ஆலயங்கள் அமைத்தல்
2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், 2. ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம், 3. உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்.
2.2. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம் : புது இடத்தை உழுதல் (கர்ஷணம்) முதலான கிரியைகளுடன் தொடங்கி, திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்யும் வரை.
2.3 ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம்: நித்திய, நைமித்திய, காமிக கிரியைகளும், உற்சவங்களும்.
2.4 உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்: மஹோத்ஸவங்களும், அவற்றின் நிறைவாக நிகழும் ப்ராயச்சித்த (மஞ்சள் நீராட்டு வைபவங்களும்)
2.5 பாலாலயம் : தற்காலிகமாக அமைக்கப்பெறும் இறைவனின் இருப்பிடங்கள் இளங்கோயில் அல்லது பாலாலயம் என்று அழைக்கப்பெறும். புதிதாக ஆலயம் எழுப்புவதாயினுங்கூட, முதலில் பாலாலயம் அமைத்தே அதில் இறைவரை எழுந்தருளச் செய்திடல் வேண்டும். ப்ரதானாலயம் கட்ட இடம் சதுரித்த பின், பால லிங்கத்தை பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்து, பூஜித்து வரவேண்டும்; இதற்காகக் கட்டப்படுவது முதலாவது பாலாலய வகை. பின் மூலாலயத்தில் மூல லிங்கத்தை பிரதிஷ்டை செய்தபின், இறைவரை பாலலிங்கத்திலிருந்து மூல லிங்கத்திற்குச் சென்று எழுந்தருளச் செய்து, பிறகு பாலாலயத்தை நீக்க வேண்டும். பிற்காலத்தில், மூலாலயம், பீடம், சிவலிங்கம், பிம்பங்கள் இவை ஜீர்ணம், பின்னம், அங்கக் குறைவு, வெடிப்பு முதலியவற்றால் தோஷமுற்றபோது, இவைகளை கும்பத்தில் ஆவாஹனம் செய்து, பின்னர் பாலபிம்பத்தில் சேர்க்க வேண்டும்; இத்தகு தருணங்களில் அமைக்கப்பெறும் பாலாலயங்கள் இரண்டாவது வகைத்து. இவை தருணாலயம் என்றும் கூறப்படும்.
2.6 உற்சவங்கள்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஒரு நாள் நிகழ்ச்சிகளாகவும், 3 முதல் 36 நாட்கள் வரை தொடர் விழாக்களாகவும் நடைபெறுவது உண்டு. அவ்வாறு 1,3,5 நாட்கள் நடைபெறும் உற்சவங்களுக்குக் கொடியேற்றம் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட நாட்களாக செய்யப்படும் உற்சவங்கள் கொடியேற்றத்துடன் செய்ய வேண்டுமென ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய உற்சவங்கள் மஹோற்சவங்கள் எனவும் கூறப்படும். பாலாலயம் செய்துள்ளபோது, கும்பாபிஷேகம் ஆகும் வரை, மத்தியில் மஹோத்சவம் (கொடி ஏற்றி உற்சவங்கள்) செய்யலாகாது. அப்படி அவசியம் உற்சவம் செய்யவேண்டுமாயின், மூலாலயத்திற்கு ஈசானம் முதலிய குறிப்பிட்ட திசைகளில், மூலாலயம் போலவே விமானம், கர்ப்பக்ருஹம், பரிவார தேவதைகள், கொடிமரம், பலிபீடம் யாவும் உள்ள பாலாலயம் அமைத்து, பிரதிஷ்டைகள் செய்து, அந்தக் கொடிமரத்தில் கொடி ஏற்றி உற்சவம் செய்யலாம்
2.7 யாகசாலை : உற்சவத்திற்கான யாகசாலை மேற்கு முகமாக இருத்தல் வேண்டும். ஆனால், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷணம் யாவற்றிற்கும் யாகசாலை கிழக்கு முகமாய் இருத்தலே உத்தமம் என்று காரணாகமம் கூறுகிறது.
