Sunday 3 March 2019

மஹா சிவராத்திரி சிந்தனைகள்

                                                            மஹா சிவராத்திரி சிந்தனைகள்
 _()_ சிவ சம்போ மகாதேவா _()_
1 . வில்வித்தையில் ஈடு இணையற்றவனாக விளங்கிய அர்ஜூனன் சிவனை நோக்கி தவமிருந்து வலிமைமிக்க பாசுபதம் எனும் அஸ்திரத்தை பெற்ற தினம் சிவராத்திரி .
2 . கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு தன் கண்ணையே பெயர்த்தெடுத்து வைத்து ஈசன் அன்புக்கு பாத்திரமான நாள் சிவராத்திரி .
3 . சிவனை நோக்கி பகீரதன் மிகக் கடும் தவம் செய்து ஈசன் தலையில் இருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்த தினம் சிவராத்திரி .
4 .சிவன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசிய எமதர்மனை எட்டி உதைத்து ஈசன் காலசம்ஹாரமூர்த்தியாக தோன்றிய நாள் சிவராத்திரி .
5 . மிருங்கிமுனிவரின் வழிபாட்டால் கோபித்த பார்வதி தேவி தன் பெருமையை உணர்த்த சிவனை நோக்கி தவமிருந்து ஈசனின் இடப் புறம் இடம் பெற்று அர்த்தநாரீசுவராக உமையொரு பாகனாக செய்தது ஒரு சிவராத்திரியில் தான் .
பிரம்மன் சிருஷ்டித் தொழிலையும்,
மஹாவிஷ்ணு காக்கும் தொழில், லக்ஷ்மி , சக்ராயுதம் ஆகியவற்றையும்
இந்திரன் விண்ணுலக அதிபதி பட்டத்தையும்,
குபேரன் அளவற்ற நிதியையும்,
குமரன் அழகான மேனியையும்,
கன்மாடபாதனென்னும் வேந்தன் பிரமகத்தி நீக்கத்தையும் பெற்றது சிவராத்திரி தினத்தில் தான்
இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்த அற்புதங்கள் பல என்று சிவமஹா புராணம் எடுத்துரைக்கிறது .
சிவராத்திரி அன்று சிவத் தலங்களில் ஒரு வில்வ இலை கொண்டு பூஜை செய்தாலே கோடிக்கணக்கான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ததற்கு சமமான பலன்கள் கிடைக்கும். உணவை குறைத்து விரதமிருந்து கண் விழித்து சிவன் வழிபடுவது மிகுந்த பலனளிக்கும் செயலாகும் .
அஸ்வமேத யாகம் போன்றவைகளை செய்வது , அனேக தான தர்மங்கள் செய்வது , திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது , நோன்பு நோற்பது , விரதங்கள் மேற்கொள்வது ஆகியவற்றால் ஏற்படும் நற்பலன்களும் , புண்ணியங்களும் சிவராத்திரி
அன்று ஈசனை நியமமாக வழிபடுவதால் மட்டுமே பெறலாம் என வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.
வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
1 . இதில் முதற்கால பூஜையை படைக்கும் தொழிலுக்குரிய பிரம்மா சிவனுக்கு செய்யும் பூஜை .
இதனை பஞ்ச கவ்வியத்தால் அதாவது கோமாதா என்ற அழைக்கப்படும் பசு விடமிருந்து பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம் ஆகிய ஐந்து பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற ஆடை அணிவித்தும், தாமரைப் மலர்களால் அலங்கரித்து பாசிப் பருப்பு பொங்கலை நிவேதனமாக படைத்து, நெய் தீபம் காட்டி அர்ச்சித்து ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது முதற்கால பூஜை . விரதமிருந்து இந்த முதற்கால பூஜையில் கலந்து கொண்டால் நாம் நமது பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம் என்பது ஐதீகம் .
2 . இரண்டாம் கால பூஜை .
இது மகாவிஷ்ணு சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இதில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து , சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து , பாயாசத்தை நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபம் காட்டி அர்ச்சனை செய்து , யஜுர் வேத பாராயணத்துடன் பூஜிக்கப்படுகிறது. இந்த 2 - ம் காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும் என்பது ஐதீகம் .
