எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா? நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.
ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.
ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி? இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.
பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்? எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.
கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா? நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது. அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.
பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?
குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
தற்காலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறார்களா? விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்? புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் இல்லங்களிலேயே செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.
கோயிலில் அரசமரம், வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன? அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை "அசுவத்த நாராயணர்' என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, "அ”வத்த விவாஹம்' எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்.இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.
No comments:
Post a Comment