Saturday, 7 January 2023

சிவனின் முக்கண்கள்...


 சிவனின் முக்கண்கள்...

சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் சிவனுக்குகந்த பஞ்ச பத்திரங்கள்(இலைகள்) பற்றி தெரிந்து கொள்வோமா!
1. வில்வம்
2. நொச்சி
3. முட்கிளுவை
4. விளா
5. மாவிலங்கை
6 மஹாவில்வம்.
இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள்(இலைகள்)
பொதுவாக " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம்
செழிக்கும்.
ஒரே ஒரு வில்வத்தை
உள்ளன்புடன் சிவபெருமானுக்குச்
சமர்ப்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.
கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம்.
இதனுடன் இன்னும்
நான்கு இலைகளையும் சேர்த்து ஐந்து இலைகளைப் பஞ்ச வில்வம் என்பர்.
கூவிளம் [வில்வம்], நொச்சி, கிளுவை, மாவிலங்கம்,
விளா என்பவை அவை.
பஞ்சமுக அர்ச்சனை:
சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு.
கிழக்கில் உள்ள முகம் தத்புருஷம். தெற்கில் உள்ளது அகோரம்,
மேற்கில் உள்ளது சத்யோஜாதம்,
வடக்கில் உள்ளது வாமதேவம்.
மேலே ஒரு முகம் உண்டு. அது ஈசானம் எனப்படும்.
இந்த ஐந்து முகங்களில் இருந்து
கூவிளம்[வில்வம்], நொச்சி, கிளுவை,மாவிலங்கம், விளா என்பவை தோன்றின.
அது பஞ்ச வில்வங்களாயின என்பது
வில்வமகாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ள
செய்தியாகும்.
சிவபெருமானுக்கு விசேஷ அர்ச்சனை
பஞ்சமுக அர்ச்சனையாகும்.
ஒரே சமயத்தில் 5
சிவாச்சாரியர் 5 வகையான பஞ்ச
வில்வங்களைக் கொண்டு பூஜிப்பர்.
ஒரு முகத்துக்கு ஒரு இலை.
இறுதியில் ஐந்து வகையான பிரசாதங்களை நிவேதனமாக வைத்து ஐந்து சிவாச்சாரியர்களும்
ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வர்.
இது பஞ்சமுக அர்ச்சனை எனப்படும்.
இந்த பஞ்சமுக அர்ச்சனை நிகழ்வில்
ஐந்தடுக்கு தீபத்தில் தீப ஆராதனை
செய்வார்கள்.
சிவலிங்க மூர்த்தியில் முகம்
இல்லாவிட்டாலும்
சிவப்பரம்பொருளின் ஐந்து
முகங்களை பாவனையால்
நோக்கி இந்த அர்ச்சனை செய்யப்படுகிறது.
இதைப்போலவே பஞ்சமுக
விநாயக மூர்த்திக்கும்
பஞ்சமுக அர்ச்சனை
செய்யப்படுகிறது
பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.
திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்கிறது வில்வாஷடகம்.
பஞ்ச வில்வங்கள் எனப்படும் வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம் இவைகளை கொண்டு திங்கள் கிழமைகளில் சிவ பெருமானை அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகுவதுடன் அனைத்து இடர்களினின்றும்
நம்மை காப்பார் என்று கூறப்படுகிறது.
பஞ்ச வில்வங்கள் எனப்படும் வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம் ஆகியவை.✍🏼🌹

🌷 வாசலில் சாணம் தெளிப்பது ஏன் !!


🌞 தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் மகாலட்சுமி வீதியில் வலம் வருவார்களாம். யார் வீட்டு வாசலை சுத்தம் செய்து அழகிய கோலம் போட்டு வைத்திருக்கிறார்களோ, அவர்களது இல்லத்திற்கு காலடி எடுத்து வைத்து உள்ளே வருவார்களாம். அதனால் தான் அதிகாலையில் கோலம் போடும் வழக்கத்தை நமது முன்னோர்கள் கடைபிடித்து கொண்டிருந்தனர்.
🌞 கோலம் போடுவது வெறும் அழகிற்காக அல்ல. வீட்டில் மகாலட்சுமி தேவி நுழையவும், ஈ, எறும்புகள் பசி தீரவும் தான். அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து கோலம் போடுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
🌞 கோலம் போடுவதன் முக்கிய தாத்பரியம் ஓரறிவுள்ள ஜீவ ராசிகளுக்கு உணவளிப்பது தான். காலையில் பச்சரிசியில் கோலம் போட்டால் மாலைக்குள் பாதியளவு நிச்சயம் எறும்புகள், மற்ற சிறு ஜீவன்கள் உண்டு தீர்த்து விடும். கர்ம பலன் குறைய தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தர்மம் துணையாக இருக்கும். இதன் பலனாக உங்களுக்கு இருக்கும் கடன்கள் தொடராமல் இறைவன் அருள்புரிவார். அறிவியல் ரீதியாக காலையில் எழுந்து கோலம் போடுவதால் உடலும், மனமும் ஆரோக்கியம் அடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
🌞 கோலம் போடுவதால், மும்மூர்த்திகளின் ஆசிகளும், நமக்கு கிடைக்கும். அரிசி மாவில் கோலம் போடும் போது, அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும், சுற்றிலும் இடும் காவி நிறம் சிவபெருமானையும் குறிக்கும். கோலத்தின் நடுவில், சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வருவாள். அவளுடன், மகாவிஷ்ணுவும் சேர்ந்து வந்து, நம்மை ஆசீர்வதிப்பார்.
*🌷சாணம் தெளிப்பது ஏன் !*
🐄 ஈசனின் ஆணைக்கிணங்க அனைத்து தெய்வங்களும் காமதேனுவில் ஐக்கியம் ஆவது என முடிவு செய்தனர். அதன் படி ஒவ்வொரு தெய்வமும் காமதேனுவின் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்தனர். லட்சுமி தேவி சற்று தாமதமாக வந்ததால், அவருக்கு காமதேனுவின் ஆசனவாயில் தான் இடம் கிடைத்தது.
🐄 அதனால் காமதேனுவின் ஆசனவாயிலிருந்து வரும் கோமியமும், சாணமும் மகாலட்சுமியை தழுவிக்கொண்டு வருவதால் இவை மிக சிறப்பு வாய்ந்ததாக மாறியது. இரண்டுமே லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
🐄 காலையில் எழுந்ததும் சாணத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து வீட்டின் முன் தெளிப்பதால், நம் விரல்களின் வழியாக பிரபஞ்ச சக்தி கிடைக்கும். தரித்திரம் நீங்கும், கிருமி நாசினியாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
🐄 மகாலட்சுமியே வீட்டிற்கு வருவதால் சின்ன சின்ன பூச்சிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், நோய்கள் தீரும். இதனால் மருத்துவ செலவுகள் குறையும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
*🌷பலன்கள் :
👉 விரல்களால் கோல மாவை எடுத்து, வளைத்து வளைத்து கோலம் போடும் போது, அது நம் கை விரல்களுக்கு, நல்ல பயிற்சியாக அமைகிறது.
👉 குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால், உடலுக்கு யோகப் பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது.
👉 தினசரி சூழலால், சஞ்சலமாகும் மனமும் கூட, கோலம் போடும் போது ஒருமுகப்படும்.
👉 கோலம், நம் கற்பனை திறனையும், நினைவாற்றலையும் வளர்க்கிறது.
👉 அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து, பார்க்க தெளிவாக, அழகாக இருக்கும்.
👉 கோலம், தீய மற்றும் துஷ்ட சக்திகளை, வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும்.
👉 லட்சுமி தேவியை, நம் வீட்டிற்கு வரவழைக்கும்.
👉 கோலம் போடுவதால், வீடு மங்கலகரமாக காட்சி அளிக்கும்.
👉 தினமும் கோலம் போடும் போது, வீட்டில் மங்கல நிகழ்ச்சிக்கு குறைவே ஏற்படாது

மார்கழி மாதம் !!


