Thursday, 13 April 2017

ராகு கிரகத்தை வணங்குவதால் என்ன நன்மை?

                     ராகு கிரகத்தை வணங்குவதால் என்ன நன்மை?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/



சுவர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளும் தடைப்படுமோ என்று பயந்தனர் தேவர்கள். அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க, பரிகாரத்தில் ஈடுபட்டனர். இதில் இருள் விலகி, இளஞ்சிவப்பாகக் காட்சி தந்தான் சூரியன். கடைசியில், அவனது இயல்பான நிறமான வெண்மை பளிச்சிட்டது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (சுவர்பானு ராஸுர: ஸுர்யம் தமஸாவித்யத்...).

கிரகணம் பிடித்த நிலையில், கருவட்டமாகக் காட்சி தருவான் சூரியன். கிரகணம் விடத் துவங்கியதும், சிவந்த கலந்த வெண்மையில் ஒளிர்வான். முழுவதும் விட்டதும், வெண்மை நிறத்தினனாகக் காட்சி தருவான். வேதத்தில், அந்த கிரகணத்தின் நிகழ்வு உள்ளது. ராகுவைப் பற்றிய தகவல் அதர்வண வேதத்தில் உண்டு (சன்னோ கிரஹா: சாந்திரமஸா: சமாதித்ய: சராகுணா...). வேத காலத்தில் இருந்து, தினமும் 3 வேளை, ராகுவுக்கு நீரை அள்ளி வழங்கி வழிபடுவர், வேதம் ஓதுவோர். பிறகு வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில், ராகுவை சுவர்பானு எனக் குறிப்பிட்டனர். ராகுவுக்கு சுவர்பானு எனும் பெயர் உண்டு என்கிறது அமரகோசம். கிரகண காலப் பெருமையை விளக்கும் வேளையில், ராகுவைக் குறிப்பிடுகிறது தர்மசாஸ்திரம் (ராஹுக்ரஸ்தேதிவாகரே). மாயையின் தரம் மற்றும் அதன் இயல்பை விளக்க வந்த மகான் ஆதிசங்கரர், தட்சிணா மூர்த்தி ஸ்தோத்திரத்தில் ராகுவைச் சுட்டிக்காட்டுகிறார்.

கிரக வரிசையில், ராகுவைக் குறிப்பிடவில்லை; கிழமைகளில் இடம் தரவில்லை. ராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் இருந்தும், ராகுவுக்கு வீட்டு உரிமை இல்லை; ராசிகளின் உட்பிரிவுகளிலும் ராகு இல்லை. ராகுவை சாயாகிரகம் என்கிறது ஜோதிடம். ராகு, தென்படும் ராசிக்கு உரியவன். அவனுடன் இணைந்தவன்; அவனைப் பார்ப்பவன். ஆகவே விகிதாசாரப்படி, ராகுவுக்குப் பலன் சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம். கேந்திர த்ரிகோணாதிபதிக்கு யோககாரகன் எனும் பெருமை உண்டு. அவனுடன் இணைந்த ராகு, நல்ல பலனை அளிப்பான் என்கிறது ஜாதக சந்திரிகை (யோககாரக ஸம்பந்தாத்...). தாம்பூலப் பிரஸ்னத்தில், லக்ன நிர்ணயம் செய்ய ராகு கேதுவைத் தவிர்த்து, ஏழு கிரகங்களை மட்டும் ஏற்பார்கள். ராகுவும் கேதுவும் இணையாத ஏழு கிரகங்களை வைத்து, ஸப்த க்ரஹ சித்தாந்தம் ஆரம்ப காலத்தில் இருந்தது. வராஹமிஹிரர் அந்த சிந்தாந்தத்தை ஆராதித்தவர் என்கிறது ஜைமினீய பத்யாமிருதம். கேமத்ரும யோகத்தில், ராசிக்கு 2-லும் 12-லும் ராகு இருந்தாலும், கிரகம் இல்லாததாகவே கருதப்படும்; வெற்றிடமாகவே ஏற்பர்; நிழல் கிரகம் என ஒதுக்குவர். ஒரு ராசிக்கு முன்னும் பின்னுமான ராசிகளில் (ராசிக்கு 2 மற்றும் 12-ல்) பாபக் கிரகம் இருந்தால், அதற்கு உபயபாபித்வம் என்று பெயர். இந்த இரண்டுகள் ஒன்றில் ராகு தென்பட்டால், உபயபாபித்வம் உருவாகாது. பாப கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துவிடுகிறான். முகூர்த்த சாஸ்திரம், லக்ன சுத்திக்கு, எட்டில் கிரகம் இருக்கக் கூடாது என்கிறது. அங்கு ராகு இருந்தால், கிரகம் இல்லாததாகக் கருதப்படும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம். தசா புக்தி அந்தரங்கள், கிரகணம், ராகு காலம் ஆகியவற்றில் ராகு தென்படுவான். அடுத்து வந்த சிந்தனையாளர்கள் உச்சம், நீசம், ஸ்வ ÷க்ஷத்திரம் எனக் கொண்டு, மற்ற கிரகங்களின் அந்தஸ்தை ராகுவுக்கு ஏற்படுத்தினர். எல்லாக் கிரகங்களும் வலமாக வந்தால், இவன் இடமாக வருகிறான்.

