வாஸ்து பூஜை எப்போது செய்யலாம் ?
பார்தனில் குற்றம் தீரப் பகை இல்லா நாளைப் பார்த்து
சீர்பெறக் கணபதிக்குச் சிறப்பினால் பூஜை செய்து
நேர் பெற காளைகட்டி நிலமதை உழுது பின்னும்
பேர் நவதானியத்தைப் பெலமதாய் விதைத்துக் கொள்ளே
என்கிறது சிற்ப ரத்னாகரம். அதன் அறிவுரைப்படி, சுபயோக
சுபதினங்களைத் தேர்வு செய்து, முறைப்படி பூஜித்து, வீடு கட்டுவதற்கான
வேலைகளைத் துவங்கவேண்டும்.
வீடு கட்டுவதற்கான இடத்தைப் பார்க்கச் செல்வது முதல், வீடு
கட்டி முடிக்கும்வரை ஒவ்வொரு கட்டத்திலும்… ஜோதிட ரீதியாக லக்னத்தில்
இருந்து எந்தெந்த இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதையும் அறிந்து
செயலாற்றி னால், காரிய ஜெயம் உண்டாகும். இதுகுறித்தும் ஒரு பாடலில்
விளக்குகிறது, சிற்ப ரத்னாகரம்.
மனை பார்க்க இலக்கினமே சுத்தியாகும்
மனை போட இரண்டு ஏழாம் இடமே சுத்தம்
மனை தனக்கு மரம் வெட்ட மூன்றே சுத்தம்
மரம் தச்சு வேலை செய்ய நாலே சுத்தம்
மனை மாண வாசற்கால் நிறுத்த ஐந்து
வகை உத்திரம் போட ஆறாம் தானம்
மனை கூடம் குலம் தழைக்க ஏழே சுத்தம்
வடிவேலர் இந்நூலைக் குறித்திட்டாரே
குறித்து அலகு கை சாத்தி வைக்க எட்டாம்
குறுக்கும் பட்டைக்கு ஒன்பதாம், ஓடுபத்தாம்
தெருக்கதவு நிலை நிறுத்தப் பதினொன்றாகும்
திங்கள் புதன் குடிபுக ஈராறாம் சுத்தம்
பெருக்க முடன் இவ்வகையாய் அமர்ந்ததானால்
பேருலகில் மன்னருக்கு மன்னர் ஆவர்
பொருள் தனங்கள் மனை தனிலே சேரும் என்று
போக முனி இந்நூலை உரை செய்தாரே
இப்பாடல் தரும் தகவல்கள் என்ன தெரியுமா?
* வீட்டுக்கான மனையைப் பார்க்கச் செல்லும் நேரத்தில் லக்னம் சுத்தமாக அமையவேண்டும்.
* முதன்முதலாக வேலையைத் துவங்குவதற்கு, 2 மற்றும் 7ம் இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்.
* வீட்டுக்குத் தேவையான மரங்களை வெட்டி எடுத்துவரவோ அல்லது கடை யில் வாங்கச் செல்லும்போதோ 3ம் இடம் சுத்தமாக இருத்தல் வேண்டும்.
* தச்சு வேலை ஆரம்பிக்க 4ம் இடமும், தலைவாசல் நிலை நிறுத்துவதற்கு 5ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* உத்தரம் பதித்தல் போன்ற விஷயங்களைச் செய்ய 6ம் இடமும்,
வீட்டின் உள் கட்டமைப்பு வேலைகள் ஆரம்பிக்க 7ம் இடமும் சுத்தமாக இருக்க
வேண்டும்.
* மேற்புறம் கூரை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு
8ம் இடமும், மேலே குறுக்குப் பட்டைகள் வேலை ஆரம்பிக்க 9ம் இடமும், ஓடு
பதிக்க (அ) ஆகாயம் மூடுவதற்கு 10ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* தலைவாசற்கதவு தவிர மற்ற வாயில்களுக்கு கதவு நிலைகால் நிறுத்த 11ம் இடம் சுத்தமாக இருக்கவேண்டும்.
* திங்கள் மற்றும் புதன் கிழமை களில் வீடு குடிபுகும்போது,
12ம் இடம் சுத்தமாக இருக்கும் லக்ன அமைப்புடன் செய்தால், மன்னனுக்கு இணையான
சீரும் சிறப்பும் மிக்க வாழ்க்கை அமையும் என்பது போகர் வாக்கு.
மேலும், ஒவ்வொரு ராசிக்கு உரியவர்களும் அந்தந்த ராசிக்கு
உகந்த திசையை நோக்கி தலைவாயில் அமைந்த வீடுகளில் வசிப்பது சிறப்பு. மேஷம்,
சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் வடக்கு நோக்கியும், ரிஷபம், கன்னி
மற்றும் மகர ராசிக்காரர்கள் தெற்கு நோக்கியும், மிதுனம், துலாம் மற்றும்
கும்ப ராசிக்காரர்கள் மேற்கு நோக்கியும், கடகம், விருச்சிகம் மற்றும் மீன
ராசிக்காரர்கள் கிழக்கு நோக்கியும் தலைவாசல் அமைந்த வீடுகளில் வசிப்பது
விசேஷம். இதனால் நோயற்ற வாழ்வு, ராஜ யோகம், வம்ச விருத்தியுடன் வளமாக
வாழலாம்.