👩 நம் முன்னோர்கள் ஆடியில் அம்மனுக்கும், புரட்டாசியில் பெருமாளுக்கும், மார்கழியில் அனைத்து தெய்வங்களுக்கும் என மாதத்திற்கு ஒரு தெய்வத்தை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உள்ளது போல மார்கழி மாதத்திற்கும் தனி சிறப்பு உள்ளது.
எல்லா விரதங்களிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதற்கான காரணம் :
👩 பெண்களை 6 விதமான தன்மைகள் கொண்டவர்களாக கருதுகின்றனர். பெண் என்பவள் தெய்வமாகவும், மனைவியாகவும், குருவாகவும், நண்பனாகவும், ஆசானாகவும், போதகனாகவும் (செயல்திறன்) ஒரு ஆணுக்கு அமைகின்றாள்.
👩 அந்த பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவேதான் பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.
👩 எந்தவொரு மனிதரும் தவறுகள் செய்யாமல் இருப்பதில்லை. அறிந்தும், அறியாமலும் சில தவறுகள் செய்திருக்கலாம். மேலும், நடக்கும்போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற எத்தனை உயிர்கள் சாகின்றன? இதுவும் ஒருவகை பாவம்தான். இதனால் வரும் தோஷத்தினால் கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை ஏற்படும். இதைத் தவிர்க்கவே பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
👩 மழை, பனி, குளிர் காரணமாக உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் உணவு இல்லாமல் இருக்கும் சிறு உயிரினங்கள், அதிகாலையில் தமக்குத் தேவையான உணவைத் தேடி வருகின்றன. அப்போது நாம் அரிசி மாவில் கோலம் போடுவதால் அதற்கு உண்டான உணவு கிடைத்துவிடுகிறது. அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த பெண்களுக்கு தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை.
👩 அந்த காலத்தில் ஆண்டாள் மார்கழி மாதத்தில்தான் தினமும் ஒவ்வொரு பாசுரமாகப் பாடி சென்று பெருமாளை வழிபடுவார். ஆனால், தான் மட்டும் பெருமாளைப் பார்த்து பலன் அடையக்கூடாது என்று எண்ணி தன் தெருவில் இருக்கும் கன்னிப் பெண்கள், குழந்தை இல்லாதவர்கள் என எல்லாப் பெண்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று வழிபட வைத்தார். தன் மனம் கவர்ந்த கண்ணனின் முன் நின்று நீயே என் கணவனாக வர வேண்டும் என்று கூறி வழிபாடு செய்தார்.
👩 அதிகாலையில் எழுந்து ஒரு மனதுடன் தனக்குச் சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்ற ஆழ்மனது நம்பிக்கையுடன், பரிசுத்தமான காற்றை சுவாசித்து விரதம் மேற்கொள்ளும்போது அப்பெண்ணிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகி, மன ஆரோக்கியம் மேம்பட்டு அவர்கள் நினைத்த காரியம் கைகூடும்.
👩 பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த ஆண்டாள், பெருமாளின் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக, அவரையே தன் கணவனாக அடைய விரும்பினாள். கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்த ஆண்டாளுக்கு அருள்புரிந்த பெருமாள், பங்குனி உத்திரத்தில் ஆண்டாளை மணந்து கொண்டார். எனவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால், விரும்பிய கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. இதுபோன்ற காரணங்களால்தான் மார்கழி மாதம் பெண்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுகின்றது

ஒரு நாள் ஜானகி தன் மனக்குறையை கணவனிடம் வாய் விட்டுச் சொன்னாள்.

 ஓர் ஊரில் கந்தன் என்ற கோவில் அர்ச்சகர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ஜானகி. ஜானகிக்கு தன் கணவன் மீது அன்பு உண்டு என்றாலும் மனக்குறைகள் நிறைய உண்டு.

