நீங்கள் ஒரு காந்தம்!
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு
காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை
மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும்
மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய்
அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன்
தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.
முதலாவது, கர்மா-மனிதன் முன்பு
விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான
சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில
செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான
காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு
சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.
இரண்டாவது, ஆழ்மன
நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல
மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக்
காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக்
கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக்
கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக்
கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.
மூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன்
எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும்
தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.
ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த
விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே
போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப்
போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர்
ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை
விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.
ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப்
பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு
அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே
இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி
நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக்
கண்டிருக்கிறோம்.
ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை
வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே
குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம்
கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும்
நமக்கு வினியோகித்திருக்கிறது.
இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில்
ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள
சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால்
வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி
மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.
இரண்டாவது, ஆழ்மன
நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன்
சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை
வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த
வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து
இருக்கிறது.
ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான
நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது
முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப்
பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல்
நலம்.
அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப்
பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது
சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன்
முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத்
சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.
மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில்
தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம்
ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம்
வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை
முதலில் கவனியுங்கள்.
அடுத்தவர்களின் தவறுகளைக்
கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான்.
சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து
மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.
நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை
நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை
நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள்
புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள்.
மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை
எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது
காந்தத் தன்மை பெறும்.
எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின்
கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து
பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து
அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும்
ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.
இப்படி புதிய காந்த சக்தியை நம்மில்
வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை
சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும்.
சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து
சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்..
No comments:
Post a Comment