3 . மூன்றாவது கால பூஜை . இது சக்தியின் வடிவமான அம்பாள் செய்யும் பூஜை ஆகும். இதில் தேன் அபிஷேகம் செய்து , பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அலங்கரித்து அர்ச்சனைகள் செய்து , எள் அன்னத்தை நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் செய்யப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்னவென்றால் இதை லிங்கோத்பவ காலம் ஆகும் இக் காலத்தில்தான் சிவபெருமானின் அடி முடியைக் காண பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக கீழ் நோக்கி பாதாள லோகத்தையும் தேடினார்கள் .
இந்த 3 - ம் காலத்தில் விரதமிருந்து ஈசனை வழிபடுவதால் தீய சக்தி எதுவும் நம்மை அண்டாமலிருக்க அன்னை அருள் செய்வாள் .
4 . நான்காவது கால பூஜை . இதனை முப்பத்து முக்கோடி , தேவர்கள் , முனிவர்கள் ரிஷிகள் , பூதகணங்கள் , ஆகியவர்களுடன் மனிதர்களுக்கும் ஜீவராசிகளும் சேர்ந்து சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
இதில் குங்குமப்பூ சாறு, கரும்பு சாறு மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்தும், நந்தியா வட்டம் பூவால் அலங்கரித்து அர்ச்சித்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் வழிபாடு செய்யப்படுகிறது.
புராண விளக்கங்கள் . ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அதில் மகிழ்ந்த ஈசன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதை அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றனர்.
மற்றொரு கல்பத்தின் முடிவில் பெரும் பிரளயம் வந்தது. பிரபஞ்சம் நீரில் மூழ்கியது. திருமால் வராக அவதாரம் எடுத்து , நீரில் புகுந்து பிரபஞ்சத்தை வெளிக் கொணர்ந்தார் .
பிரபஞ்சத்தை மீட்ட திருமால் அதனால் செருக்குற்று தம் இடம் சென்றார்.
அதுவரை உறங்கிக்கிடந்த பிரமனும் விழித்தெழுந்து படைப்புத் தொழில் தொடங்கினார் .பிரம்மனும் அகந்தையால் தாமே கடவுள் என்றார். திருமால் தாமே கடவுள் என்றார். சர்ச்சை நீண்டது. அச்சமயத்தில் அவ்விருவருக்கும் நடுவில் ஓர் அக்கினிப்பிழம்பாய் அடிமுடி அயறியப்படாதவாறு கீழுமேலுமாய் நீண்டு நின்றார் சிவபெருமான்.
பிரம்மன் அன்னமும், விஷ்ணு வராகமுமாய் அப்பிழம்பின் அடிமுடியைக் காணச் சென்றனர். ஆதியும் அந்தமும் காணமுடியவில்லை. இருவரும் அகந்தை நீங்கி பெருமானைத் துதித்தனர். பிழம்பு வடிவான லிங்கத்திலிருந்து மகேசுரமூர்த்தியாய் வெளிப்பட்டார் ஈசன் . அந்த அற்புதத்திற்கே லிங்கோத்பவர் என்று பெயர். பிரம்மனும் விஷ்ணுவும் அவரிடம் திருவருள் பெற்றுச் சென்றனர். அவ்விரவு சிவராத்திரி எனப்பட்டது.
பிறிதொரு சமயம், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, மேரு மலையையே மத்தாகக் கொண்டு ஒரு புறம் அசுரர்களும், மறு புறம் தேவர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்துதான், மஹா லக்ஷ்மியும், காமதேனு, குபேர சம்பத்துக்களும் கிடைத்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டார்கள். இறுதியாக ஆலகால விஷம் தோன்றியது. அண்டசராசரங்களையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தது. அனைவருக்கும் அனுக்ரஹிக்கும் சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்துக்கொண்டார். விஷத்தை அருந்தினார். பயந்த பார்வதி சிவனின் தொண்டையோடு அந்த விஷத்தை நிறுத்தினார். விஷம் ஏறியவர்கள் உறங்கக் கூடாது என்பது மருத்துவ விதி. அதற்கேற்ப அண்டசராசரங்கள் அனைத்தும் இரவு முழுதும் விழித்திருந்த சிவபெருமானைப் போற்றின. அந்த இரவு தான் சிவராத்திரி.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட்டு எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவோமாக! ஓம் நமச்சிவாய வாழ்க .
  மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி நொந்தவாறு திரும்பிக்கொண்டிருந்த அவன், வழியிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தினான்.
ஏதாவது மிருகம் அந்த நீர்நிலைக்கு வரும்.