வெறும் கோவில் அர்ச்சகராக கந்தன் வாழ்க்கை நடத்துவதால் அவன் குடும்ப வாழ்க்கை மிகவும் வறுமையாகவே இருந்தது. நல்ல ருசியான உணவு வகைகளை சமைத்து சாப்பிடவும், உயர்ந்த ஆடை அணிகளை அணிந்து சுவைக்கவும் ஆசைப்பட்ட ஜானகிக்கு அவையெல்லாம் எட்டாத பழமாக இருந்தன.
ஒரு நாள் ஜானகி தன் மனக்குறையை கணவனிடம் வாய் விட்டுச் சொன்னாள். நீங்கள் கோயில் அர்ச்சகராக இருப்பதால் நமது குடும்பம் எப்பொழுதும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறது. வேறு ஏதாவது உத்தியோகம் தேடினாலோ, வியாபாரம் செய்தாலோ அதிக பணம் கிடைக்கும் அல்லவா என்றாள்.
ஜானகி மனத்தில் உள்ள கருத்தை கந்தன் தெளிவாகப் புரிந்து கொண்டான். அவளுக்கு தனது பணியின் உண்மை மதிப்பை உணர்த்த எண்ணினான .
ஒரு நாள் கந்தன் கோயிலில் சுவாமிக்கு சமர்ப்பணம் செய்த சிறிய மலர் ஒன்று எடுத்து மனைவியிடம் கொடுத்து இதை கொண்டு போய் நமது அரசரிடம் கொடுத்து இந்த மலருடைய எடைக்குச் சமமான பொன் வாங்கி வா என்றான்.
ஜானகிக்கு கணவனுடைய எண்ணம் விளங்கவில்லை என்றாலும் கணவன் சொன்னதை நிறைவேற்ற அரண்மனைக்குச் சென்று அரசனை பார்க்க விரும்புவதாக காவலாளிகளிடம் தெரிவித்தாள்.தான் வந்த நோக்கத்தையும் காவலாளிகளிடம் சொன்னாள்.
காவலாளிகள் ஜானகி சொன்ன தகவல்களை அரசரிடம் சென்று தெரிவித்தார்கள். குடும்பக் கஷ்டம் தீர ஜானகி பொருள் உதவி கூறி வந்திருப்பதாக நினைத்து அரசர் ஒரு பண முடிப்பை அளித்து அவளிடம் கொடுக்கும்படி சொன்னார்.
ஜானகி பணம் முடிப்பை பெற்றுக் கொள்ளவில்லை . பூஜை மலரின் எடைக்குச் சமமான பொன்னைப் பெற்று வருமாறு தன் கணவன் உத்தரவிட்டிருப்பதால் அதை மீற தனக்கு உரிமை இல்லை என்று ஜானகி வாதாடினாள்.
காவலாளிகள் அந்த தகவலை அரசனுக்கு தெரிவித்தார்கள். அந்த வினோதமான வேண்டுகோளை செவிமடுத்த அரசன் ஜானகியை தன் முன் வரச் சொன்னார். ஜானகி அரசனை வணங்கி நின்றாள்.
அம்மா உன் கையில் இருக்கும் மலரின் எடைக்கு என்ன பொருள் கிடைக்க முடியும்? ஒரு குண்டுமணி எடை பொன் கூட இதற்கு சமமாகாதே என்றான் அரசன்.
துளி அளவு பொன் கிடைப்பதாக இருந்தாலும் என் கணவன் சொன்னபடி தான் நான் நடக்க வேண்டி இருக்கிறது என்று ஜானகி பணிவுடன் சொன்னாள்.
அரசன் ஒரு தராசை தருவித்தான். ஒரு தட்டில் பூஜை மலரை வைக்கச் சொன்னார். மற்றையதில் கொடுத்த பணமுடிப்பை வைக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம் பூஜை மலர் இருந்த தட்டு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. மற்றொரு பண முடிப்பை தட்டில் வைக்குமாறு அரசன் கட்டளையிட்டார். பூஜை மலர் இருந்த தட்டு உயரவே இல்லை.
அரசன் வியப்படைந்தான். அரண்மனை பொக்கிஷத்தை திறந்து ஒரு பெரிய தங்க கட்டி எடுத்து வர செய்து தராசு தட்டில் வைத்தான். மலர் இருந்த தட்டு அப்படியே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பொக்கிஷத் தங்கம் முழுவதையும் கொண்டு வரச் சொன்னார். மலர் இருந்த தட்டில் மாற்றமில்லை. தனக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொண்டு வரச் செய்து அரசன் தராசில் வைத்தான்.
ராணியின் நகைகள் கொண்டுவரப்பட்டன. மன்னனின் அணிகலன்கள் கழட்டி வைக்கப்பட்டன. ஆனால் மலர் இருக்கின்ற தராசு தட்டு மேலே எழவே இல்லை. மன்னன் திகைப்பும் திகிலும் அடைந்தான். இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்று அவனுக்கு விளங்கவில்லை.
கோவில் அர்ச்சகர் கந்தனை அழைத்து வருமாறு அரசன் தன் சொந்த பல்லக்கை அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கந்தன் அரசனின் முன் வந்து வணங்கி நின்றான்.
அரசன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து கந்தனை மரியாதை உடன் வரவேற்று தனக்கு சமமாக இருக்கை தந்து அமரச் செய்தான்.
பிறகு சுவாமி முதலில் தங்களை ஒரு ஏழை அர்ச்சகர் என அலட்சியமாக நினைத்தேன். தங்களுடைய பெருமையும் மதிப்பும் இப்பொழுது தான் எனக்கு விளங்குகிறது என்றான்.
கந்தன் சிரித்துக்கொண்டு அரசே என்னுடைய தகுதியை பற்றி தாங்கள் அளவுக்கு மீறிப் புகழ்கிறீர்கள். என்னிடம் எந்த மகிமையும் இல்லை. இந்த மலர் இறைவன் திருமேனியை அலங்கரித்து அதன் மூலம் பெருமை பெற்றது. தகுதி எல்லாம் இந்த மலரிடம் தான் இருக்கிறது. தவிர என்னிடம் அல்ல என்றான்.
இந்த மலரின் விலைக்கு சமமான பொருள் உலகத்தில் உண்டா? என்று எனக்கு தெரியவில்லை என்றான் அரசன் திகைப்புடன்.
இருக்கிறது அரசே! தாங்கள் தயவுசெய்து குளித்து முழுகி பரிசுத்த நிலையில் இறைவனை ஒரு மலரை கொண்டு ஏகாக்கிரக சிந்தனையுடன் அர்ச்சித்து பிறகு அந்த மலரை கொண்டு வந்து அடுத்த தட்டில் வைத்துப் பாருங்கள் என்றான் கந்தன்.
அரசன் தராசின் மறுதட்டில் இருந்த செல்வப் பொருட்களை அகற்றிவிட்டு கந்தன் சொன்னபடி பரிசுத்த நிலையில் இறைவனை மலர் கொண்டு அர்ச்சித்து அந்த மலரை கொண்டு வந்து தராசின் மறு தட்டில் வைத்தான். என்ன ஆச்சரியம் ஜானகி தந்த மலரின் தட்டு இப்பொழுது மேல் எழுந்து அரசன் மலர் வைத்த தட்டுக்கு சமமாக நின்றது.
உலகத்தில் எவ்வளவு செல்வமும் பெருமையும் இருந்தாலும் அது இறைவனின் அருளைப் பெற்ற ஒரு மலரை விட எந்த விதத்திலும் உயர்ந்த நிலை அல்ல என்ற உண்மை கண்ணுக்கு மெய்யாக நிரூபிக்கப்பட்டது கண்டு அரசன் மட்டுமல்ல அர்ச்சகரின் மனைவி ஜானகியும் மனம் வருந்தினாள்.
கடவுளின் அருளுக்கு பாத்திரமாக இருப்பதைவிட வேறு செல்வ நிலை உலகத்தில் எதுவும் கிடையாது

ரத்தத்தை சுத்தமாக்க எளிய 7 வழிகள்!

 ரத்தத்தை சுத்தமாக்க எளிய 7 வழிகள்!

மனித உடலில் ரத்தம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ரத்தம் அசுத்தம் அடைந்தால் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகக் காரணமாகிறது. அது தொடரும்போது உயிரிழப்புக் கூட நேரிட வாய்ப்புள்ளது. அதுபோன்று, நமது உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகவும், ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை விகிதம் சரியானதாகவும் இருந்தால்தான் உடல் நோயின்றி வாழமுடியும். இதற்கு உணவு முறைகள் மிகவும் அவசியமாகும். எனவே, சுலபமாக ரத்தத்தை சுத்தமாக்கும் வழிகள் சிலவற்றைப் பார்ப்போம்:
ரத்தம் சக்திமிகு திரவமாக இருக்க முங்கைக் கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, நாவல் பழம், உலர்ந்த திராட்சை, முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவை அடிக்கடி உணவில் சேர்த்து வர, ரத்தம் சுத்தம் ஆவதோடு, அதிகரிக்கவும் செய்யும். புளிச்சக்கீரையை துவையலாக செய்து சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தப்படுத்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
இஞ்சியை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தமாக்குவதுடன் ரத்த அணுக்களையும் அதிகரிக்கும்.
இலந்தைப் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தப்படுத்தும்.தினமும் உணவில் பூண்டு சேர்த்து வர, ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் , பூண்டு ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது.
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், ரத்தம் உறைவது தடுக்கப்படுவதோடு, உடலில் ரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும் மஞ்சள் ரத்தத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக்கும்.
கடுக்காய்ப்பொடி 5 கிராம், கிராம்பு பொடி 4 கிராம் இரண்டையும் சேர்த்து 100 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சிறிதளவு நெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க 2,3 தடவை பேதியாகும். இது போல் 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது அவ்வப்போது செய்து வர ரத்தத்தை தூய்மையாக்கும்.

