முதுமையில் என்ன செய்யலாம்? ஜப்பானியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை!
முதுமை என்பது மனம் விரும்பியபடி வாழத் தொடங்கும் புதிய அத்தியாயமேயொழிய வாழ்க்கையின் முடிவல்ல என்கிறார்கள் ஜப்பானியர்கள். உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பானில், பலர் தொண்ணூறு, நூறு வயதைக் கடந்தும் உற்சாகமாக வாழ்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் பின்பற்றும் எளிமையான வாழ்க்கை முறையே.
ஜப்பானியர்கள் ஓய்வுபெற்ற பிறகு "இனி எதுவும் செய்ய வேண்டியதில்லை" என்று நினைப்பதில்லை. மாறாக, "இனி நாம் விரும்பியதைச் செய்யும் நேரம் வந்துவிட்டது" என்று கருதுகிறார்கள். அதனால் புதிய கலைகளைக் கற்றுக்கொள்வதும், தோட்டம் அமைப்பதும், புத்தகங்கள் வாசிப்பதும், ஓவியம் வரைவதும், இசை பயில்வதும், பயணம் செய்வதும் எனத் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
அவர்களுடைய வாழ்க்கையில் 'இகிகாய்' என்ற ஒரு அழகான தத்துவம் உள்ளது. அதாவது, "ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்க ஒரு காரணம் இருக்க வேண்டும்" என்பதே அதன் சாரம். அது பெரிய சாதனையாக இருக்க வேண்டியதில்லை. ஒரு செடியைப் பராமரிப்பது, பேரக்குழந்தையுடன் விளையாடுவது, நண்பரைச் சந்திப்பது, ஒரு நல்ல புத்தகம் வாசிப்பது போன்ற சிறிய செயல்களே வாழ்க்கைக்கு அர்த்தம் தருகின்றன.
ஜப்பானியர்கள் தினமும் உடலை இயக்குவதை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள். வயது எவ்வளவு ஆனாலும் நடைப்பயிற்சி, மெதுவான உடற்பயிற்சி, யோகா அல்லது ரேடியோ தைசோ எனப்படும் குழு உடற்பயிற்சியில் பங்கேற்கிறார்கள். உடல் இயங்கினால் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
உணவிலும் அவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். வயிறு முழுவதும் நிரம்பும் வரை சாப்பிடாமல், சுமார் எண்பது சதவீதம் நிறையும் அளவிலேயே உணவை நிறுத்தும் 'ஹாரா ஹாச்சி பு' என்ற பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் நீண்ட காலம் நிலைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தனிமையில் வாழ்வதை அவர்கள் விரும்புவதில்லை. நண்பர்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துவது, விளையாடுவது, பாடல்கள் பாடுவது போன்றவை அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கின்றன.
முதுமையிலும் புதியவற்றைக் கற்றுக்கொள்வதில் அவர்கள் தயங்குவதில்லை. பலர் கணினி, கைப்பேசி, இணையம், புதிய மொழி போன்றவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். "கற்றல் நிற்கும் இடத்தில்தான் முதுமை தொடங்குகிறது" என்பது அவர்களின் வாழ்க்கைச் செய்தி.
மேலும், தினமும் நன்றியுணர்வுடன் வாழ்வதையும் அவர்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். கிடைத்தவற்றை எண்ணி மகிழ்வதும், இயற்கையை ரசிப்பதும், சிறிய விஷயங்களைக் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதும் அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
நூறு வயதைக் கடந்தும் சுறுசுறுப்பாக வாழும் ஜப்பானியர்களைப் பற்றி ஆய்வு செய்தபோது, அவர்கள் பலரும் ஒரு பொதுவான கருத்தைக் கூறினர். அது என்ன தெரியுமா? "உடலை இயக்குங்கள், மனதை இளமையாக வைத்திருங்கள், பிறருக்குப் பயன்படும் ஒரு செயலைத் தினமும் செய்யுங்கள்."
முதுமை என்பது வயதில் வரும் மாற்றம்தான். ஆனால் மனதில் வரக்கூடாத மாற்றம். வாழ்வதற்கான காரணத்தைத் தேடி, அன்பைப் பகிர்ந்து, உடலை இயக்கி, மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே ஜப்பானியர்கள் உலகிற்குக் கற்றுக் கொடுக்கும் மிகப் பெரிய பாடம்.
வயது அதிகரிக்கலாம். ஆனால் வாழ்வில் ஆர்வம் ஒருபோதும் குறையக் கூடாது என்பதே அவர்களின் வாழ்க்கைத் தத்துவம். எவ்வளவு அழகான தத்துவம்!
ஆம்! "கற்றல் நிற்கும் இடத்தில்தான் முதுமை தொடங்குகிறது

No comments:
Post a Comment