அன்றே சொன்னார்கள் !!! மேலே... உயரே... உச்சியிலே..!!!
பல நேரங்களில் நமக்குள் சில கேள்விகள் எழுவது உண்டு. 'சேவல்கள் ஏன்
முட்டையை அடைகாப்பது இல்லை? ஏன், கோழிகள் மட்டுமே குஞ்சுகளைப்
பராமரிக்கின்றன? கன்றைப் பார்க்கும் பொறுப்பு ஏன் பசுவிடம் மட்டுமே
இருக்கிறது? மனிதர்களில்கூட, எப்போதும் தாய்தானே குழந்தையைத் தொடக்கக்
காலத்தில் அதிகம் கவனிக்கிறாள்?’ இப்படியான கேள்விகள் எழாமல் இல்லை.
'குழந்தை நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்று சொன்னால்
பெண்ணிய அமைப்பினர் கோபம் அடைகிறார்கள். பொன்முடியார் என்றொரு சங்க காலப்
புலவர்; 'மகனைச் சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை’ என்கிறார் அவர். எல்லா
உயிரினங்களிலும் தாய்க்கே பொறுப்பு என்று சொல்ல முடியாது. 'ஃபேலரோப்’
என்கிற பறவையினத்திலும், புள்ளியுள்ள 'சாண்ட்பைப்பர்’ என்னும்
பறவையினத்திலும் முட்டையை அடைகாக்கும் பொறுப்பை ஆணே கவனிக்கிறது. குஞ்சுகளை
வளர்ப்பதும் ஆண்தான். அதைப் போலவே, கடற்குதிரைகளிலும் முட்டைகளை ஆண்களே
அடைகாக்கின்றன. சிலவகைத் தேரைகளில் முட்டைகளை வாயில் வைத்து, அவை
பொரியும்வரை காத்திருப்பது ஆணினம்தான்.
'இப்படிப்பட்ட வித்தியாசங்கள் உயிரினங்களில் ஏன் இருக்கின்றன?’ என்கிற
கேள்விக்குப் பரிணாம வளர்ச்சி பதில் சொல்கிறது. அல்பட்ராஸ்களில் ஆணும்
பெண்ணும் உணவைக் கொண்டு வந்து தருகின்றன. நெருப்புக் கோழிகளிலோ ஆண்தான்
உணவு தருகிறது. ஹம்மிங் பறவைகளில் பெண்தான் உணவைக் கொண்டு வந்து
ஊட்டுகிறது.
'குழந்தைகளை ஆண் பாதுகாக்க வேண்டுமா? பெண் வளர்க்க வேண்டுமா?’ என்ற
கேள்விக்கு விடை காண, ஓர் உதாரணத்தை நாம் பார்க்க வேண்டும். இரண்டு பேர்
சேர்ந்து ஒரு பொருளை வாங்குகிறார்கள். ஒருவர் அதற்கு 500 ரூபாய் முதலீடு
செய்கிறார், இன்னொருவர் 50 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், அதிகம்
முதலீடு செய்தவரே அந்தப் பொருளை அதீத கவனத்துடன் பாதுகாப்பார். ஏனென்றால்,
பொருள் தொலைந்துபோனால் அதிக நட்டம் அவருக்கே! அதைப் போலவே சினையூட்டப்பட்ட
முட்டையில் யார் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே
பாதுகாப்பு நடக்கிறது. பல நேர்வுகளில் பெண்ணினமே அதிக முதலீடு செய்வதால்,
அவை அதிகம் பாதுகாப்பை வழங்குகின்றன.
முழுமையடைந்த பெண் சினை முட்டை ஓர் உயிரணுவைவிட பத்து லட்சம் மடங்கு அதிக
கனபரிமாணத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு ஒரு சினை முட்டைதான்
உற்பத்தியாகும். எனவே, மனித இனத்திலும் தாய் அதிகப் பங்கை வகிக்கிறாள்.
280 நாட்கள் கர்ப்ப காலம் இருப்பதால், தன் குழந்தையை மிக உன்னிப்பாகக்
கவனித்துக் காப்பாற்றுவது, மனரீதியான பொறுப்பாகவும் தாய்க்கே
அமைந்துவிடுகிறது.
சில மீன் இனங்களில் வித்தியாசமான இனப்பெருக்கம் நடக்கிறது. பெண் இனமும்,
ஆண் இனமும் முட்டைகளையும், உயிரணுக்களையும் ஒரே நேரத்தில் தண்ணீரில்
வெளியிடுகின்றன. அங்கே சினை உடலுக்கு வெளியே உண்டாகிறது. அப்போது இரண்டு
பெற்றோருமே அதைக் கவனிப்பதில்லை. அது, தானாக தன்னைப் பார்த்துக்கொள்கிற
கட்டாயம் ஏற்படுகிறது. புள்ளியுள்ள சாண்ட் பைப்பர் பறவை இனத்தில், தாயின்
எடையில் ஐந்தில் ஒரு பங்கு, அதன் ஒரு முட்டை இருக்கிறது. நான்கு முட்டைகள்,
எண்பது சதவிகித எடையை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவற்றைப்
பாதுகாக்கும்போது தாய்ப் பறவை முழுவதுமாக வலுவிழந்து போய்விடும். எனவே, ஆணை
அடைகாக்கச் செய்துவிட்டு, இழந்த எடையை மீண்டும் அடைவதற்கு அது இரை தேடச்
சென்றுவிடுகிறது.