🌷 எட்டு விதமான சிறப்புகளைக் கொண்ட ஆஞ்சனேயர் !!

 🌷 எட்டு விதமான சிறப்புகளைக் கொண்ட ஆஞ்சனேயர் !!

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.
1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.
2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.
3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.‌ இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.
4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.
5. ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. ‌
இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.
"ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.‌ ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.
6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது.
ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
7. ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு. ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.
8. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது.
அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களின் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.

Thursday, 22 December 2022

*வாழ்க்கை எல்லோருக்கும்* *நிறைவாய் இருக்கிறது என்று எண்ணி விடாதீர்.*

 *வாழ்க்கை எல்லோருக்கும்*

*நிறைவாய் இருக்கிறது என்று எண்ணி விடாதீர்.*
*ஒருவரிடம் வீடு இருக்கும்! ஆனால், நிம்மதியான தூக்கம் இருக்காது!*
*ஒருவருக்கு அழகான மனைவி இருப்பாள்!*
*ஆனால், அவளோ பெரும் சண்டைக்காரியாக இருப்பாள்!*
*ஒருவருக்கு வீடு நிறைய பிள்ளை இருக்கும்! ஆனால் வருமானம் பற்றாக்றையாக இருக்கும்!.*
*ஒருவருக்குப் பிள்ளை இருக்காது! ஆனால்,வசதி வீடு நிரம்ப இருக்கும்!*
*ஒருவருக்குச் சாப்பிட ஆசை இருக்கும்!ஆனால், உணவு இருக்காது!*
*ஒருவருக்கு விரும்பிய உணவு கிடைக்கும்! ஆனால் சாப்பிட முடியாத அளவு நோய் இருக்கும்!*
*இளம் வயதில் நிறைய நேரம் உடலில் தெம்பும் இருக்கும் ஆனால் காசு இருக்காது.*
*நடுத்தர வயதில் உடலில் தெம்பும் இருக்கும் காசும் இருக்கும் ஆனால் நேரம் இருக்காது.*
*வயதான காலத்தில் நிறைய நேரம் இருக்கும் காசும் இருக்கும்.*
*ஆனால் உடலில் தெம்பு இருக்காது.*
*இளமையில் அழகைத்தேடி அலைபவர்கள் அறிந்து கொள்ளுங்கள்....*
*முதுமையில் அன்புதான் துணையாக இருக்கும்.*
*இப்படித்தான்_உலகம்*
*சரிதானே*

Saturday, 19 November 2022

ந‌ல்ல ம‌னிதனாக வாழு‌ங்க‌ள்

 

ந‌ல்ல ம‌னிதனாக வாழு‌ங்க‌ள்

ந‌ல்ல ம‌னிதனாக வாழ வே‌ண்டு‌ம் எ‌‌ன்றா‌ல் நம‌க்கு முத‌லி‌ல் ந‌ம்‌பி‌க்கையு‌ம், ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

ம‌ற்றவ‌ர்க‌ள் தவறு செ‌ய்தா‌ல் அதை ம‌ன்‌னி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்ற மன‌ப்ப‌க்குவ‌ம் இரு‌ப்பது ‌மிக‌ப்பெ‌ரிய ‌விஷய‌ம். ஆனா‌ல் ம‌ற்றவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் ‌நியாயமான தவறுகளை ம‌ன்‌னி‌க்கா‌வி‌ட்டாலு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் மறந்துவிடுங்கள்.

எ‌ப்போது‌ம் ந‌ம்மை ‌விட தா‌‌ழ்‌ந்தவ‌ர்களை ஒ‌ப்‌பி‌ட்டு‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட உய‌ர்‌ந்தவ‌ர்களை ஒ‌ப்‌பி‌ட்டு‌ப் பா‌ர்‌த்து அவ‌ர்க‌ள் பாதை‌யி‌ல் மு‌ன்னேற முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம். அதாவது, வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும், ஆனா‌ல் அதே சமய‌ம் பின்னோக்கியு‌ம் பார்க்க வேண்டும்.

எ‌தி‌ரி எ‌ன்று யாரையு‌ம் எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள். அவ‌ர்களது செய‌ல் உ‌‌ங்களை து‌ன்புறு‌த்‌தினா‌ல் அவ‌ர்களுடனான தொட‌ர்பை குறை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அவ‌ர்களை ப‌ழிவா‌ங்கவோ, த‌ண்டனை அ‌ளி‌க்கவோ முயல வே‌ண்டா‌ம். இதனை கடவு‌ளிட‌ம் ‌வி‌ட்டு‌விடு‌ங்க‌ள்.

ந‌ம்‌பி‌க்கையை எ‌ப்போது‌ம் இழ‌க்கா‌தீ‌ர்க‌ள். ந‌ம்‌பி‌க்கையை இழ‌ந்தவ‌ன் நடை‌பிண‌ம்.

ஒருவ‌ன் செ‌ய்த தவறு‌க்காக ம‌ற்றொரு தவறா‌ல் அவனு‌க்கு ப‌தி‌ல் கூறா‌தீ‌ர்க‌ள்.

ப‌சியோடு வ‌ந்தவரு‌க்கு ப‌சி ‌தீரு‌ங்க‌ள். தாக‌த்துட‌ன் வ‌ந்தவரு‌க்கு த‌ண்‌ணீ‌ர் கொடு‌ங்க‌ள். பகைவனாக இரு‌ந்தாலு‌ம் இதனை மறு‌க்கா‌தீ‌ர்க‌ள்.

ம‌ற்றவ‌ர்களை காய‌ப்படு‌த்து‌ம் வா‌ர்‌த்தைகளை ‌பிரயோ‌கி‌க்கா‌தீ‌ர்க‌ள். உ‌ங்க‌‌ளிட‌ம் அ‌ன்பை வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். சா‌ட்டையை இ‌ல்லை.

ஒரு ம‌னித‌ன் ச‌ெ‌ய்த தவறு‌க்காக அவனது குடு‌ம்ப‌த்தையே வெறு‌ப்பதோ த‌ண்டி‌ப்பதோ ‌நியாயம‌ல்ல. தவறுகளை சு‌ட்டி‌க்கா‌ட்டி ‌திரு‌ந்த வ‌ழி கொடு‌ங்க‌ள்.

ந‌ல்லது‌ம், ‌தீயது‌ம் ஒரே நப‌ரிட‌ம் இரு‌ப்ப‌தி‌ல்லை. இவைக‌ள் எ‌தி‌ரெ‌தி‌‌ர் பகைவ‌ர்க‌ள்.

கு‌ற்ற‌ம் பா‌ர்‌க்‌கி‌ன் சு‌ற்ற‌ம் இ‌ல்லை. ஒ‌வ்வொருவ‌ரிடமு‌ம் கு‌ற்ற‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ந்தா‌ல் உறவுக‌ள் இரு‌க்காது.