ராகுவுக்கு சர்ப்பி எனும் பெயர் உண்டு. சர்ப்பி என்றால் ஊர்ந்து செல்லுதல், பரவுதல், நகருதல் என்று அர்த்தம். பாம்பு ஊர்ந்து செல்லும். ஆகவே, பாம்பின் வடிவமென ராகுவைச் சொல்வார்கள் (உரகாகார:) சர்ப்பம் என்றும் பாம்பைச் சொல்வர். சந்திரனின் பாதம் அது என்கிறது கணிதம். ராகு, பூமியுடன் இணைந்து சந்திரனை மறைக்கிறான். சந்திரனுடன் இணைந்து, சூரியனை மறைக்கிறான். அதுவே கிரகணத்தின் நிகழ்வு என்கிறது ஜோதிடம். பிரம்மாவிடம் வரம்பெற்று, கிரகண வேளையில் சூரிய சந்திரர்களைத் துன்புறுத்துகிறான் ராகு என்கிறது புராணம். ராகுவை சனிக்கிரகம் போல் பாவித்துப் பலன் சொல்லலாம் என்கிறது ஜோதிடம் (சனிவத்ராஹு:) ஆக்னேய கிரகம் 7-ல் இருந்தால், கணவன் இழப்பை அளிக்கும். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை ஆக்னேயத்தில் சேரும்; ராகு இதில் சேரவில்லை. குரூரக் கிரகம் 7-ல் இருந்தால், கெடுதல் விளையும், செவ்வாயை, குரூரக் கிரகம் என்கிறது ஜோதிடம் (க்ரூரத்ருத்..) அதிலும் ராகுவுக்கு இடமில்லை. இப்படியிருக்க... ராகுவுக்கு தற்போது முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. ராகு 5-ல் இருந்தால், குழந்தை பாக்கியம் இல்லை; 7-ல் இருந்தால் கணவன் இழப்பு என்று பரிகாரங்களுக்கு காளஹஸ்தி தலத்தைச் சொல்வர். நாக தோஷத்துக்கு நாகப்பிரதிஷ்டை பரிகாரம்; ராமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் ஆகியவை பரிந்துரைக்கப்படும். ராகு தோஷ பரிகாரமாக, அம்பாள் வழிபாட்டை வலியுறுத்துவர். ஆக, பரிகாரத்தால் மறைகிற தோஷமாக, ராகு தோஷத்தைச் சொல்வர். 12 ராசிகளில் ராகு எங்கு இருந்தாலும் அது தோஷம் எனக் கருதி, பரிகாரத்தில் ஈடுபடுகிற நிலை வந்துவிட்டது. காலத்துக்குத் தக்கபடி, புதுப்புது பரிகாரங்களும் தற்போது வந்து விட்டன. 5 மற்றும் 7-ல் ராகு இருக்கிற ஜாதகங்கள், தீண்டத்தகாத ஜாதகங்களாக மாறிவிடுகின்றன. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் பாடு சொல்லில் அடங்காதது.