மனித இனத்தைப் பொறுத்தவரையில், குழுவாக வேட்டையாட வெளியே செல்லுகை யில்,
தன் இணையை வேறொருவர் கவர்ந்து கொள்ளாமல் இருக்க, ஓர் அமைப்பு தேவைப்பட்டது.
வேட்டையாடுவது கூட்டுறவால் மட்டுமே சாத்தியம். எனவே, கர்ப்பம்
தரித்திருக்கும்போதும், குழந்தை பிறந்த பிறகும் தாயையும், குழந்தையையும்
உணவு தந்து பாதுகாப்பதுதான் மரபுக்கூறுகள் செழிப்பதற்கான வழிமுறை.
அப்படிப்பட்ட கூட்டுப் பராமரிப்பு, 'குடும்பம்’ என்கிற அமைப்பை
உருவாக்கியது. தாய்வழிச் சமூகம் மருவி, கணவன்- மனைவி என்ற அமைப்பைச் சிறிது
சிறிதாகப் பெற்றது. ஆனாலும், குழந்தை வளர்ப்பில் அதிக முதலீடு பெண்ணைப்
பொறுத்தே இருக்கிறது.
மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு... அரசன் ஒருவன் வேட்டையாடக் கிளம்பினான்.
பிம்பவனம் என்னும் வனத்தில் பிரவேசித்து, வழி தவறினான். அப்போது, அங்கே
அதிசய மரம் ஒன்றைக் கண்டான். அந்த மரத்தின் நிழலும் பச்சையாய் இருந்தது.
'வழக்கமாக நிழல்கள் கருமையாய் இருக்கும். இங்கு பச்சையாய் இருக்கிறதே!’
என்று அரசனுக்கு வியப்பு. அதன் நிழலில் தங்கினான். தன்னையே மறந்து, அதன்
குளிர்ச்சியில் உச்சி குளிர்ந்தான்; உறங்கி எழுந்தான்.
விழிகளிலிருந்து தூக்கம் விடைபெற்றபோது, தான் ஒரு பெண்ணாக மாறியிருப்பதை
உணர்ந்தான். ஏற்கெனவே எட்டுக் குழந்தை களுக்கு அவன் தகப்பன். பெண்ணாக
ஆனதும், வெட்கம் அடைந்தான். எனவே, சொந்த ஊர் திரும்பாமல் அந்த வனத்திலேயே
அலைந்து திரிந்தான்.
அப்போது, வேடுவன் ஒருவன் எதிர்ப்பட் டான். இவனைக் கண்டு மோகத்தில் தவித்
தான். சங்கமம் நடந்தது. பெண்ணாக மாறிய மன்னன், எட்டுப் பிள்ளைகளுக்குத்
தாயானான். வேடுவனுக்கு விதி பாம்பு ரூபத்தில் வந்தது. அது தீண்டவே, அவன்
மாண்டான்.
அரசன், வேடுவனுக்குப் பிறந்த குழந்தை களோடு, தன் தேசத்துக்குப்
புறப்பட்டான். அரண்மனைக்கும் திரும்பினான். விஷயத்தைச் சொன்னான். தந்தையாக
இருந்து பெற்ற எட்டு பிள்ளைகளையும், தாயாக இருந்த பிரசவித்த எட்டு
பிள்ளைகளையும் ஒன்றாக வளர்த்தான்.
சில காலத்துக்குப் பின், மறுபடியும் பயணம் சென்றான். பிம்பவனத்தைக் கடக்க
ஆசை கொண்டான். அதே மரத்தின் அதே பச்சை நிழலில் மறுபடி உறங்கினான். இம்முறை
விழித்தபோது, ஆணாகி இருந்தான். அவன் நாடு திரும்பிய பின்னர், அவனது
பிள்ளைகள் தாய் வகை, தந்தை வகை என இரண்டு வகையாகப் பிரிந்து, ஒருவரோடொருவர்
முட்டிக்கொண்டார்கள். தீராத வன்மம், மாறாத கோபத்துடன் சண்டையிட்டு,
பதினாறு பேரும் பலியாகினர்.
பிள்ளைகள் மடிந்த வேதனையைத் தாளாமல், அரசன் மீண்டும் பிம்பவனம் வந்தான்.
