Thursday, 19 September 2019

சிவனின் ஐந்து சபைகள்

சிவனின் ஐந்து சபைகள்
ஐந்து சபைகள் என்பவை இறைவனான சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களாகும். இச்சபைகள் பஞ்ச சபைகள், ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பொற்சபை, இரஜித சபை (வெள்ளி சபை), இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுகின்றன. இவைகள் முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் அமையப் பெற்றுள்ளன.
மார்கழி திருவாதிரை திருவிழா மற்றும் ஆனி திருமஞ்சனம் ஆகிய நாட்கள் ஆடலரசனுக்கு முக்கிய திருவிழா நாட்கள் ஆகும். இனி ஐந்து சபைகளைப் பற்றிப் பார்ப்போம்.
பொற்சபை – திருமூலட்டநாதர் திருக்கோயில், சிதம்பரம்
இரஜித சபை (வெள்ளி சபை) – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
இரத்தின சபை – வடராண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு
தாமிர சபை – நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
சித்திர சபை – குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம்

பொற்சபை – திருமூலட்டநாதர் திருக்கோயில், சிதம்பரம்
பொற்சபை
இவ்விடம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் நடனத்தின் நாயகனாக நடராஜனாக தனது திருநடனத்தை உமையம்மையுடன் பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாத முனிவர் மற்றும் உலக மக்களுக்கு காட்டியருளினார்.
நடராஜர் நடனமாடிய இவ்விடம் பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இங்கு இறைவன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் நடனமாடுகிறார். இவ்விடத்தில் இறைவனின் திருநடனமானது ஆனந்த தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் பொன்னால் ஆன கூரையின் கீழ் தனது திருநடனத்தைக் காட்டியருளுகிறார்.
இத்தலத்தில் இறைவன் பொன்னம்பலவாணன், நடராஜன், கனக சபாபதி, அம்பலவாணன், ஞானக்கூத்தன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருநடனத்தைப் போற்றும் வகையில் இங்கு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது.
இவ்விடத்தில் மூலவர் திருமூலட்டநாதர் என்ற பெயரிலும், அம்மை சிவகாமி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

இரஜித சபை (வெள்ளி சபை) – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
வெள்ளி சபை
இவ்விடம் மதுரை மாவட்டம் மதுரையில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் தனது பக்தனின் வேண்டுகோளுக்கிணங்க வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி கால் மாறி நடனம் புரிகின்றார்.
இவ்விடம் வெள்ளியம்பலம், வெள்ளி சபை, வெள்ளி மன்றம் என்றழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் மாணிக்க மேடையில் தனது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் தேவர்கள் இசைக்கருவிகள் இசைக்க திருநடனம் புரிகின்றார்.
முதலில் இறைவன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்த பதஞ்சலி மற்றும் வியாக்கிரத பாதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க தில்லையில் ஆடிய நடனத்தை வெள்ளியம்பலத்தில் காட்டியருளினார்.
பின் ராஜசேகரப் பாண்டியனின் வேண்டுகோளினை ஏற்று கால் மாறி நடனம் ஆடினார். இங்கு இறைவனின் தாண்டவம் சந்தியா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம் என்றழைக்கப்படுகிறது.
இங்கு இறைவன் சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்களிலும், அம்மை மீனாட்சி, அங்கையற்கண்ணி என்ற பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.

இரத்தின சபை – வடராண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு
இரத்தின சபை
இவ்விடம் திருவள்ளுர் மாவட்டத்தில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் சிவபெருமான் ஆலங்காட்டின் தலைவியான காளியை நடனத்தில் வெற்றி பெற்றார்.
இவ்விடம் இரத்தின அம்பலம், இரத்தின சபை, மணி மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன் வலது காலை ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார்.
காளியுடனான நடனப்போட்டியில் காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார்.
இறைவன் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, இரத்தின சபாபதி என்றும் அவரின் தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம், அனுக்கிரக தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது.
இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தன் தலையால் நடந்து வந்து ஊர்துவ தாண்டவ மூர்த்தியின் திருவடியில் அமர்ந்து இறைவனின் திருநடனத்தை கண்டுகளித்த இடம் இது.
இங்கு இறைவன் வடராண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை வண்டார்குழலி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

தாமிர சபை – நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
தாமிர சபை
இவ்விடம் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் தாமிரத்தினால் ஆன அம்பலத்தில் நான்கு கரங்களுடன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார்.இச்சபையில் இறைவனின் திருத்தாண்டவம் முனித்திருத்தாண்டவம், காளிகா தாண்டவம் என்றழைக்கப்படுகிறது.
இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இங்கு மூலவர் நெல்லையப்பர் என்ற பெயரிலும், அம்மை காந்திமதி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

சித்திர சபை – குற்றலாநாதர் திருக்கோயில், குற்றாலம்
சித்திர சபை
இவ்விடம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் யமனை வென்று, சிவகாமி அம்மையை இடத்தில் கொண்டு மார்க்கண்டேயனுக்கு அருளிய மூர்த்தியாக சித்திர வடிவில் காட்சியருளுகிறார். இச்சபையில் இறைவனின் திருநடனம் திரிபுரதாண்டவம் என்றழைக்கப்படுகிறது.
இத்தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மன் தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாகக் கருதப்படுகிறது. இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
சித்திர சபையின் கூரையானது செப்புத்தகடுகளால் ஆனது. இங்கு மூலவர் குற்றாலநாதர் எனவும், அம்மை குழல்வாய்மொழி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
உலக உயிர்கள் உய்யும் பொருட்டு தனது திருநடனத்தினை காட்டியருளும் ஆடல்நாயகனின் நடனங்களை ஐந்து சபைகளிலும் கண்டு பெரும் பேற்றினைப் பெறுவோம்.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...