2.8 நந்திதேவர் பிரதிஷ்டை: சிவாலயங்களி, குறைந்த பக்ஷமாக ஒரு நந்தியும், அதிக பக்ஷமாக ஐந்து நந்திகளும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும். ஐந்து வித நந்திகள்: 1. லிங்கத்துக்கு மிக அருகிலுள்ள (முதல்) நந்தி கைலாஸ நந்தி (பொற் பிரம்பும், வீர வாளும் தாங்கியவர்; தன் மூச்சுக் காற்றால் இறைவனைக் குளிர வைத்துக் கொண்டு இருப்பவர். ஆலயத்தினுள் ஒரே ஒரு நந்தி அமைப்பதனால் இவர் மட்டுமே ப்ரதிஷ்டை ஆவார்) 2. இரண்டாவது நந்தி மஹாவிஷ்ணு அவதார நந்தி (திருமால் இறைவனைத் தான் தாங்குவதற்காக நந்தி உருக் கொண்டு அமர்ந்துள்ளமை - நான்கு நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை இல்லை) 3. மூன்றாவதான நந்தி பக்தர்களை உள்ளே விடவும், தடுப்பதற்கும் அதிகாரம் பெற்றவர். சில நூல்களில் இவரை அதிகார நந்தி என்றும் பெயரிட்டு குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுவர் (துவஜஸ்தம்பம் அருகே உள்ளவர். இரண்டு நந்திகள் மட்டுமே அமைப்பதனால், இரண்டாவதாக இவர் ப்ரதிஷ்டை ஆவார்) 4. நான்காவதான நந்தி சாதாரண நந்தி (ஐந்து நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை ஆவார்) 4. நான்காவதான நந்தி சாதாரண நந்தி (ஐந்து நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த பிரதிஷ்டை இல்லை) 5. ஐந்தாவதான் நந்தி உருவில் மிகப் பெரியவர். விச்வரூபம் கொண்டு போருக்கு ஆயத்தமாயுள்ளவர். ஆலயங்களின் நுழைவாயிலில் அமைக்கப்பெறுபவர் இவரே. புகழ்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் பெரிய நந்தி இதற்கு உதாரணம். இவர் பெரிய நந்தி, அல்லது மஹா நந்தி என்றும் அழைக்கப்படுவார் (மூன்று நந்திகளுக்கு குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை இல்லை)
2.9 ப்ரதிஷ்டா கிரியைகள்: கும்பாபிஷேகத்தை ஒட்டி நிகழ்விக்க வேண்டிய கிரியைகள் - அதாவது கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்த கிரியைகள் - பற்பல. அவற்றின் பெயர்களைத் தொகுத்து ஒரு (ஏறத்தாழ, அனைத்து கிரியைகளின்) பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றுள் சிலவற்றின் விளக்கமும் மேற்கொண்டு காணலாம்: 1. மஹூர்த்த நிர்ணயம் 2. ஸ்தம்ப ஸ்தாபனம் 3. அனுக்ஞை 4. தன பூஜை 5. ஆசார்ய வரணம் 6. ப்ஸன்ன கணபதி பூஜை. 7. க்ராம சாந்தி 8. ப்ரவேச பலி. 