன் நாள் முழுவதும் ஏதேனும் ஒரு விலங்கையாவது வேட்டையாட வேண்டும் அலைகிறான். ஆனால், ஒரு விலங்கு கூட சிக்கவில்லை. இப்பொழுது பாருங்கள் இந்த இருவரும் ஒரு உயிரையும் கொல்லவில்லை. ஆனால், பாவம் செய்தவர்களாக ஆகிறார்கள். ஏனெனில் நாள் முழுவதும் உயிர் கொலை பற்றிய சிந்தனையிலேயே அவர்கள் இருந்தார்கள்.
ஆனால், ஒரு விவசாயி கலப்பையைக் கொண்டு மண்ணை உழுகிறார். பல புழுக்கள், பூச்சிகள் மடிகின்றன. எனினும் அவருக்குப் பாவம் சேர்வதில்லை. ஏனெனில் அவருக்கு உயிர்க்கொலை என்பது நோக்கமல்ல. பயிரிட வேண்டும், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. மேலும் அவரது செயலால் பல உயிர்களின் பசிப் பிணி அறவே நீங்கி விடுகின்றது. ஆக மனமும், செயலில் விளைவும்தான் பாவத்தைத் தீர்மானிக்கின்றன என்பது தெளிவாகிறதல்லவா ?
நான் எனக்காகச் செய்யவில்லை, மற்றவர்களுக்காக அல்லது அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் பாவம் செய்தேன் என்று சொல்பவர்கள் மற்றவர்களை மட்டும் ஏமாற்றவில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல செய்தவனும், செய்யத் தூண்டியவனும் இருவருமே மனதளவில் பாவத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். எண்ணம் ஒன்றாகவும், செயல் வேறாகவும் இருப்பதுதான் பாவத்திற்கு அஸ்திவாரமாக இருக்கிறது.
எனக்கு விருப்பமில்லை என்று நீங்கள் சொல்வது உங்கள் எண்ணம். ஆனால், பிறரின் தூண்டுதலினால் செய்யப் புகுந்தது எண்ணத்திற்கு முரண்பட்ட செயல். இதைத்தான் வள்ளலார் ''உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்(செய்வார்) உறவு கலவாமை வேண்டும்'' என்பார். எத்தகைய இன்னல்கள் வந்தாலும் பாவம் செய்ய மாட்டேன். நல் வழியில்தான் வாழுவேன் என்கிற உறுதிப்பாடு மட்டுமே நம்மை மேன்மைப்படுத்தும். மனதில் உறுதியோடு இப்படி நடந்து கொண்டவர்களைத்தான் நாம் மகான்கள் என்று போற்றிக் கொண்டாடுகிறோம்.
கேள்வி - அப்படியானால் பிறர் எண்ணங்கள், வார்த்தைகள் என்னைத் தூண்டுவது என் குற்றமா ?
இராம் மனோகர் - பிறர் உங்கள் மனதைத் தூண்டுவது எவ்வளவு எளிதோ, அதை விட எளிது அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பது. ஒருவர் பல பாவங்களைச் செய்வதற்குக் காரணம் அவர் தனது மனதைத் தவறான வழியில் செலுத்துவதுதான் காரணமே தவிர வேறு காரணம் எதுவுமில்லை. மனதின் எதிர்மறையான எண்ணப் பதிவுகள்தாம் பாவம் செய்யத் தூண்டுகின்றதேயல்லாமல், நீங்கள் கூறுவது போல அது மற்றவர்களல்ல. பேராசை, குற்ற உணர்வுகள், இயலாமை, குரோதம், பொறாமை போன்ற தீய உணர்வுகள்தான் நம் பாவங்கள் அனைத்திற்கும் மூலக் காரணம். இதில் மற்றவர்கள் வெறும் முகமூடிகள்தான்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...