Saturday, 4 March 2017

வைராக்கியத்தால் வெற்றி எளிது

வைராக்கியத்தால் வெற்றி எளிது 


வைராக்யம் வைத்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம்




வைராக்யம் வைத்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம். அதிலும் ஆன்மிகத்தில் வெற்றியை எளிதாக்க இந்த வைராக்யம் பெரிதும் உதவுகிறது. வைராக்யம் இல்லா மனிதன் சிறு வெற்றியைகூட பெற முடிவதில்லை. வைராக்கியம் உடையவனுக்கே வைராக்கியத்தின் வலிமை புரியும் என்பார்கள். விரதம் பல நாள் இருப்பதும், தீ மிதிப்பதும், உடலெங்கும் செடல்போடுவதும், பல மைல் நடந்து பாதயாத்திரை போவதும், கடினமான மலை உச்சியில் ஏறி தரிசனம் செய்வது இவையாவும் வைராக்கியத்தால் சாத்தியமானதுதான். 

அகிம்சாவாதியாக வாழ்வதும், தர்மப்படி வாழ்வதும், ஒழுக்கமாக வாழ்வதும்கூட ஒரு வைராக்கியம்தான். தோற்றவனை பார்த்து மற்றவர் செய்யும் கேலி கிண்டல் அவனை உசுப்பிவிடும் வைராக்கியம் மேலோங்கி மறுபடி வெற்றி பெற்றுவிடுவான். உறவுகளால் துரோகம் செய்யப்பட்டு வெருங்கையோடு விரட்டி விடப்பட்டவன் வாழ்வில் வேதனையை வைராக்கியமாக்கி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து மோசம் செய்த உறவுகள் முன் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவான். இதற்கு துணையாக வந்தது அவன் மன வைராக்கியம் மட்டுமே இருக்க முடியும்.




நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் தவறி விழுந்தால் அவன் உயிர்காக்க எடுத்துக்கொள்ளும் வைராக்கியம் மகத்துவமானது. போட்டியில் வெற்றிகொள்ள ஒருவன் எடுக்கும் சபதம் வைராக்கியத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். வைராக்கியம் என்பது ஒரு இக்கட்டான சூழலில் ஆழ்மனதில் இருந்து உருவாகும் சக்தியாகும். இந்த வைராக்கியம் அவமானத்தாலோ, ஏமாற்றத்தாலோ, வெற்றி மோகத்தாலோ, ஆபத்து சூழ்நிலையிலோ, விடா முயற்சியாலோ வரக்கூடியதாகும்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் மகாபாரத அர்ஜீனனின் இக்கட்டான சூழ்நிலை அவனுக்கு வைராக்கியம் கொடுத்தது. பலகாலம் தவமேற்றிக்கொண்டிருக்கும் முனிவர்களால் முடியாததை தன் மனபலத்தால் அர்ஜீனன் சிவனிடம் வரங்களைப் பெற்றான். காரணம் வைராக்கியத்தில் ஒருவித சக்தி புதிதாக யாருக்குமே உருவாகும். அதுதான் அர்ஜீனனுக்கும் உண்டாகி வெற்றியை கொடுத்தது. 

அதேபோல் ராஜரிஷி எனும் விசுவாமித்திரர் வெற்றி அடையக் காரணம் அவர் வாழ்வில் நடந்த அவமானம் விரக்தியே வைராக்கியமாக மாற்றியது. அதுவே பல தடைகளை கடந்து வெற்றிபெற உதவியது. வைராக்கியம் வந்துவிட்டால் எல்லாம் சுலபமாகவே தோன்றும். எதுவுமே கஷ்டமாக இருக்காது. முடியாததையும் முடிக்க முடியும். இதை நிரூபித்தவர் விசுவாமித்ர மகரிஷியாவார். 