இ‌ந்த பூ‌மியை‌ப் படை‌க்கு‌ம் போது இறைவ‌ன், ம‌னித‌ர்க‌ள் அமை‌தியாகவு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியாகவு‌ம் வாழ வே‌ண்டு‌ம் எ‌ன்று ஆசை‌ப்ப‌ட்டா‌ன். ஆனா‌ல் அது நட‌க்க‌வி‌ல்லை. இறைவ‌னி‌ன் ஆசையே ‌நிறைவேறாதபோது, ம‌னித‌னி‌ன் ஆசைக‌ள் எ‌ம்மா‌த்‌திர‌ம். எனவே ஆசைக‌ள் அனை‌த்து‌ம் ‌நிறைவே‌று‌ம் எ‌ன்ற எ‌தி‌ர்பா‌ர்‌ப்பை ‌வி‌ட்டு‌வி‌‌ட்டு, ல‌ட்‌சிய‌ங்களை அடையு‌ம் வ‌ழி‌யி‌ல் ச‌ெ‌ல்லு‌ங்க‌ள்.

ம‌னித‌ன் ‌விழலா‌ம். அ‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌விழு‌ந்தே‌ ‌கிட‌க்க‌க் கூடாது.

யாரு‌ம் ம‌ற்றவ‌ர்களை ஏமா‌ற்ற முடியாது. ஒருவ‌ன் த‌ன்னை‌த்தா‌ன் ஏமா‌ற்‌றி‌க் கொ‌ள்ள முடியு‌ம்.

நீ‌ங்க‌ள் தவறு செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று உண‌ர்‌ந்தா‌ல் ம‌ன்‌னி‌ப்பு‌க் கோரு‌ங்க‌ள். ம‌ன்‌‌னி‌ப்பு தவறை‌க் குறை‌க்கு‌ம். ‌நியாய‌ப்படு‌த்துவதா‌ல் தவறு இர‌ட்டி‌ப்பா‌க்கு‌ம்.

Monday, 14 November 2022

நண்டு... கடகம்... இந்திரனின் சாபம் நீக்கிய கற்கடேஸ்வரர்; அருமருந்து நாயகியின் எண்ணெய்ப் பிரசாதம்!

 

நண்டு... கடகம்... இந்திரனின் சாபம் நீக்கிய கற்கடேஸ்வரர்; அருமருந்து நாயகியின் எண்ணெய்ப் பிரசாதம்!

அந்தக் கோயிலை நண்டாங்கோயில் என்கிறார்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில், திருவிசநல்லூர் திருத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளது திருந்துதேவன்குடி.

சின்னஞ்சிறிய கிராமத்தில் உள்ள மிக அற்புதமான கோயில் இது. காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருக்கோயில்களில் இதுவும் ஒன்று.
இந்தக் கோயிலில் அமைந்துள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீகற்கடேஸ்வரர்.

அதென்ன கற்கடேஸ்வரர்?

இந்திரன் தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, இந்தத் தலத்துக்கு வந்து, தவமிருந்தான். தினமும் சிவ பூஜைகளில் ஈடுபட்டான். பூஜைக்காக, தாமரை மலர்களைப் பறித்து வைத்திருந்தான். ஒருநாள்... சிவபூஜைக்காக தாமரைபூவை வைத்திருந்தார்.

அப்போது நண்டு ஒன்று அங்கே வந்தது. தாமரைப்பூ ஒன்றைக் கவ்வியது. தான் கவ்விக்கொண்ட தாமரையை எடுத்தபடி, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றதைக் கண்டான் இந்திரன். அதன் வழியிலேயே சென்றான்.

ஒருகட்டத்தில், தன் வாளினால் நண்டை தாக்க முனைந்தான் இந்திரன். அது சிவனாரை வேண்டியது. சிவலிங்கத் திருமேனியில் உள்ள துவாரத்தினுள்ளே சென்று நுழைந்துகொண்டது. சிவபெருமான் அங்கே எழுந்தருளினார். நண்டின் உயிரைக் காத்தருளினார். அப்படியே இந்திரனின் சாபம் தீர்த்தும் அருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

அற்புதமான கோயில். கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில். நண்டு, சிவலிங்கத் திருமேனியை வழிபட்ட சிற்பத்தை, இன்றைக்கும் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

இன்னொரு சரிதமும் உண்டு.

தீராத நோயால் அவதிப்பட்டு வந்தான் மன்னன். பார்க்காத வைத்தியமில்லை. போகாத ஆலயமில்லை. கடும் சிவ பக்தனான மன்னன், சதாசர்வ காலமும் சிவனாரை நினைத்து பூஜித்து வந்தான். ஒருநாள்... முதியவராக, வைத்தியராக வந்த சிவபெருமான், மன்னனின் நோயைத் தீர்த்தருளினான் என்கிறது ஸ்தல வரலாறு. இதனால் இங்கே உள்ள சுவாமிக்கு, அருமருந்துடையார் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் நண்டு பூஜித்த சிவன் என்பதால், கற்கடேஸ்வரர் எனும் திருநாமமும் அமைந்தது. கற்கடம் என்றால் நண்டு.

கருங்கல் கட்டுமானம் கொண்ட அற்புதமான ஆலயம். அகழி அமைக்கப்பட்ட திருக்கோயில். அம்பாளின் திருநாமம் அருமருந்து நாயகி. இன்னொரு அம்பாளும் இங்கே உண்டு. இவளுக்கு அபூர்வநாயகி எனும் திருநாமம்.

அருமருந்து நாயகிக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்வது இங்கே சிறப்பு வாய்ந்தது. அபிஷேகித்த எண்ணெய்ப் பிரசாதத்தை உட்கொண்டால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

திருந்துதேவன்குடி எனும் தலத்தில் குடிகொண்டிருக்கும் கற்கடேஸ்வரர் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையேனும் வந்து தரிசிப்பது மகா விசேஷம். நோய்கள் நீங்கப்பெற்று, ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

முக்கியமாக, கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தலம் என்பதால், வீட்டிலேயே கற்கடேஸ்வரரை நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்

Wednesday, 2 November 2022

புலவர் கீரனின் கம்ப ராமாயண உரை கேட்டிருக்கிறீர்களா?


 புலவர் கீரனின் கம்ப ராமாயண உரை கேட்டிருக்கிறீர்களா?

நான் சமீபத்தில்தான் கேட்டேன். அசந்துபோனேன்.

ஒரு கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார், மாணவர்களை முன்னால் உட்காரவைத்துக்கொண்டு ‘யாராவது நடுவுல பேசினீங்கன்னா பிச்சுப்புடுவேன்’ என்று அதட்டிவிட்டு ராமாயணப் பாடம் எடுக்கத் தொடங்கியதுபோல் ஒரு தொனி அவருடையது. Interactionக்கு வாய்ப்பே இராது. யாராவது Interact செய்ய நினைத்தால் அடித்துவிடுவாரோ என்கிற அளவுக்கு வேகம். பல நேரங்களில் அவர் கையில் இருப்பது மைக்கா அல்லது பிரம்பா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.

ஆனால் அதேசமயம், கீரனின் பேச்சுப் பாணியின் பலம், நாம் குறுக்கிட்டுக் கேள்வி கேட்கவேண்டிய அவசியமே எழாது. ஒவ்வொரு விஷயத்தையும் அத்தனை தெளிவான உதாரணங்களுடன் புட்டுப்புட்டு வைத்துவிடுகிறார்.

சில பிரபல சொற்பொழிவாளர்கள் பழந்தமிழ்ப் பாடல்களை Quote செய்யும்போது ‘எனக்கு எத்தனை தெரிஞ்சிருக்கு பாரு’ என்கிற அதிமேதாவித்தனம்தான் அதில் தெரியும். வேண்டுமென்றே சொற்களைச் சேர்த்துப் பேசி (அல்லது பாடி) பயமுறுத்துவார்கள்.

