Friday, 8 March 2019

பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்


              பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும்.

வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா?

1. நிலம்

தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப் பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் சொகுசாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறான்.

மனிதனிடமும் பல்வேறு வகையான திறமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. ஒரு திறமைகூட இல்லாத மனிதன் உலகில் யாராவது உண்டா?

ஆனால், எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வைத்திருக்கிற மனிதன், அதில் எத்தனை திறமைகளை வெளிக்கொண்டு வந்தான்? அவற்றால் எத்தனை பலன்களை அடைந்தான்? இதுதான் கேள்வி.

இன்னொரு விஷயம். கார் நிற்கும், ரயில் நிற்கும். பூமி எப்போதாவது நின்றிருக்கிறதா? நின்றால் என்ன ஆகும்?

இயக்கம்தான் பூமியின் இலக்கணம். இயக்கம்தான் மனிதனின் ஆக்கத்திற்கும் அடிப்படை. உழைப்பு, உழைப்பு, ஓயாத உழைப்பு. இதுவே மனித வளர்ச்சிக்கான ஏணி.

நம்மிடம் திறமை இருக்கிறது. வெளியே கொண்டுவர வேண்டும். இடைவிடாத இயக்கமே அளவிலாத ஆக்கம் தரும்.

இவையே நிலம் நமக்குச் சொல்லும் பாடங்கள்.

2. வானம்

வானத்திற்கு எல்லையுண்டா? அதுபோல் மனிதனின் கனவுகளும் லட்சியங்களும் வானம்போல் எல்லையற்று விரிந்து இருக்க வேண்டும். கனவுகளும் லட்சியங்களும் எந்த அளவுக்கு உயர்வாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நமது முயற்சிகளின் தீவிரமும் அதிகமாக இருக்கும். முயற்சிகளின் தீவிரத்தைப் பொருத்தே வெற்றிகள். வெற்றிகளைப் பொருத்தே வளங்கள்; செழிப்பு; மகிழ்ச்சி.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு

பாதங்கள் மண்ணில் பதிந்திருந்தாலும், பார்வை வானத்தில் இருக்கட்டும்.
இது, வானம் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம்.

3. நீர்

மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் தன்மை உடையது நீர். மேகத்தின் சுமை நீர்த்துளிகள். அதை மழையாகக் கீழே விடுகிறது. ஆற்றின் சுமை வெள்ளம். பள்ளங்களைத் தேடிப் பயணம் செய்து கடைசியில் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடுகிறது.

மனிதனும் தனக்குச் சுமையாக உள்ள கெட்ட பழக்கவழக்கங்கள், அழிவுச் சிந்தனைகள், சோம்பல், பயம், தாழ்வு மனப்பான்மை, கவலை போன்ற ஆக்கத்திற்காகாத அத்தனையையும் கீழே இறக்கி வைத்தால் தான் வாழ்க்கை வளம் பெறுகிறது.
ஆக்கத்திற்கு உதவாத எண்ணங்களை, செயல்களை, பழக்க வழக்கங்களை, நபர்களை விட்டுவிடு.

நீர் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்.

4. நெருப்பு

ஒரு சின்ன தீப்பொறி போதும். காடே எரிந்து சாம்பலாவதற்கு.
ஒரு சின்ன வெறி, வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்; வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறி போதும், ஒரு மனிதனின் தலையெழுத்தை மாற்ற; அவனது தலை முறையையே தலைநிமிர்ந்து வாழ வைக்க. ஒரு தீக்குச்சியை, ஒரு தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும் தீயின் ஜ்வாலை மேல் நோக்கித்தான் இருக்கும்.

இது என்ன சொல்கிறது மனிதனுக்கு?

நமது எண்ணங்களும் செயல்பாடுகளும், மேல்நோக்கித்தான் இருக்க வேண்டும். அதாவது, மேன்மைகளை நோக்கித்தான், வளர்ச்சிகளை நோக்கித்தான், முன்னேற்றங்களை நோக்கித்தான், உயர்வை நோக்கித்தான் இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் நெருப்பு நமக்குச் சொல்லும் பாடங்கள் அல்லவா?

5. காற்று

இந்த உலகில் காற்று இல்லாத இடம் எது?

நம்மைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கவசமாக காற்று இருக்கிறது.

இதைப்போலத்தான் நம்மைச் சுற்றி ஒரு கவசமாக, பாதுகாப்பாக, வழித்துணையாக தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தன்னம்பிக்கை சற்றே அகன்றாலும் விரக்தியும், ஏக்கமும், சலிப்பும், அலுப்பும் நம்மைச் சூழ்ந்து நெருக்கிவிடும். சுருக்கிவிடும். விடலாமா அப்படி?

காற்று அவ்வப்போது மாசுபடுவதைப் போல, தன்னம்பிக்கையும் அவ்வப்போது மாசுபடும். அதாவது தளரும்; மறையும். அப்போதெல்லாம் தன்னம்பிக்கை நூல்களைப் படித்தும், உரைகளைக் கேட்டும் அதை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

லட்சக்கணக்கான பணம் கொடுத்து வாங்கிய அயல்நாட்டுக்கார் என்றாலும் இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்து சக்கரங்களில் காற்றை நிரப்பவில்லை என்றால் வண்டி ஓடுமா? ஓடஓடக் குறையும் காற்றையும், மீண்டும் நிரப்பிக் கொள்ளத்தானே வேண்டும்.

உள்சென்று வெளியே வரும் மூச்சுக் காற்றுக்கு எப்போது முற்றுப்புள்ளி விழுகிறதோ, அப்போதே வாழ்க்கையும் முடிகிறது.
வாழ்வதற்கு மூச்சு முக்கியம். வளர்வதற்கு முயற்சி முக்கியம். முயற்சி நின்றால் வளர்ச்சி நிற்கும்.

ஆக, காற்றைப் போல, தன்னம்பிக்கை நமக்குக் கவசமாக இருக்க வேண்டும். மூச்சுக்காற்றைப் போல முயற்சிகள், தொடர்ந்து நடைபெறவேண்டும்.

காற்று நமக்கு கற்பிக்கும் பாடங்கள் இவை. பஞ்ச பூதங்கள் சொல்லும் இத்தனை செய்திகளையும் கொண்டு வாழ்க்கையை வளமாக்கி மனதில் பசுமையாகப் பதித்துக் கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோமே.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...