அதேபோல் புத்தபிரானும் அரச வாழ்வை துறக்க வைராக்கியமே பெரிதும் உதவியது. சாமான்யன் சன்னியாசியாவது பெரிய விஷயமல்ல. ஆனால் எல்லா வசதியும் மதிப்பும் ஆரோக்கியமும் இருந்தும் அரச மரியாதை யாவும் இருந்தும் அவையெல்லாம் துறந்து சன்னியாசியாவது வைராக்கிய மனிதனால் மட்டுமே முடியும். அதைத்தான் புத்தர் செய்தார். ஞான மார்க்கத்தில் ஈடுபட்ட அவர் சுகவாழ்விற்கு மீண்டும் திரும்பியிருக்கலாம். அனால் பலகாலம் ஆகியும் ஞானம் கிடைக்காதபோதும் உறுதியான மன வைராக்கியத்தோடு இருந்து பல காலத்திற்கு பின் ஞானம் பெற்றார் .
.
மகாபாரதத்தில் பீஷ்மர் செய்த சத்தியத்தை கடைசிவரை காப்பாற்றினார். அதற்கு முக்கிய காரணமே வைராக்கியம்தான். இழந்த நாட்டை மீண்டும் பெற்ற ராஜாக்களின் வரலாற்றைப் பாருங்கள். அவர்களின் ஆவேச வெற்றிக்கு வைராக்கியமே காரணமாக இருக்கும். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கு பின்னால் அவர்களின் விடாமுயற்சியும் வைராக்கியமும் இவற்றிற்கு உதவியதை அறியலாம். 

ஹிட்லரின் வெற்றிக்கும், ஜப்பானின் வெற்றிக்கும் வைராக்கியமே காரணமாகும். நம் இந்தியநாடு சுதந்திரம் பெற்றதும் நம் தலைவர்களின் ஒற்றுமையைவிட அவர்கள் மனதில் இருந்த விடாமுயற்சியும் வைராக்கியமே காரணம்.

சினிமாவில்கூட கதாநாயகன் ஒரு பாட்டிலேயே முன்னுக்கு வந்ததைப்போல் பல படங்களில் காட்டியுள்ளார்கள் கவனித்திருப்பீர்கள். ஹீரோக்கள் வைராக்கியத்தை முன்வைத்து உயர்ந்ததை கதை மூலம் உணரலாம். இருக்காலும் இல்லாதவன் நடனமாடுகிறான் என்றால் அவன் விடாமுயற்சியோடு வைராக்கியத்தை கொண்டதால்தான் சாதிக்க முடிந்தது என்பதை அறிவீர்.

 சமூகத்தில் ஒரு அபலைப்பெண் வெற்றியோடு வாழ்ந்து காட்டுகிறாள் என்றால் அவள்கொண்ட வைராக்கியமே காரணமாகும். எந்த ஒரு மனிதனின் வெற்றிப்படியும் வைராக்கியத்தாலும் விடாமுயற்சியாலும் அமைந்ததாகவே இருக்கும். 


இன்று நாம் சித்தர்கள் என்று வணங்குகிறோம். அவர்கள் கொடுத்துச் சென்ற அதிசயங்களை கொண்டு பலன் பெற்றுக்கொண்டிருக்கிறோம். போற்றுகிறோம் அல்லவா? அந்த மகான்களின் வெற்றி வைராக்கிய பயிற்சியால் உருவானது என்பதையும் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். ஆக இது போன்ற வைராக்கியமும், விடாமுயற்சியும் தெய்வ தியானத்திற்கு அவசியம் தேவை. வைராக்கியம் இல்லாத தவம் வெற்றிக்கு பல வருடங்கள் ஆகும். அன்பு, தர்மம், ஒழுக்கம், மௌனம், விரதம், விஷயம் அறிதல் இவைகளை மட்டும் கடைபிடிப்பதால் வெற்றி பெற்றுவிடலாம் என ஏமாந்து போகாதீர்கள். வைராக்கியம் கலந்த விடாமுயற்சி ஒன்றே வெற்றியை எளிதாக்கும்.

பல வெற்றியாளருக்கு வைராக்கியம் சூழ்நிலையால் வந்ததாகவே இருக்கும். இதையெல்லாம் மீறி உங்களால் வைராக்கியம் வரவழிக்க திடமான மனம் வேண்டும். உங்களாலும் முடியும் முயலுங்கள். உங்கள் குற்றம் குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள். ஒரு முடிவை எடுங்கள் அதில் சாகும்வரை உறுதியாய் இருங்கள். வைராக்கியம் உங்களை பற்றிக்கொள்வதை உணர்வீர். என்னாலும் முடியும் என்ற வார்த்தை தன்னம்பிக்கையால் மட்டும் சொன்னால் போதாது வைராக்கியத்தையும் வைத்து முயன்றால் மட்டுமே உங்களாலும் முடியும்.