கீரனிடம் அந்த விளையாட்டே கிடையாது. ஒவ்வொரு பாடலையும் அவர் அழகாகப் பிரித்துச் சொல்கிறபோது, ‘அட, இது கம்ப ராமாயணமா கண்ணதாசன் எழுதின சினிமாப் பாட்டா?’ என்று நமக்கு ஆச்சர்யமே வரும். அத்தனை அக்கறையுடன் பாடல்களைப் பதம் பிரித்து, கடினமான சொற்களுக்கு எவருக்கும் புரியும்படி எளிமையான விளக்கங்களைச் சொல்லி, அதற்கு இணையான பாடல்களை எங்கெங்கிருந்தோ எடுத்து வந்து உதாரணம் காட்டி… அவர் தனது ஒவ்வொரு சொற்பொழிவையும் எத்தனை அக்கறையுடன் தயாரிப்பாராக இருக்கும் என்று வியக்கிறேன்.

கம்ப ராமாயணத்தில் தொடங்கி அவரது பல உரைகளைத் தேடிப் பிடித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதுவரையில் என் கண்ணில் (காதில்) பட்ட ஒரே குறை, மேடைப்பேச்சு என்பதாலோ என்னவோ, பலமுறை சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘பரதன் என்ன செய்தான் என்றால்… பரதன் என்ன செய்தான் என்றால்…’ என்று அவர் நான்கைந்து முறை இழுக்கும்போது நமக்குக் கடுப்பாகிறது. (ஆனால் ஒருவேளை அவர் எதையும் தயார் செய்துகொள்ளாமல் பேசுகிறவராக இருந்தால், இப்படி ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது அடுத்த வாக்கியத்தை யோசிப்பதற்கான இடைவெளியைப் பெற்றுக்கொள்ளும் உத்தியாக இருக்கலாம்).

மிகவும் உணர்ச்சிமயமான பேச்சு என்பதால், சில நேரங்களில் கீரன் தேர்ந்த நடிகரைப்போலவும் தெரிகிறார். குறிப்பாகக் கைகேயி காலில் விழுந்து தசரதன் கதறும் இடத்தை விவரிக்கும்போது எனக்கு ‘வியட்நாம் வீடு’ சிவாஜி கணேசன்தான் ஞாபகம் வந்தார். குறையாகச் சொல்லவில்லை, அத்தனை உணர்ச்சியுடன் கம்பனைச் சொல்லக் கேட்பது தனி சுகமாக இருக்கிறது.

அதேசமயம், கீரன் மிகப் புத்திசாலித்தனமாக இன்னொரு வேலையும் செய்கிறார். ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கு இணையான வாதங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, கம்பன் பாடல்களில் இருந்தே அருமையான உதாரணங்கள் காட்டி அதை நிறுவுகிறார். சும்மா ஒரு ‘Assumption’போலத் தொடங்கிப் படிப்படியாக அதை நிஜம் என்று அவர் விரித்துக் காண்பிக்கும்போது நம் மனத்தில் ஏற்படும் பரவசம் சாதாரணமானதல்ல.

அதாவது, ஒருபக்கம் Rational thought process, இன்னொருபக்கம் அதைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த Emotional outburst பாணிப் பேச்சு. ஒன்றுடன் ஒன்று கொஞ்சம்கூடப் பொருந்தாது எனத் தோன்றும் இருந்த இரு விஷயங்கள், கீரனிடம் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கின்றன. அவர் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கின்றன.

இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன்: பரதன் & வாலி.

ராமாயணத்தில் பரதன் ஒரு துணைப் பாத்திரம்தான். அவன் நல்லவன் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் பரதனை யாருமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தொடங்குகிறார் கீரன்.

அதுவும் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, ஆறு முறை, ஆறு பேர் பரதனின் நல்ல மனத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனைப் புண்படுத்துகிறார்கள். இந்தக் காலச் சினிமாப் பாத்திரமாக இருந்தால் அவன் ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டீங்களாய்யா?’ என்று ஆறு முறை புலம்ப நேர்ந்திருக்கும்.

யார் அந்த ஆறு பேர்? அவர்கள் பரதனை ஏன் புரிந்துகொள்ளவில்லை?

1. பரதனின் தாய் கைகேயி

கூனி சொன்னதைக் கேட்டுப் பரதனை அரசனாக்கத் துணிந்தாள். ஏதேதோ நாடகங்கள் ஆடினாள், அவள் இத்தனையையும் செய்தது பரதனுக்காகதான்.

ஆனால் ஒரு விநாடிகூட, ‘பரதன் இந்த ஆட்சியை ஏற்றுக்கொள்வானா?’ என்று அவள் யோசிக்கவே இல்லை. ‘அவன் இதை நிச்சயமாக மறுத்துவிடுவான்’ என்கிற உண்மை அவளுக்குப் புரிந்திருந்தால், இத்தனை சிரமப்பட்டிருப்பாளா?

2. பரதனின் தந்தை தசரதன்

கைகேயி நாடகத்தைக் கண்டு, வேறு வழியில்லாமல் அவளுக்கு இரண்டு வரங்களைத் தந்து மயங்கி விழும் தசரதன் ‘நீ என் மனைவி இல்லை’ என்கிறான். நியாயம்தான்.

ஆனால் அடுத்த வரியிலேயே ‘ஆட்சி செய்வதற்காக வந்துகொண்டிருக்கும் பரதன் என் மகன் இல்லை’ என்கிறான் தசரதன். இது என்ன நியாயம்?

ஆக, பரதனும் இந்த விஷயத்தில் கைகேயிக்குக் கூட்டு, இப்போது அவன் அரசன் ஆகிற கனவோடு கிளம்பி வந்துகொண்டிருக்கிறான் என்று தசரதன் நினைக்கிறான். பரதன் ஒருபோதும் அப்படி நினைக்கமாட்டான் என்று அவனுக்கும் புரியவில்லை.

3. பரதனின் சகோதரன் லட்சுமணன்

ஆட்சி ராமனுக்கு இல்லை, பரதனுக்குதான் என்று தெரிந்தவுடன் லட்சுமணன் போர்க்கோலம் அணிகிறான். ‘சிங்கத்துக்கு வைத்த சாப்பாட்டை நாய்க்குட்டி தின்பதா?’ என்றெல்லாம் கோபப்படுகிறான். ‘பரதனை வென்று உன் நாட்டை உனக்குத் திருப்பித் தருவேன்’ என்று ராமனிடம் சொல்கிறான்.

ஆக, அவனுக்கும் பரதனைப் புரியவில்லை. ஏதோ பரதன்தான் சூழ்ச்சி செய்து அரசனாகிவிட்டதாக எண்ணி அவனை எதிர்க்கத் துணிகிறான்.

பின்னர் காட்டில் பரதன் ராமனைத் வருவதை முதலில் பார்ப்பவனும் லட்சுமணன்தான். அப்போதும் அவன் இதேமாதிரி உணர்ச்சிவயப்படுகிறான். பரதன் பதவி ஆசை பிடித்தவன் என்றே நினைக்கிறான்.

