Thursday, 13 April 2017

பல மடங்கு பலன் தரும் ஸ்படிக லிங்கங்கள்!

                     பல மடங்கு பலன் தரும் ஸ்படிக லிங்கங்கள்!



சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அவை செய்யப்படும் பொருளுக்கேற்ப அருள் வழங்கும் தன்மையவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த முப்பத்திரண்டு வகையிலும் சேராமல் சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம். அதனால் இது மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படுகிறது. ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனிலிருந்து விழுந்ததாகக் கூறுவோரும் உண்டு. ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும். இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன் மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு. ஸ்படிகம் இமய மலையின் அடி ஆழத்திலும் விந்திய மலை மற்றும் சங்ககிரி மலையின் சில பகுதிகளிலும் கிடைக்கும். இது மிகவும் விலைமதிப்புள்ளது. பாரதத்தின் வடபகுதியில் இருந்த ஸ்படிகம் தென்பகுதி வந்தது சுவாரசியமான கதை. ஆதிசங்கரர் கைலாய மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிவபெருமான் அவருக்குக் காட்சி அளித்து, ஐந்து ஸ்படிக லிங்கங்களை அளித்து அவற்றை பூஜிக்கும் முறை பற்றியும் விளக்கமாக கூறியருளினார். அவை முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் எனப் பெயர் கொண்டவை. அந்தப் பஞ்ச லிங்கங்களை ஆதிசங்கரர் ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.முக்தி லிங்கம் - கேதார்நாத், வரலிங்கம் - நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம் -சிருங்கேரி, யோகலிங்கம் - காஞ்சி. சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது. முன்னால் இருந்த ஸ்படிக லிங்கத்தில் கீறல்கள் விழுந்ததால் அதற்குப் பதிலாக, இமயமலையிலிருந்து 6 இன்ச் உயர லிங்கம் எடுத்து வரப்பட்டு 2011-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்குதான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது. இது பழம் பெருமை வாய்ந்தது. அதே போல ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலையில் அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரை, இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. கோயிலில் இந்த தரிசனத்திற்கென்று தனி டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இந்த வழிபாடு முடிந்ததும் கோயிலில் இருக்கும் எல்லா தீர்த்தங்களிலும் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோயில்கள் தவிர வேறு சில இடங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன.வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை (நிராகார) குறிக்கும் வகையிலும், அவனின் குணமற்ற (நிர்க்குண) தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன. ஸ்படிகம், பக்கத்தில் உள்ள பொருளின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது. இதன் இருப்பு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம். ஸ்படிகத்தின் ஒவ்வொறு அணுவிலும் சிவனின் குற்றமற்ற தூய்மை நிறைந்திருக்கிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் விரிவாகக் கூறப்படுகிறது. சரி! இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை பயன் பெற எப்படி வழிபட வேண்டும்?ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்க கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்கள் ஒரு பாண லிங்கத்துக்குச் சமம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பாண லிங்கம் என்பது கண்டகி நதிக்கரையில் இயற்கையாகக் கிடைக்கும் சாளக்கிராமங்களைப் போல நர்மதை நதியில் கிடைக்கும் இயற்கையான லிங்கங்களாகும். ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும். ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா? வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும் பழச்சாறுகளாலும் தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து, பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும்.ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு, இது தாந்திரீகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாகும். மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பின்னி சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிகலிங்க வழிபாடு செய்வார்கள். அதனால் அபிசார தோஷம் (ஏவல் பில்லி சூனியங்களால் பிரச்சினை) உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன் மனமொடுங்கி தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம். வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ தங்கள் வியாபாரக் கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண சக்தி படைத்ததாக மாறுகிறது. அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் மேலும் விருத்தியடையும். மாணவர்களும் கூட ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். தொடர்ந்து இதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாலே நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை கிட்டும். இதற்கு தினமும் பூஜை செய்ய நல்ல மனத்திண்மையும் நேர் வழியில் செல்ல விருப்பமும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஸ்படிகம் நன்மையே செய்யும்.  

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...