9. ர÷க்ஷõக்ன ஹோமம் 10. ஆசார்ய தசவித ஸ்நானம் 11. வாஸ்து சாந்தி 12. க்ரஹ மகம் 13. திசா ஹோமம் 14. கோ பூஜை, 15. விப்ர போஜனம், 16. ம்ருத் ஸங்க்ரஹணம் 17. ரத்ன ந்யாஸம் 18. நயனோன் மீலனம், 19. தான்யாதி வாசனம், 20. ஜலாதி வாசம் 21. சாந்தி ஹோமம், 22. மூர்த்தி ஹோமம், 23. சம்மிதா ஹோமம், 24. அங்குரார்ப்பணம், 25. ரக்ஷõ பந்தனம் 26. சயனாதி வாசம், 27. யாகசாலை தான்ய ஸ்தாபனம் - ஸூர்யகாந்தாக்நி ஸங்க்ரஹணம் 28. ருத்விக் சாதஹாதி வரணம் 29. ப்ரஸன்னாபிஷேகம் 30. கும்ப ஸ்தாபனம் 31. கலா கர்ஷணம் 32. மூர்த்தி ஹோமம் 33. யாத்ரா ஹோமம் 34. யாத்ரா தானம் 35. கடோத்வாஸனம், 36. யாகசாலா ப்ரவேசம் 37. யாக பூஜை ன த்ரவ்யாஹுதிகள், 38. யாக பூஜை - பூர்ணாஹுதிகள் 39. ஜம் ரத்ன ந்யாஸம், யந்த்ர ஸ்தாபனம், 40. தேவதா ஸ்தாபனம் 41. அஷ்ட பந்தனம், ஸ்வர்ண பந்தனம் 42. க்ருத சிரோர்ப்பணம் 43. தைலாபிஷேகம் 44. பிம்ப சுத்தி 45. பிம்ப ரக்ஷõ பந்தனம் 46. தீப ஸ்தாபனம், தீபலக்ஷ்மீ பூஜை. 47. லக்ஷ்மீ பூஜை. 48. கந்தலோபனம் 49. மஸ்தக ஜபம் 50. ந்யாஸார்ச்சனம் 51. சாந்தி கும்பம் 52. ஸ்பர்சாஹுதி 53. மஹா பூர்ணாஹுதி 54. யாத்ரா தானம் 55. கடோத்வாஸனம் 56. மூலாலய ப்ரவேசம் 57. ஸ்தூபி கும்பாபிஷேகம் 58. ஸ்வாமி கும்பாபிஷேகம் 59. பரிவார கும்பாபிஷேகங்கள் 60. யஜமான உற்சவம் 61. சண்ட ஹோமம் 62. மஹாபிஷேகம் 63. திருக்கல்யாணம் 64. திருநீதி உலா 65. அவப்ருத ஸ்நானம் 66. ஆசார்ய உற்சவம் 67. மண்டல பூஜாரம்பம் 68. மண்டலாபிஷேக பூர்த்தி 69. சண்டிகேசர் உற்சவம் 70. யஜமானஸ்ய பல ஸமர்ப்பணம்.
2.10 சங்கற்பம், அனுக்ஞை: ஆலய நிர்மாணம் தொடங்கி, எந்தக் காரியம் செய்தாலும், முதலாவதாக சங்கற்பமும், அனுக்ஞையும் செய்திடல் வேண்டும். எடுத்துக் கொண்ட காரியத்தை குருவின் உதவியுடன் செய்து முடிப்பதாக உறுதி பூணுதல் சங்கல்பம். விநாயகர், இறைவன், மூலமூர்த்தி முதலாக சண்டேச்வரர் ஈறாகவுள்ள அனைத்துத் தெய்வங்கள், குருமார்கள், பெரியோர்கள், முதியோர்கள் ஆகியோரது அனுமதியைக் கோரிப் பெறும் உத்தரவு பெறுதல் என்னும் நிகழ்ச்சியே அனுக்ஞை.
2.11 ப்ரவேச பலி: பூத, பிசாச, ப்ரம்மராக்ஷஸர்களுக்கு பலி (நைவேத்யம் முதலாய உபசாரப் பொருட்கள்) கொடுத்து, அவற்றை ஏற்றுக் கொண்டு வேறிடம் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக் கொள்ளும் கிரியையே ப்ரவேச பலி. இது கீழ்க்கண்ட காலங்களில் செய்திடல் வேண்டும். 1. புதுஆலய நிர்மாணம் தொடங்கும் போது 2. நெடுங்காலமாக நித்திய நைமித்திய பூஜைகள் இன்றிக் கிடந்த ஆலயங்களில் மீண்டும் வழிபாடுகள் தொடங்கும்போது 3. கும்பாபிஷேகங்களுக்கு முன்னதாக 4. மஹோத்சவங்களுக்கு முன்னதாக
2.12 ர÷க்ஷõக்ன ஹோமம்: புறத்தேயிருக்கும் தேவதைகளை அகற்ற ப்ரவேச பலி செய்யப்படுவதைப் போல, ஆலயத்தில் உள்ளிருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட ர÷க்ஷõக்ன ஹோமம் செய்யப்படும்.