அதேபோல், 12 ராசிக்காரர்களும் தங்களது வீடுகளை ஊரின் எந்த பாகத்தில் அமைக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டலும் உண்டு.
மேஷம்: ஊரின் வடக்குப் பக்கம் வீடு அமையக்கூடாது
ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம்: ஊரின் மையப்பகுதியில் வீடு அமையக் கூடாது
கடகம்: தெற்குப் பகுதியில் வீடு அமையக்கூடாது.
கன்னி: ஊரின் தென்மேற்கில் வீடு அமையக்கூடாது.
துலாம்: ஊரின் வடமேற்குப் பகுதி கூடாது.
விருச்சிகம்: ஊரின் கிழக்குப் பகுதி கூடாது.
தனுசு: ஊரின் மேற்குப் பகுதி கூடாது.
கும்பம்: வடகிழக்கில் வீடு அமையக் கூடாது.
மீனம்: தென் கிழக்குப் பகுதி ஆகாது.
தற்காலத்தில் இந்த நியதிகள் யாவும் பொருந்தும்படி வீடுகள்
கிடைப்பது வெகு அபூர்வம்தான். எனினும், இயன்றவரையிலும் மேற்சொன்ன
நியதிகளைக் கவனத்தில் கொண்டு வீடு கட்டி, குடிபுகுந்து சிறப்பான
வாழ்க்கையைப் பெறுவோம்.
இனி, வாஸ்து பூஜை குறித்து அறிவோம்.
பூமி மற்றும் ஆகாயவெளியில் வெளிப்படும் பல்வேறு சக்திகள் ஒரே
சீராகக் கிடைப்பது இல்லை. விண்வெளியில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்கள்
மற்றும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு பொருட்களில் இருந்து
வெளிப்படும் சக்திகளின் மாற்றங்கள் பல நல்ல விளைவு களையும் தீய
விளைவுகளையும் ஏற்படுத்தும். இவற்றில் நல்ல விளைவுகளுக்கான சக்திகளைக்
கிரகித்து, சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதற்கு நம் முன்னோர்களும்,
குருமார்களும், மகான்களும் பல வழிகளைச் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளனர்.
அதில் குறிப்பிடத்தக்கது வாஸ்து வழிபாடு.
வாஸ்து புருஷன் நித்திரையை விடும் நாட்கள்…
நம் வீட்டைக் காக்கும் கடவுளான வாஸ்து பகவான் பூமாதேவியின்
மகனாவார். வீடுகட்டுமுன் இவருக்கு முறைப்படி பூஜை செய்ய வேண்டும்.
எப்போதும் நித்திரையில் இருக்கும் இவர், கீழ்க்காணும் நாட்களில்நேரங்களில்
மட்டும் நித்திரையை விட்டு விழித்திருப்பார்.
சித்திரை 10ம் தேதி காலை 8 9:30
வைகாசி 21ம் தேதி காலை 9:12 10:42
ஆடி 11ம் தேதி காலை 6:48 8:18
ஆவணி 6ம் தேதி மாலை 2:24 3:54
ஐப்பசி 11ம் தேதி காலை 6:48 8:18
கார்த்திகை 8ம் தேதி காலை 10 11:30
தை 12ம் தேதி காலை 9:12 10:42
மாசி 22ம் தேதி காலை 9:12 10:42
இந்த மாத, நாள் மற்றும் நேர விவரங்கள் எல்லா வருடத்திலும்
நிலையானதாகவே இருக்கும். இந்த நாட்களுக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம்
கிடையாது. இந்த நாட்களில் வாஸ்து புருஷன் 90 நிமிடங்கள்
விழித்திருக்கிறார். குறிப்பிட்ட நாட்களில் வாஸ்து புருஷன் விழிப்பதில்
இருந்து ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல்,
பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில்
செயல்பட்டுவிட்டு, மீண்டும் நித்திரைக்குச் செல்வார். இதில் வாஸ்து புருஷன்
உணவு உண்ணும் நேரத்திலும், வெற்றிலை போடும் நேரத்திலும் அவருக்கு பூஜை
செய்து வீடு கட்ட ஆரம்பித்தால், எவ்வித தடையுமின்றி வீடு கட்டி
முடிக்கலாம்.
அதன்படி கீழ்க்காணும் நேரங்களில் மனைகோல நல்ல நேரங்களாகக் கருதலாம்.
சித்திரை 10ம் தேதி காலை 8:54 9:30
வைகாசி 21ம் தேதி காலை 10:06 10:42
ஆடி 11ம் தேதி காலை 7:42 8:18
ஆவணி 6ம் தேதி மாலை 3:18 3:54
ஐப்பசி 11ம் தேதி காலை 7:42 8:18
கார்த்திகை 8ம் தேதி காலை 10:54 11:30
தை 12ம் தேதி காலை 10:06 10:42
மாசி 22ம் தேதி காலை 10:06 10:42
No comments:
Post a Comment