Thursday, 13 April 2017

தெய்வ முத்திரைகள் உணர்த்தும் தத்துவம்!

                      தெய்வ முத்திரைகள் உணர்த்தும் தத்துவம்!




பாதுகாப்பு அறிக்கிறேன், விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்பது அபய வரத முத்திரையின் விளக்கம், நம் எண்ணத்துக்கு உகந்தவாறு பரம்பொருளின் பல வடிவங்களான இறையுருவங்களுக்கு முத்திரைகள் அமைந்திருக்கும். ஆன்ம ஞானத்துக்கு சின்முத்திரை ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும். இடையூறு வருமோ என்ற எண்ணம் மேலோங்கும்போது, ஸ்ரீவிக்னேஸ்வரரை அணுகுவோம். குழந்தைச் செல்வம் வேண்டும் என்றால், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனை அணுகுவோம். குடும்ப ÷க்ஷமத்தை நிறைவு செய்ய ஸ்ரீசோமாஸ்கந்த பரமேஸ்வரரை ஏற்போம். அரக்கர் பயம் அகல மகிஷாசுரமர்த்தினியை வழிபடுவோம். அதேபோன்று கலையில் தேர்ச்சி பெற கலைமகளையும், வீரம் பெற்று விளங்க மலைமகளையும் வழிபடுவோம். இப்படி, நம் எண்ணத்துக்கு உகந்த முத்திரை அல்லது வடிவம் பெற்ற இறையுருவங்களை அணுகும்போது, மனம் அதில் எளிதில் லயித்துவிடும்.

பரம்பொருள் பல இறையுருவங்களாகக் காட்சியளிக்க நமது எண்ணம்தான் காரணம். உலகமே நான்தான் என்று காட்ட விஸ்வரூபம் எடுத்தார் ஸ்ரீகிருஷ்ணர். நீரில் மூழ்கித் தேடுவதற்காக மத்ஸ்யாவதாரம், மந்திர பர்வதத்தைத் தாங்க ஆமை வடிவம், பூமியைத் துறைபோட்டு இறங்க வராஹம்... இப்படிச் செயலுக்கு உகந்த வடிவங்களை எடுத்தார் ஸ்ரீமந் நாராயணன், பக்தனைக் காக்க நரசிம்மம், பலியை ஒடுக்க வாமனன், அரசர்களை அடக்க பரசுராமர், அரக்கனை அழிக்க ஸ்ரீராமன், எதிரிகளை வெல்ல பலராமன், அறிவைப் புகட்ட ஸ்ரீகிருஷ்ணன்....... இப்படி, அவரது செயல்பாடுகள் அத்தனையும் செயலை ஒட்டிய வடிவமைப்பில் நிறைவேறின அலை அலையாக வெளிவரும் ஆசைகளின் ஊற்று மனம் நிலைக்கும் திறன் மனம் (மனனாத்மன) ஆசைகளை நிறைவேற்ற ஆண்டவனை அணுகுவோம். ஆசைக்கு உகந்த இறையுருவத்தை ஆராதிப்போம். மாறுபட்ட ஆசைகள் தோன்றும்போது, மாறுபட்ட இறையுருத்தை அணுகத் தோன்றும். எல்லாப் பொருட்களிலும் தெய்வத்தன்மையைப் பார்க்கச் சொல்கிறது ஸனாதனம்.

நாக ப்ரதிஷ்டை, அச்வத்த ப்ரதிஷ்டை, கூப ப்ரதிஷ்டை, தடாக ப்ரதிஷ்டை, ஆராம ப்ரதிஷ்டை, இப்படிப் பாம்பிலும், மரத்திலும், குளத்திலும், குட்டையிலும், கிணற்றிலும் தெய்வாம்சத்தைப் பார்ப்பது உண்டு. பிரபஞ்சம் முழுவதையும் பரம்பொருளின் வடிவமாகப் பார்க்கும் பக்குவம் வரும்போது, நாமே எல்லாமும் என்று தெரிய வரும்(ஆத்மவத் ஸர்வ பூதானி ய பச்யதி ஸபச்யதி) ஆரம்ப காலத்தில் முத்திரையிலும் வடிவத்திலும் தெய்வாம்சத்தைப் பார்த்து, படிப்படியாக எல்லாவற்றிலும் காணும் பக்குவம் வந்துவிட்டால், துயர் தொடாத ஆனந்தத்தை உணரலாம்.