4. ராமனின் தாய் கோசலை

பரதன் நாடு திரும்புகிறான். நடந்ததையெல்லாம் உணர்ந்து புலம்புகிறான். தாயைத் திட்டுகிறான். நேராக ராமனின் தாய் கோசலை காலில் போய் விழுகிறான். அழுகிறான்.

உடனே, கோசலை சொல்கிறாள், ‘என்னய்யா இது? அப்படீன்னா உங்கம்மா செஞ்ச சூழ்ச்சியெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா?’

ஆக, கோசலையும் அவனைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு நாளாகக் கைகேயி உடன் சேர்ந்து பரதனும் நாட்டைத் திருடத் திட்டமிட்டிருப்பதாகவே நினைத்திருக்கிறாள்.

5. பரதனின் குல குரு வசிஷ்டர்

இந்த நேரத்தில், வசிஷ்டர் பரதனை அணுகுகிறார். ‘பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கட்டுமா?’ என்று கேட்கிறார்.

இவரும் பரதனின் மனோநிலையை உணரவில்லை. அவன் ராமனைத் திரும்ப அழைத்துவந்து நாட்டை அவனுக்கே தர விரும்புவதை உணராமல் நாட்டுக்கு அடுத்த ராஜாவை முடி சூட்டும் தன்னுடைய வேலையில் குறியாக இருக்கிறார். உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே கிடையாதாய்யா?

6. குகன்

பரதனின் மனத்தை அவனது சொந்தத் தந்தை, தாய், பெரியம்மா, தம்பி, குல குருவே உணராதபோது, எங்கோ காட்டில் வாழும் வேடன் குகன் உணர்வானா? அவனும் பரதனை முதன்முறை பார்த்துவிட்டுப் போர் செய்யத் துடிக்கிறான். ‘எங்க ராமனைக் கொல்லவா வந்திருக்கே? இரு, உன்னைப் பிச்சுப்புடறேன்’ என்று குதிக்கிறான்.

ஆக, எந்தப் பிழையும் செய்யாத பரதன்மீது ஆறு முறை, ஆறு வெவ்வேறு மனிதர்கள் அடுத்தடுத்து  சந்தேகப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்களும் நானும் என்ன செய்திருப்போம் என்று கொஞ்சம் யோசியுங்கள்.

அப்படியானால், உண்மையில் பரதனைப் புரிந்துகொண்டவர்கள் யார்? ‘ஆயிரம் ராமர் உனக்கு இணை ஆவார்களோ’ என்ற வசனமெல்லாம் எப்போது, யார் சொன்னது? கம்பனைத் தேடிப் படியுங்கள், அல்லது கீரனைத் தேடிக் கேளுங்கள் Winking smile

இரண்டாவது உதாரணம், வாலி. இவனை மூன்றாகப் பிரிக்கிறார் கீரன்:

1. குரங்கு வாலி

2. மனித வாலி

3. தெய்வ வாலி

வாலி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். தம்பியைத் தவறாக நினைத்து அவனை உலகம் முழுக்கத் துரத்திக் கொல்லப்பார்த்தவன். பிறகு ஒரு சாபம் காரணமாக அவனைப் போனால் போகிறது என்று விட்டுவைத்தவன்.

இந்தத் தம்பிக்கு ஒரு துணை கிடைக்கிறது. வாலியைத் தந்திரத்தால் கொல்வதற்காக வருகிறான். ‘டாய் அண்ணா, தைரியம் இருந்தா என்னோட மோத வாடா’ என்று அலறுகிறான்.

உடனே, வாலி ஆவேசமாக எழுகிறான். தம்பியைக் கொல்ல ஓடுகிறான்.

வழியில், வாலியின் மனைவி தாரை அவனைத் தடுத்து நிறுத்துகிறாள். ‘போகாதே, போகாதே, என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று பாடுகிறாள்.

‘சொப்பனமாவது, சோன் பப்டியாவது, நான் அந்த சுக்ரீவனை நசுக்கிப் பிழிஞ்சு கொன்னுட்டுதான் வருவேன்’ என்கிறான் வாலி.

இவனைதான் ‘குரங்கு வாலி’ என்கிறார் கீரன். அதாவது, சொந்தத் தம்பியையே கொல்லத் துடிக்கும் மிருக குணம்.

தாரை வாலிக்குப் புத்தி சொல்கிறாள். ‘நேற்றுவரை உனக்குப் பயந்து ஒளிந்திருந்தவன் இன்று உன்னுடன் மோத வருகிறான் என்றால், ஏதோ காரணம் இருக்குமல்லவா?’

‘என்ன பெரிய காரணம்?’

‘ராமன் அவனுக்குத் துணையாக இருக்கிறானாம். சுக்ரீவனுடன் நீ மோதும்போது அந்த ராமன் உன்னை ஏதாவது செய்துவிட்டால்?’

வாலி சிரிக்கிறான். ‘பைத்தியக்காரி, ராமன் எப்பேர்ப்பட்டவன் என்று தெரியுமா? அவன் எங்களுடைய சண்டைக்கு நடுவில் வருவான் என்று நினைத்தாயே, உனக்குக் கிறுக்குதான் பிடித்திருக்கிறது!’ என்கிறான்.

இந்தக் கணம் தொடங்கி, அவன் ’மனித வாலி’ ஆகிவிடுகிறான் என்கிறார் கீரன். ராமன்மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை.

பின்னர் அதே ராமன் வாலியை மறைந்திருந்து கொல்கிறான். அவனிடம் ஏகப்பட்ட நியாயங்களைப் பேசுகிறான், வாதாடுகிறான் வாலி. இவை எல்லாமே மனித குணங்கள்.

நிறைவாக, ராமனிடம் வாலி ஒரு வரம் கேட்கிறான். ‘என் தம்பி சுக்ரீவன் ரொம்ப நல்லவன், என்ன, கொஞ்சம் சாராயம் குடிச்சா புத்தி மாறிப்புடுவான், அப்போ தன்னையும் அறியாமல் ஏதாவது பிழை செய்துவிடுவான், அந்த நேரத்துல நீ அவன்மேலே கோபப்படாதே, என்னைக் கொன்ற அம்பால் நீ அவனைக் கொன்றுவிடாதே!’

ஆக, சற்றுமுன் தம்பியைக் கொல்லத் துடித்த வாலி, இப்போது அவன் உயிரைக் காப்பதற்காக ராமனிடம் வரம் கேட்கிறான். இதைத் ‘தெய்வ வாலி’ என்கிறார் கீரன்.

இந்த மூன்று வகை வாலிகளையும் கம்பன் பாடல்களில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்களுடன் அவர் விளக்கியது ஒரு சிறு நூலாகவும் வெளியாகியுள்ளது. இப்போது அச்சில் இல்லை.

நூல்மட்டுமா? கீரனின் பேச்சுகள்கூட இப்போது பரவலாக விற்பனையில் இல்லை. இணையத்தில் சிலது கிடைக்கின்றன. சிடி வடிவில் ஆனந்தா கேஸட்ஸ் வெளியிட்ட நான்கு பேச்சுகள்மட்டும் விற்பனையில் உள்ளன(எனக்குத் தெரிந்து).

