Tuesday, 11 April 2017

கல்யாணமும் கலாச்சாரமும்... !

                                      கல்யாணமும் கலாச்சாரமும்... ! 



 என்ன தான் கால ஓட்டம்  வேகமாக சுழன்றாலும், நம் வாழும் சூழலிலே நவீனத்துவம் புகுத்தப்பட்டாலும், அநேக  தருணங்களில் சம்பிரதாயம் பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களாகவே  காணப்படுகிறோம். ஒரு விதத்தில் அவையெல்லாம் நம் மரபோடு ஒன்றித்துவிட்டது எனலாம்.
 சில சமயங்களிலே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களை  எண்ணும்  போது வியப்பாகவும்  வேடிக்கையாகவும்  இருக்கும்,  இன்னும் சில வேளைகளில்  "என்னடா இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் பின்பற்றியிருக்கிறார்களே!  " என்பது போல எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும்.  ஆனால், நாம் பல சமயங்களில்  நம்
முன்னோர்கள் எதற்காக இந்த நடைமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் புரியாமலே அதை காலா காலமாக பின்பற்றி வருவோம்.
இதில் ஒன்று  திருமண சடங்கின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள்,மரபுகள்.....

நல்லதோ  கெட்டதோ ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்கமுடியாத நாளாக திருமண நாள் அமைந்துவிடும்...

அத்தோடு, அந்த  நாள் அன்று  "ஐயர் ஓமம் வளர்த்து மந்திரம் சொல்வதிலிருந்து, இறுதியில் ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்வது வரை"  மணமக்களை ஒரு வழி பண்ணிடுவார்கள். கிராம புறங்களில் தான்  "மிக நேர்த்தியாக"  இவற்றை பின்பற்றுவார்கள்.

திருமணவீட்டிலே வாழை கட்டுவதில் இருந்து, மணமக்களுக்கு அறுகரிசி தூவி வாழ்த்துவது  வரை எல்லாவற்றுக்கும் நம் முன்னோர்கள் ஒவ்வொரு காரணத்தை வரையறுத்து வைத்துள்ளார்கள். ஆனால் பல சமயங்களிலே "இவற்றை எதற்காக செய்கிறோம்" என்று  அர்த்தம்  புரியாமலே நாமும் செய்வோம்...

திருமண வீட்டின் முன்னே வாழை மரம் கட்டுவது வழக்கம்.  இதற்கு காரணம் 'திருமணம் செய்யும் ஜோடி வாழையடி வாழையாக சந்ததி விருத்தியடைய  வேண்டும்' என்ற  அர்த்தப்படவே  என்பது  யாவரும் அறிந்ததே. ஆனால் அதை விட  இன்னொரு காரணமும் உண்டு. அதாவது, ஒரு வாழை ஒரு தடவை தான் குலை போடும் ,அதே போலவே  ஒருவர் வாழ்க்கையிலே ஒரு தடவையே திருமணம் என்று  பொருள்படுவதற்காக வாழைமரம் கட்டப்படுவதை நம் முன்னோர்கள்  மரபாக கொண்டிருந்தார்களாம்.

தவிர, தென்னை  ஓலையும் கட்டும்  வழக்கம் உள்ளது.  தென்னை என்பது கற்பகதரு அதோடு நூற்றாண்டுகள் தாண்டிய ஆயுள் கொண்டது.  இதே போலவே மணமக்களின் வாழ்வும் இருக்க வேண்டும் என்று பொருள்படுமாம்.

திருமண வைபவத்தின்  இறுதியிலே  அறுகரிசியும் அறுகம்புல்லும் கொண்டு வயதில்  பெரியவர்கள் மணமக்களை ஆசிர்வதிப்பார்கள். ஆனால் உண்மையிலே அறுகரிசி பயன்படுத்தல் என்பது தவறான முறை. முன்னைய காலத்தில் நெல்லும்  அறுகம்புல்லும் கொண்டே ஆசிர்வதித்தார்களாம்.( சற்று நாட்களுக்கு முன்னர்  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலே  ஒரு பெரியவர் சொல்ல கேள்வி). ஆனால், காலப்போக்கில் நெல் அரிசியாகிவிட்டது. ( 'நெல்லு அரிசியாக தானே மாறும்' என்று நீங்கள் கேட்க்கிறதும் நியாயம் தான்.)

நெல் பயன்படுத்துவதற்கு காரணம் "ஒரு சிராங்கு (கைப்பிடி) நெற்களை  விதைத்தால்  அறுவடையை பன்மடங்காக தரும் பண்பு கொண்டது".  அதே போலவே அறுகம்புல்லும்,  மிக குறுகிய காலத்தில் வேருன்றி படர்ந்து  பரவக்கூடிய ஆற்றல் கொண்டது.  இந்த காரணங்களுக்காகவே இவற்றை ஆசி வழங்குவதற்காக பயன்படுத்தினார்கள்.


'பெண் என்பவள் ஆணுக்கு அடுத்தவளே, அவளால் ஆண்களை போல சமூகத்திலே சகயமாக வாழ முடியாது.  அவள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கணும்,  தலை குனிந்து தான் நடக்கணும்' என்பவையும் முன்னையகாலத்தில்  நம் முன்னோர்கள் ஏற்படுத்திக்கொண்டவை  தான். ஒரு திருமணத்தின் போதும் இதற்கு ஏற்றா போல சில  நடைமுறைகளை உண்டாக்கி வைத்துள்ளார்கள்.

"திருமணம் அன்று பெண் கழுத்தில் ஆண் தாலி கட்டி கொள்ள வேண்டும், ஆண் கால்களிலே பெண் மெட்டி அணித்து விட  வேண்டும். ஏனெனில் ஆண் என்பவன் என்றுமே தலை நிமிர்ந்து நடப்பவன். ஆகவே கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்தவுடன்  ஒரு பெண் திருமணமானவளா என்று அடையாளம்  கண்டுகொள்வான். ஆனால் பெண்ணோ  தலை குனிந்து தான் நடப்பவள், ஆகவே அவள் ஒரு ஆண் திருமணமானவனா என்று அறிந்து கொள்ள அவனின் காலில் அணியும் மெட்டி உதவியாக இருக்கும்."

 அதே போலவே தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுக்களுக்கும் அர்த்தங்களாக "முதலாவது புகுந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள். இரண்டாவது பிறந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள் மூன்றாவது தெய்வத்துக்கு கட்டுப்பட்டவள்" என்ற அர்த்தங்கள் பொருள்படும்.  இவ்வாறு அநேக சம்பிரதாயங்கள் ஆணை காட்டிலும் பெண்ணை சுற்றி போடப்பட்ட  ஒரு கட்டுப்பாடாகவே எண்ணத்  தோன்றுகிறது.

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள இந்த நடைமுறையை எவ்வாறு எடுத்துக்கொள்வது.................!!  அவர்களின் அன்றைய காலத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமாக இருந்தது, ஆனால் கலாச்சாரம் என்ற போர்வையில்  இன்று  சிலவற்றை ஏற்றுக்கொள்வது  கடினம்  தான். 

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...