குறிப்பிட்ட தத்துவ முத்திரையாகச் சுட்டிக் காட்டப்படும் சின்முத்திரை- ஜீவ ப்ரம்ம ஐக்கியத்தைச் சொல்லும் (அங்குஷ்ட தர்ஜனி யோக முத்ரா வ்யோஜேன தேஹினாம். க்ருத்யுக்தம ப்ரம்ம ஜீவைக்யம் தர்சயன் னோவதாத் சிவ) கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் ஆகியவற்றை முத்திரை வழி செயல்படுத்தும்போது, ஆன்மாவை அமுதமாக நிவேதனம் செய்ய காமதேனு முத்திரை பயன்படும். மானசீக பூஜையில் முத்திரை பயன்படும். புராண விளக்கங்களில் உருப்பெற்றவை மூர்த்தங்களின் உருவங்கள். மகாபாரதம் எழுதுவதற்கு ஒரு தந்தம் பயன்பட்டதால், ஏகதந்தன் ஒரு தந்தம் பயன்பட்டதால் ஏகதந்தன் ஆனார் விக்னேஸ்வரர். மேலும் பஞ்சமுக கணபதி, ஸித்தி-புத்தி கணபதி போன்ற பல உருவங்களும் பக்தர்கள் மனதில் உருப்பெற்று உருவமாக வடிக்கப்பட்டன. நிர்குண தெய்வத்தை ஸகுணமாக்கும் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், மனதின் கற்பனைக்கு உகந்தவாறு பலப்பல திருவுருவங்கள் தென்பட ஆரம்பித்தன.

பூஜை முறையிலும் முத்திரை உண்டு. சொல்லுக்குப் பதிலாக முத்திரை பயன்பட்டது. நாட்டிய சாஸ்திரத்தில் அபிநயங்களிலும் முத்திரை அரங்கேறியிருக்கும். இரண்டு கரங்களையும் சேர்ப்பதை நமஸ்கார முத்திரை என்றும் சொல்லலாம். மொழி வருவதற்கு முன்னால் கை, கால், கண், உடம்பு ஆகியவற்றின் அசைவுகளும் முகபாவங்களுமே எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்பட்டதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். அவையும் ஒரு தகவலை விளக்கும் முத்திரைதான். பேச இயலாதவர்கள் கண், கைகள் மற்றும் கால்களின் குறிப்பால் கருத்தை வெளியிடுவர். ஆக, முத்திரைகள் என்பவை தகவல்களை உள்ளது உள்ளபடி விளக்குவதற்குப் பயன்படுகின்றன. வார்த்தைகள் மூலம் வெளிவரும் தகவல்கள் கேட்பவரின் சிந்தனைக்கு உகந்தவாறு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆனால், முத்திரைக்கு அது இல்லை.

புத்தரின் விளக்கவுரையை நான்கு சீடர்கள் நான்கு விதமாக எடுத்துக்கொண்டதாகச் சரித்தரம் கூறும். ஹீனயானம், மஹாயானம் யோகாசாரம், மாத்யமிகம் எனும் பிரிவுகள் அப்படி வந்ததாகச் சொல்லலாம். பிரம்ம சூத்திரத்துக்கு, படிப்பவரின் சிந்தனை மாற்றத்தால் பல விளக்கங்கள் உண்டு. பகவத் கீதையின் விளக்கவுரைகள் ஏராளம். பார்த்த காட்சியை சொல்லால் விளக்கும்போது காட்சியின் தரத்தை மாற்றிச் சொல்ல இயலும், கண்ணால் பார்த்த காட்சியை கண் மாற்றிக் கூறாது. வேதம், கண்ணால் பார்த்தது உண்மை என்று சொல்லும் (சக்ஷüர்வை ஸத்யம்) உண்மையை விளக்கும் தகுதி முத்திரைக்கும் உண்டு.  

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...