கம்ப ராமாயண உரையைக் கேட்டபின், கீரனின் மற்ற சொற்பொழிவுகளையும் எப்படியாவது கேட்டுவிடவேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை. அவரது கேஸட்களை வெளியிட்ட வாணி, ஆனந்தா நிறுவனங்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தேன். ’ரைட்ஸ்லாம் எங்ககிட்டதான் இருக்கு, ஆனா இப்போதைக்கு வெளியிடற திட்டம் இல்லை’ என்றார்கள் அதட்டலாக.

‘ஏன்? எப்போ வெளியிடுவீங்க!’

‘அதெல்லாம் தெரியாது’ என்றார்கள். ‘நீ எப்ப ஃபோனை வைக்கப்போறே?’ என்றுமட்டும் கேட்கவில்லை. அவ்வளவே.

இதுமாதிரி அட்டகாசமான contentகளின் உரிமையைக் கையில் வைத்துக்கொண்டு அதை வெளியிடாமல் கடுப்பேற்றுகிறவர்களை என்ன செய்வது? கேசட், சிடி, மார்க்கெட்டிங் போன்றவை சிரமம், கீரன் விலை போகமாட்டார் எனில், iTunesபோல அதிகச் செலவில்லாத On Demand Content Delivery Platforms பயன்படுத்தலாமே, இதெல்லாம் தமிழ் Content Publishersக்குப் புரியக் குத்துமதிப்பாக எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?


Friday, 21 October 2022

நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!


 


இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

சத்தத்தில் சங்கீதம் இருக்கு -  அதை கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.

என்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.

இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள்  மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.

இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம்
குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால்

பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.

!!நோய் தீர்க்கும்  ராகங்கள்!!

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்
என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா  என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம்.

நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம்,
தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர்

நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக்
கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்

* பாடல்  :      சலங்கயிட்டால் ஒரு மாது

   படம்     :      மைதிலி என்னைக் காதலி

* பாடல்  :      செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    படம்      :      முள்ளும் மலரும்

 அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்

* பாடல்  :     கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்

    படம்    :     தென்றலே என்னைத் தொடு

* பாடல்  :     நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம்

   படம்    :     கேளடி கண்மணி

* பாடல்  :     பூப்பூக்கும் மாசம் தை மாசம் - மலையமாருதம்

    படம்    :     வருசம் 16

 * பாடல்  :     உள்ளத்தில் நல்ல உள்ளம் - சக்கரவாகம்

    படம்    :     கர்ணன்

* பாடல்  :     ஓராறு முகமும் ஈராறு கரமும்

   படம்    :     டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்

* பாடல்  :     நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

    படம்    :     தியாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

*பாடல்:  தூங்காத விழிகள் ரெண்டு.

படம் :   அக்னி நட்சத்திரம்

 கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி

*பாடல்:   கண்ணுக்கு மை அழகு

  படம் :    புதிய முகம்

*பாடல்:   உன்னை ஒன்று கேட்பேன்

  படம்  :   புதிய பறவை

*பாடல்:   ஒரே பாடல் உன்னை அழைக்கும்

  படம்  :   எங்கிருந்தோ வந்தாள்.

*பாடல்:   பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்

  படம்  :   வருசம் பதினாறு.

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா,

நீலாம்பரி

*பாடல்:     நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி

படம்  :     கோபுர வாசலிலே

*பாடல்:     வசந்த காலங்கள் இசைந்து -  ஸ்ரீ ரஞ்சனி

 படம் :     ரயில் பயணங்களில்

*பாடல்:    மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி

  படம்  :    டூயட்

*பாடல்:    கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் - ஆனந்த பைரவி

  படம்  :    டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.

*பாடல்:    வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி - நீலாம்பரி

  படம்  :    சிப்பிக்குள் முத்து.

*பாடல்:  பூவே இளைய பூவே - நீலாம்பரி

  படம்  :  கோழி கூவுது

*பாடல்:  சித்திரம் பேசுதடி என் சிந்தை - கமாஸ்

  படம்  :  சபாஷ் மீனா

மனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்

*பாடல் :  காலம் மாறலாம் நம் காதல்  - அம்சத்வனி

  படம்  :   வாழ்க்கை

*பாடல்:   சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் - பீம்பிளாஸ்

  படம்  :   நல்லதொரு குடும்பம்

*பாடல்:   தோகை இளமயில் ஆடி வருகுது - அம்சத்வனி

  படம்  :   பயணங்கள் முடிவதில்லை

*பாடல்:   வா…வா…வா… கண்ணா வா -அம்சத்வனி

   படம்  :   வேலைக்காரன்

*பாடல்:    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - பீம்பிளாஸ்

  படம்  :    திருவிளையாடல்

*பாடல்:    பன்னிரு விழிகளிலே பணிவுடன்

  படம்  :    சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்

*பாடல்:   அழகென்ற சொல்லுக்கு முருகா

  படம்  :   டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்

*பாடல்:   வாராய் நீ வாராய்

  படம்  :  மந்திரி குமாரி

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் -  பகாடி,  ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான

*பாடல்:  யார் தருவார் இந்த அரியாசனம் - அடான

படம்  :  சரஸ்வதி சபதம்

*பாடல்:  வருகிறார் உனைத் தேடி - அடான

படம் :  அம்பிகாபதி

மனதை வசீகரிக்க, மயக்க -  ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

*பாடல் :  தானா வந்த சந்தனமே - கரகரப்பிரியா

படம்   : ஊருவிட்டு ஊரு வந்து

*பாடல் : கம்பன் எங்கே போனான் - கரகரப்பிரியா

படம்  :  ஜாதிமல்லி

*பாடல்:  மெட்டுப்போடு மெட்டுப்போடு - ஆனந்த பைரவி

படம்  :  டூயட்

*பாடல்:  சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா - கரகரப்பிரியா

படம்  :  அழகன்

*பாடல்:  மாதவிப் பொன் மயிலாள் - கரகரப்பிரியா

படம் :  இருமலர்கள்

சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா

*பாடல்:  கனவு கண்டேன் நான் - முகாரி

படம்  :  பூம்புகார்

*பாடல்:  சொல்லடி அபிராமி

படம்  :  ஆதிபராசக்தி

பாடல்:  எந்தன் பொன் வண்ணமே அன்பு

படம்  :  நான் வாழவைப்பேன்

பாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர -ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர - நாஜீவதாரா

 எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?

திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு
வரையறை கூறுகிறார்.

நேரம் - ராகம்

5-6 மணி (காலை நேரம்)
பூபாளம்

6-7  மணிக்கு
பிலஹரி

7-8 மணிக்கு
தன்யாசி

8-10 மணிக்கு
ஆரபி, சாவேரி

10-11 மணிக்கு
மத்யமாவதி

11-12 மணிக்கு
மனிரங்கு

12-1 மணி (மதிய நேரம்)
ஸ்ரீராகம்

1-2 மணிக்கு
மாண்டு

2-3 மணிக்கு
பைரவி, கரகரப்பிரியா

3-4 மணிக்கு
கல்யாணி, யமுனா கல்யாணி

4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்

இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. . பாட்டைக் கேட்டல் நோய் தீரும்
என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த
ராகங்களில் உள்ளது.

 இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும்  ரசிப்போம்  அமைதி பெறுவோம்.

நன்றி....

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...