அந்த அதிசய மரத்திலேயே தூக்கிட்டுச் சாக முனைந்தான். அப்போது மரம்,
''உனக்கு ஏன் இத்தனை சோகம்?' என்று கேட்க, ''என் அத்தனை பிள்ளைகளும்
அழிந்தனரே!' என்றான் அவன்.
'சரி, உனது எந்தப் பிள்ளைகள் உயிரோடு மீள வேண்டும் என விரும்புகிறாய்? நீ
பெண்ணாக இருந்தபோது பிறந்தவர்களா? ஆணாக இருந்தபோது பிறந்தவர்களா? சொன்னால்,
அவர்களை மட்டும் உயிர்ப்பித்துத் தருகிறேன்' என்றது மரம்.
சற்றும் தயக்கமின்றி, 'நான் பெண்ணாக இருந்தபோது பிறந்தவர்களே எனக்கு
வேண்டும்' என்றான் அரசன். மரம் அவர்களை உயிர்ப்பித்தது. கூடவே, தனக்கு ஆண்
உருவம் வேண்டாம்; பெண் உருவே தேவை எனக் கேட்டான்.
'ஏன்?' என்றது மரம். 'ஆணை விடவும் பெண்ணே பலசாலி. அவளே வலியவள்; வளர்பவள்' என்றான் மன்னன். மரம் அவனைத் திரும்பவும் பெண்ணாக்கியது.
இன்று பரிணாம வளர்ச்சியும் விலங்கியலும் குறிப்பிடுவதை இந்தக் கதை அப்போதே குறிப்பிட்டிருக்கிறது.
எக்ஸ் - ஒய் என்னும் மரபுக்கூறுகளே (ஜீன்) குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத்
தீர்மானிக்கின்றன. அதைக் கண்டுபிடித்தவர்கள் லோவல் பேட்ஜ், பீட்டர்
குட்ஃபெல்லோ ஆகியோர். இந்த மரபுக்கூறே ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும்
இடைவெளிக்குக் காரணம். எல்லாச் சமூகங்களிலும் பெண்ணே ஆணைவிட அதிக ஆண்டுகள்
உயிர் வாழ்கிறாள். ஆண்களின் உடலில் இருக்கும் அதிக டெஸ்டோஸ்டிரான், அதிக
ரிஸ்க் எடுத்து ஆபத்துகளைச் சந்திக்கத் தூண்டுகிறது. அதுதான் வேகமாகக் கார்
ஓட்டுவது, கோபமாகச் சண்டை போடுவது, புகைப்பது, மது அருந்துவது
போன்றவற்றுக்குக் காரணமாக இருக்கிறது. பெண்களின் ஈஸ்ட்ரோஜன் இதய
நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
பெண்களில் இருக்கும் எக்ஸ் குரோமோசோம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மரபுக்கூறுகளை வைத்திருக்கிறது. அவற்றில் சில, உடலின் இயக்கத்தை
இருபாலிலும் தீர்மானிக்கின்றன. ஆனால், குழந்தை ஆண் என்று தீர்மானிக்கும்
ஒய் குரோமோசோமில் நூற்றுக்கும் குறைவான மரபுக்கூறுகளே இருக்கின்றன.
ஒருகாலத்தில், ஒய் குரோமோசோமிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜீன்கள்
இருந்தன. ஆனால், 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மாற்றம்
தொடங்கியது. இப்போது அது தனிமைப்பட்டதோடு, குறைந்த ஜீன்களோடும் சுருங்க
ஆரம்பித்துவிட்டது. பெண்களில் இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால்,
ஒன்று பழுதடைந்தாலும் மற்றொன்று பயன்படும். பல நேரங்களில் எக்ஸ்
குரோமோசோம்கள் குறைபாடுகளைத் தாங்குவதாக இருக்கின்றனவே தவிர,
வெளிப்படுத்துபவையாக இல்லை. அதனால் ரத்தப்போக்கு நோய், எதிர்ப்புச் சக்தி
குறைவு, வழுக்கைத் தலை, வண்ணப் பார்வையின்மை போன்றவற்றால் பெண்கள் அதிகம்
பாதிக்கப்படுவதில்லை.
'ஒய்’ குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டதற்கு திடீரென ஏற்பட்ட மரபணு மாற்றங்களே
காரணம். இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மரபியல் விஞ்ஞானி 'ப்ரியன் ஸைக்ஸ்’
என்பவர், 'ஆதாமின் சாபம்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இதுபோல்
தொடர்ந்து 'ஒய்’ குரோமோசோம்களில் ஜீன்கள் குறைந்தால், ஆண் இனம் இன்னும்
1,25,000 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்துபோய்விடும் என்று எச்சரிக்கிறார்
அவர்.
ஒரு வகையில், மகாபாரதத்து பிம்பவனம் உண்மையாகிவிடுமோ என்கிற அச்சம் ஆண்களுக்கு எழவே செய்கிறது.
No comments:
Post a Comment