2.13 வாஸ்து சாந்தி: ஆலயம் சமைப்பதற்கு முன்னாலும், பின்னர் நடைபெறும் சம்ப்ரோக்ஷணம்-பிரதிஷ்டை-கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முன்பாகவும், சங்காபிஷேகம், மஹோற்சவம் போன்ற பெருவிழாக்கள் துவங்குவதற்கு முன்னும் - ஆகிய காலகட்டங்களிலே, இடத்திற்கு தேவதையாக உள்ள வாஸ்து புருஷனையும், அவரது அதிவேதையான ப்ரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து, ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை, ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுதும் இழுத்துச் சென்று சுத்திகரித்து, இறுதியாக புண்யாஹவாசன கலச நீரினால் அவ்விடங்களை சுத்த செய்வதே வாஸ்து சாந்தியின் நிறைவு.
2.14 அங்குரார்ப்பணம்: அங்குரார்ப்பணம் என்பது முளை இடுதல் (பாலிகை). மஹோற்சவம், ப்ரதிஷ்டை ஆகிய காலங்களில் இந்நிகழ்ச்சி செய்யப்பெறும். சிவாச்சார்யார், 5 அல்லது 9 நாள் முன்னதாக, மங்கள முறைப்படி, 40, 24, 16 (அல்லது வைதீக முறைப்படி 5) பாலிகைகளில் நன்முளையிட்டு காலை - மாலை பஞ்சகவ்ய நீர் வார்த்து, அவற்றின் முளைகளை நன்கு கவனித்து, பயன்களை அறிந்து கொண்டு, அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்திடல் வேண்டும்
2.15 ம்ருத்ஸங்க்ரஹணம்: அங்குரார்ப்பணத்துக்காக சிவாச்சார்யார், ஆற்றங்கரை, மலையடிவாரம், நந்தவனம் போன்ற பரிசுத்தமான இடத்திலிருந்து புது மண் எடுத்து வரும் நிகழ்ச்சி ம்ருத்ஸங்க்ரஹணம் எனப்படும்.
2.16 ரக்ஷõபந்தனம் : ரக்ஷõபந்தனம் என்பது காப்புக் கட்டுதல். விழாவின் தொடக்கம் முதன், நிறைவு வரை, வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்பதற்காக, சிவாச்சாரியார், தமக்கும், யாகத்தில் பங்கு பற்றும் ஏனைய சிவாச்சாரியாருக்கும் காப்பு கட்டுவதுடன், மூல மூர்த்திக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அவரவர்க்குரிய ஸ்தானத்தில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்
2.17 ஸ்நபநம்: இறைவரை, தேவர்களை தற்காலிகமாக உருவேற்றிப் பூஜிப்பதற்கென, கும்பங்களைக் கலாகர்ஷணப் பொருளாக ஸ்தாபிப்பதே கடஸ்தாபனம் அல்லது ஸ்நபநம் எனப்படும். அப்படி ஸ்தாபிக்கப்பட்ட கும்பம் மூர்த்தியாகவே பாவிக்கப்படுகிறது. கும்பத்தோடு சகஜமாக இருக்கும் மண் உடலுக்கு உரிய அம்சம்; அதில் சுற்றப்படும் நூல் எழுபத்து இரண்டு ஆயிரம் நாடி நரம்புகள்; அதில் சுற்றப்படும் வஸ்த்ரம் தோல்; கும்பத்துள் இடப்படும் நீர் இரத்தம் மற்றும் மேதை எனப்படும் ஏழு தாதுக்கள்; கும்பத்துள் இடப்படும் நவரத்தினம், வெள்ளி, பொன் முதலியவை சுக்கிலம்; உள்ளே இடப்படும் கூர்ச்சம் முள்ளந்தண்டு எனப்படும் முதுகெலும்பு; மாவிலை சடை; தேங்காய் கபாலம்; வெளியே இடப்படும் கூர்ச்சம் குடுமி; நியாஸங்கள், ப்ராண ப்ரதிஷ்டை முதலான மந்திரங்கள் ஜீவன். கீழே பரப்பப்படும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆஸனம்; உத்தரீய மாலைகள், மலர்கள் முதலிய அலங்காரப் பொருள்கள்.
No comments:
Post a Comment