அதைக்கொன்று எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன், சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி உட்கார்ந்துகொண்டான். அது வில்வ மரம் என்பதும், அதன்கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது.
வேடன் உறங்காமல் மிருகத்துக்காகக் காத்திருந்தான். அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்தது. அது முதல் சாமம் முடிவடையும் நேரம். மானைக் கண்ட வேடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டினான்.
அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.
வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான், ""வேடனே, என் இளம்குட்டிகள் என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். தயவுசெய்து என்னைக் கொல்லாதே'' என்று வேண்டியது.
""மானே, என் குடும்பத்தினரின் பசியைப் போக்கவேண்டியது எனது கடமை. உன்னைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்றான் வேடன்.
அதற்கு அந்தப் பெண்மான், ""அப்படியென்றால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். என் குட்டிகளை இளைய பெண்மானிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். என்னை நம்புங்கள். என் குட்டிகள்மீது சத்தியம்'' என்றது.
மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந் தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது.
அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது
அதைக்கொல்ல அம்பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின்மீது விழுந்தன. அது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம். ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன்மீது குறிவைப்பதைக் கண்டு திகைத்து, ""வேடனே, என்னைக் கொல்லாதீர்கள். என் மூத்தாளைத் தேடி இங்குவந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன.
அவற்றை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்'' என்றது. வேடன் அதற்கும் அனுமதி தந்தான்.
மூன்றாம் சாமம் முடியும் வேளை யில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது. அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்தபோது, வில்வ இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.
வேடன் தன்னைக் கொல்லப் போவதை அறிந்த ஆண் மான், ""ஐயா, என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னைக் கொல்லுங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான்கள் ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தபடி, மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான்.
தங்கள் இருப்பிடம் திரும்பிய மான்கள் நடந்த நிகழ்ச்சியைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டன. ""வேடனுக்கு பலியாக நான் செல்கிறேன்'' என்று ஒரு மான் சொல்ல, ""இல்லை, நான்தான் போவேன்'' என்றது இன்னொன்று. இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன.
ஒருவர் உயிரைத் தியாகம் செய்து மற்ற இருவர் உயிர் வாழ்வதைவிட தங்கள் சத்தியத் தைக் காப்பாற்ற மூவருமே வேடனிடம் செல்வ தென்று தீர்மானித்தன.
பெற்றோர்கள் பலியாகச் செல்லும்போது தாங்களும் உயிர்வாழ விரும்பவில்லை எனக்கூறி, குட்டி மான்களும் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றன.
நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும் எடுத்தபோது, சிவலிங்கத்தின்மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன.
நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத் திற்கு பூஜை செய்கிறோம் என்றோ, பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான்.
நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி, அவனுக்கு ஞானம் பிறந்தது.
வேடன் இருக்குமிடத்துக்கு வந்துசேர்ந்த மான்கள் அவனிடம், ""எங்களைக் கொன்று உங்கள் குடும்பத்தினருடன் பசியாறி மகிழவேண்டும். நாங்கள் செய்த சத்தியத்தின்படி திரும்பி வந்திருக்கிறோம்'' என்றன.
ஞானம் பிறந்துவிட்டபின் வேடனுக்கு மான்களைக் கொல்ல மனம் வருமா? ஐந்தறிவு படைத்த அந்த மிருகங்களின் பண்புக்குமுன் ஆறறிவு படைத்த தான் தாழ்ந்துபோனதை எண்ணி வெட்கித் தலைகுனிந்தான். அந்த மான்களின் சத்தியம் தவறாத தர்மத்திற்கு அடிபணிவதாகக் கூறினான்.
அப்போது சிவபெருமான்
அங்கு காட்சியளித்து, ""வேடனே, உன்னையறியாமல் செய்திருந்தாலும், சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னைச் சேரும். அதன்காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்'' என்றார்.
ஈசனைப் பணிந்த வேடன், ""ஐயனே, என் பாவங்களைப் போக்கியருள வேண்டும்'' என்றான்.
அவ்வாறே அருளிய சிவபெருமான், பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி, ""வேடனே, இனி உன் பெயர் குகன் என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிதுகாலத்தில் இப்பூவுலகில் பிறந்து இங்குவருவார். அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்'' என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி, சிவராத்திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார்.
சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...