கிரக வரிசையில் இடம்பிடித்த ராகு, நன்மையைவிட தீமையையே அதிகம் சுட்டிக்காட்டுவதாக சித்திரிப்பதால் ஏற்பட்ட பயம், மக்களின் சிந்தனையை முடக்கிவிடுகிறது. சம்பிரதாயம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு முதலிடம் கொடுக்கிற மனம், சாஸ்திரத்தை மறந்துவிடுகிறது; ஆசையை அடையும் வழி தெரியாமல், முட்டுச் சந்து போல் முடங்கிவிடுகிறது. ஜோதிடத்தை மனம் சரணடைந்தால், சிந்தனையானது படுத்துவிடும். ஜோதிடத் தகவல் சிந்தனைக்கு இலக்காகியிருக்க, தகவலின் தரம் ஒருவனது முன்னேற்றத்தை வரையறுக்கும். ராகுவின் தரம், ஜோதிடத்தில் அவன் பங்கு ஆகியவற்றை உள்ளது உள்ளபடி அறிய வேண்டிய கட்டாயம் உண்டு. ஜாதகத்தில் உள்ள ராகு, கெடுக்கிற ராகு அல்ல; கொடுக்கிற ராகு எனும் விளக்கமும் இருக்கிறது. காலைச் சுற்றிய பாம்பு, (திருவாதிரை காலில் இருக்கும் ராகு) கடிக்காமல் விடாது (வேதனை அளிக்காமல் இருக்காது) என்று சிலேடையான விளக்கங்களை அளித்து ராகுவின் தரத்தைச் சொல்பவர்களும் உள்ளனர். தனி வீடு இல்லாததால், எல்லா வீடுகளிலும் தனி வீட்டுக்குச் சமமாக ராகு செயல்படும் வாய்ப்பு கிடைத்து விட்டது. நல்லவனுடன் இணைந்தால், நல்ல பலனை முடக்கி விடுவான்; எவரோடும் சேராமல், எவராலும் பார்க்கப்படாமல், தனியே ஒரு வீட்டில் தென்பட்டால், வீட்டுக்கு உரியவனின் இயல்புக்கு இணங்க, தனது இயல்பையும் கலந்து மாறுபட்ட பலனை அளிப்பான். கெட்டவனுடன் சேர்ந்தால், செயலின் தன்மையைக் கொடுமையாக்குவான். சூரியனுடன் இணைந்தால், ஜாதகரின் செல்வாக்கை இழக்கச் செய்வான். செயலை மங்கச் செய்வான். பெருந்தன்மையும் பேராதரவும் அங்கீகாரம் பெறாது. உச்சன் அல்லது வேறு வகையில் பலம் பொருந்திய சூரியனுடன் இணைந்தால், எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து, தனித்தன்மையுடன் திகழ்வான். எதிரியிடம் இருந்து வெகுமதிகள் வந்தடையும்; எதிர்பார்ப்புகள் சாதகமாகும் ! சந்திரனுடன் இணைந்தால் சிந்தனை சுணங்கும்; செயல் வலுவிழக்கும். பலம் பெற்ற சந்திரனுடன் இணைந்தால், சங்கடம் நேராமல் தடுத்துவிடுவான் ராகு. செவ்வாயுடன் இணையும்போது, தேவையற்றதில் செயல்படத் தூண்டிவிட்டு, ஆயாசத்தை உண்டாக்குவான். வலுப்பெற்ற செவ்வாயுடன் இணைந்தால், எதிர்ப்பைச் சமாளித்து, எளிதில் முன்னேறலாம். புதனுடன் சேர்ந்தால், தவறான நட்பால் நொந்து போகும் நிலை ஏற்படும். வலுவுள்ள புதனுடன் இணைந்தால், பக்குவ அணுகு முறையால் காரியங்களைச் சாதிக்கச் செய்வான் !

சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்திய வாழ்வில் சங்கடம் நேரும். தவறான வழியில் செல்வம் பெருகும். பலம் பெற்ற சுக்கிரனுடன் இணைய, எதிர்பார்த்த உலகவியல் சுகங்களை அனுபவிக்கலாம். பெரிய மனிதர்களது தொடர்பால், பொருந்தாத பெருமைகளும் வந்தடையும். சனியின் சேர்க்கையால், நண்பர்கள் எதிரிகளாவர். பலம் பொருந்திய சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த வழியில் முன்னேறும் நிலை உண்டாகும். இக்கட்டான சூழலில், அவனுக்குப் பெருமைகள் தேடி வரும். குருவுடன் இணைந்தால், சௌக்கியங்களை இழக்க நேரிடும்; எத்தனை முயன்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் தோல்வியைத் தழுவ நேரும். மனச்சோர்வு அதிகரிக்க, கடமைகளை மறக்கும் நிலை உருவாகும். வலுப்பெற்ற குருவுடன் இணைந்தால், சங்கடம் தீர்ந்தாலும், சந்தோஷம் இருக்காது; காரியங்கள் காலம் கடந்து நிறைவேறும். குருவின் சேர்க்கையால், மற்ற கிரகங்களின் தோஷங்கள் முழுவதும் முடங்கிவிடும். ராகுவின் சேர்க்கையில் குரு செயலிழந்துவிடுவான். அதனை, குரு சண்டாள யோகம் என்கிறது ஜோதிடம். நல்லவனின் சேர்க்கை, கெட்டவனை நல்லவனாக்கும். ஆனால் ராகுவின் சேர்க்கை, குருவைக் கெட்டவனாக்கிவிடும் என்கிறது, அது ! அதேநேரம், யோக காரக கிரகங்களின் சேர்க்கையில், நல்லவனாக மாறுவதுடன் நிற்காமல், இணைந்த கிரகத்தின் நல்லபலன்களை இரட்டிப்பாக்கி, மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வான் ராகு. அசுர வேகத்தில் முன்னேற்றம் நிகழும். இதில் தடம்புரளாமல் இருக்க, ராகுவின் இடையூறு சாதகமாக மாறுவது உண்டு. இனிப்பின் அதீத தித்திப்பை, காரமானது குறைக்கும். ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தாலும், ராகுவின் சேர்க்கையில் துன்பத்துக்கு இடமளித்து, இன்ப சேர்க்கையில் துன்பங்களின் கலப்படமே வாழ்க்கை எனும் நியதியை நிறைவுசெய்ய... ராகுவின் பங்கு சில தருணங்களில் பயன்படும்.

ராகுவை வைத்து, காலசர்ப்ப யோகம் உருவானது. அதுவே, விபரீத கால சர்ப்ப யோகம் எனும் பெயரில் விரிவாக்கம் பெற்றது. சஞ்சாரத்தில் 180 டிகிரி விலகி நிற்பதால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சேர்க்கை நிகழாது. சமீப காலமாக, குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் விழாக்கோலம் கொண்டுவிட்ட நிலையில், ராகுப் பெயர்ச்சியும் அதில் இடம் பிடித்துவிட்டது. தினமும் ராகுகாலத்தைச் சந்திக்கிறோம். ராகு வழிபாடு என்பது, வேத காலத்தில் இருந்தே தொடர்கிறது. உலகம் தோன்றும் வேளையில், வானசாஸ்திரத்தில், ராகு இடம் பிடித்துவிட்டான். வராஹமிஹிரர், பிருஹத்சம்ஹிதையில் ராகுசாரத்தை விளக்கியுள்ளார். ஆகவே, போற்றுதலுக்கு உரிய கிரகங்களில் ராகுவையும் சேர்க்கலாம். ராகுவை அழைக்க, கயான: சித்ர: என்கிற மந்திரத்தை ஓதச் சொல்கிறது வேதம். ராம் ராஹவே நம: எனும் பீஜாக்ஷர மந்திரத்தைச் சொல்லலாம்; 16 உபசாரங்களை இந்த மந்திரம் சொல்லி நிறைவேற்றலாம். சதுர் பாஹும் கட்க வரசூலசர்மகரம்ததா காலாதி தைவம் ஸுர்யாஸ்யம் ஸர்பப்ரத்யதி தைவதம் என்ற ஸ்லோகம் சொல்லி, ராகுவுக்கு மலர் சொரிந்து, வணங்கலாம். வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்குவான் ராகு. கைகளுக்கு வலுவூட்டுபவன் ராகு என்கிறது புராணம் (ராஹோர்பாஹுபலம்...) செயல்படுவதற்குக் கைகள் தேவை. பிறர் உதவியின்றி வாழச் செய்வான் ராகு ! இன்றைய சூழலில், ராகுவின் அருள் அவசியம். ராகு பகவானை வணங்கினால், ஒளிமயமான வாழ்க்கை நிச்சயம் !  

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...