எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
பிள்ளையார் பிடிக்க குரங்காகிப் போன கதை என்கிறார்களே, இதற்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பு உண்டா?இது முழுக்க முழுக்க ஆன்மிகம் சார்ந்த ஒரு பழமொழியே! காலப்போக்கில் நம்மால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்ட ஒரு பழமொழி. நல்லது என்று நினைத்து ஒரு காரியத்தைச் செய்யப்போக, அதற்கு ஏதேனும் சங்கடங்கள் உருவாகிவிடும்போது இந்தப் பழமொழியை உபயோகிக்கிறார்கள்.
“நான் நல்லதுதாம்பா செய்யப்போனேன், ஆனா அது கடைசியில இப்படி ஆயிடுச்சு. பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்காயிடுச்சு” என்று அங்கலாய்ப்பார்கள். ஆனால், இந்தப் பழமொழிக்கான உண்மையான அர்த்தம் அதுவல்ல. நம் வீட்டில் பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்த பூர்த்தி என எந்த ஒரு மங்களகரமான நிகழ்ச்சியைத் துவக்கும்போதும் முதலில் மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து பூஜையைத் துவக்குவார்கள்.
பிள்ளையார் பூஜையைத் தொடர்ந்து அனைத்து தேவதைகளையும் ஆவாஹனம் செய்து அவர்களுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவார்கள். ஆவாஹனம் செய்யப்பட்ட தேவதைகளுக்கு உரிய மந்திரங்களைக் கொண்டு ஹோமங்களையும் செய்வார்கள். இறுதியில் ‘ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே’ என்ற மந்திரத்தைச் சொல்லி ராமபிரானை துதிப்பார்கள்.
இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னாலே ஆயிரம் முறை ராமநாமத்தினை ஜபம் செய்ததற்கான பலன் வந்து சேர்வதால் எல்லா பூஜைகளின் போதும் இந்த மந்திரத்தைச் சொல்வது வழக்கம். எங்கெல்லாம் ராமனின் நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தவறாமல் ஆஞ்சநேயர் ஆஜராகிவிடுவார் என்பதால் ஹோமத்தின்போது அவருக்குரிய ஹவிர்பாகத்தையும் தவறாமல் வழங்கி பூஜைகளை முடிப்பார்கள். அதாவது, எல்லா விசேஷங்களையும் பிள்ளையார் பூஜையில் துவங்கி குரங்காகிய ஆஞ்சநேய ஸ்வாமியின் பூஜையோடு முடிப்பதை வழக்கத்தில் கொண்டார்கள்.
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிப்பது என்ற கருத்து காலப்போக்கில் மருவி பிள்ளையார் பிடிக்க குரங்காகிவிட்டதாகத் திரிந்து விட்டது. ஒரு சில ஆலயங்களில் ஒரு பாதி விநாயகராகவும், மறுபாதி ஆஞ்சநேயராகவும் வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கண்டிருப்பீர்கள். இவரை ‘அத்யாந்த ஸ்வாமி’ என்ற பெயரில் அழைப்பார்கள். அதாவது ஆதியந்த ஸ்வாமி என்பதை அவ்வாறு குறிப்பிட்டிருப்பார்கள். ஆதி என்றால் தொடக்கம் அல்லது ஆரம்பம். அந்த தொடக்கம் என்பது விநாயகரை குறிக்கும். அந்தம் என்றால் முடிவு அல்லது இறுதி.
இது ஆஞ்சநேயரை குறிக்கும். இந்த இரண்டு உருவங்களும் இணைந்த ஸ்வரூபத்தினை ஆதியந்த ஸ்வாமி அல்லது அத்யாந்த ஸ்வாமி என்று அழைக்கிறார்கள். ஆக,
பிள்ளையார் பிடித்து துவங்கிய பூஜையானது குரங்கு ஆகிய ஆஞ்சநேயர் ஸ்வாமியில் முடிவடைந்து எந்தவிதமான தடங்கலுமின்றி பூஜை நல்லபடியாக நடந்து முடிந்தது என்பதே அதன் பொருள். பழமொழியின் உண்மையான பொருள் நல்லபடியாக காரியம் நடந்து முடிந்தது என்பதே ஆகும்.
No comments:
Post a Comment