அன்பு வாசகர்களே நீங்கள் ஆன்மிக பயிற்சியில் வெற்றிபெற ஆசைப்பட்டால் வைராக்கியத்தின் மதிப்பை உணருங்கள்.
நான் காசியில் தங்கிய நாட்களில் அகோரர்களின் தவநெறியை கண்டு வியந்திருக்கிறேன். அவர்கள் சாதனை யாவும் முழுக்க முழுக்க வைராக்கியத்தால் கட்டப்பட்ட அசைக்க முடியாத கோட்டையாகும். இமயமலை சாரலுக்கு பல கம்பளிகளை போர்த்திக்கொண்டு சென்றிருக்கிறேன். அங்கு தவத்தில் ஆழ்வதற்காக பனியில் பழகாத அருளாளர்கள் வெற்று உடலுடன் தவம் இயற்றுவதை கண்டு அரண்டு போயிருக்கிறேன். விசாரித்தபோது என் மனம் உயிர் யாவும் சிவனை மட்டுமே நாடியுள்ளது. இந்த குளிரை நாடி உள்ளவருக்குத்தான் குளிர் தெரியும் என்றார்கள். இந்த வார்த்தை அவர்கள்  வைராக்கியத்தை உணர்த்துவதை உணர்ந்தேன். நான் போர்த்திய கம்பளியை அப்போதே அகற்றினேன் . அகற்றியவுடன் கடுமையான குளிர் என்னை வாட்டியது . எவ்வளவு குளிர் எடுத்தாலும் கம்பளியை தொடுவதில்லை என வைராக்கியம் கொண்டேன் சற்று நேரத்தில் குளிர் எப்படி மறைந்தது என்றே தெறியவில்லை .

காசியில் கங்கை நதியில் திடீரென தண்ணீர் அதிகமாகும். திடீரென தண்ணீர் குறைந்தும் போகும். கரையில் நாகா சாதுக்கள் அமர்ந்து தவம் இயற்றுவார்கள். நான் அணுகி கேட்பேன். மகாதேவ் கங்கையில் தண்ணீர் அதிகமானால் நீங்கள் அடித்துச்செல்லப்படுவீர்களே அதைப்பற்றிய பயம் உங்களுக்கு இல்லையா என்று கேட்டேன். அவர்கள் கூறிய வார்த்தை என்னவெனில் விஸ்வநாதனிடம் என் உயிர் இருக்கும்போது கங்கையால் என் உயிரை எடுக்க முடியுமா?  வெற்று உடலை நீ பார்த்துக் கொண்டிருப்பது போல் இந்த நிலையற்ற உடலையே கங்கையும் இழுத்துச் செல்வாள். என்றாக இருந்தாலும் இந்த உடல் அவளுக்குத்தானே அதை இன்றே எடுத்துப்போனாலும் நன்றுதானே. ஆனால் என் தவம் பூர்த்தியாகாமல் இந்த கங்கையால் எனக்கு எந்த இடரும் வராது என்று கூறினார். இந்த வார்த்தையில் இருந்தே அவர் தன்னம்பிக்கையும், கொண்ட உறுதியும், வைராக்கியமும் வெளிப்படுவதை கண்டேன்.


அன்பர்களே நான் இந்தியாவின் பல பகுதியில் உண்மையை தேடி சுற்றியிருக்கிறேன். அதில் வெற்றிகண்ட ஆன்மிக + வாதிகளை அணுகி பல ரகசியங்களை சேகரித்தேன். அதில் அனைவரும் வெவ்வேறு தகவல்களை கூறினார்கள். அதில் ஒரே ஒர விஷயம் மட்டும் அனைவரும் கடைபிடித்த ரகசியத்தை அறிந்தேன். அது வேறொன்றும் இல்லை வைராக்கியம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவைகளேயாகும்




ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்
திருகோவிலில்செயலார் ஜோதிடமாமணி 
ஜோதிட விசாரத், ஜோதிடத்னா பிரசன்ன திலகம் 
திருப்பூர் மாவட்ட தேவசாரஜோதிட 
சங்கத்தின் தலைவர் ஜோதிஷஆதித்யா,
திரு A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி 
                             
 செல்:+91 99941-50658

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...