Saturday, 5 May 2018

நம் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்

நம் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்

நம் மனம் தான். ஒரு பொருளை வேண்டும் அல்லது வேண்டாம் என்று சொல்லுவது நம் மனம் தான். புலன்கள் உதவி செய்கின்றன. அவ்வளவே. அதே சமயத்தில் நாம் எதையும் பார்க்காமல், பேசாமல், நுகராமல், தொடாமல், கேட்காமல் இருந்துவிட முடியுமா?
ஆக முதலில் மனதை திசை திருப்ப வேண்டும். அங்கங்கே அலையும் மனதை நல்ல வழியில் செலுத்தி விட்டால் புலன்களும் அதன் கூடவே போகும்.
ஆனால் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தால் புலன்களை கட்டுப்படுத்த முடியாது. மனதை கட்டுப்படுத்த முடியாது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். கட்டுப்படுத்துவதற்கு பதில் அதை இறைவன் பால் திருப்பி விட்டு விட வேண்டும். அவ்வளவுதான்.
மனித மனத்தை நாய்க்கு
ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர்...
ஏன்? நாய் நன்றியுள்ள பிராணி தானே. அதை ஏன் குறிப்பிட்டு கூறுகிறார்?
நாய்க்கு இரண்டு கெட்ட குணங்கள் உண்டு.
முதலாவது என்ன தான் அதை கழுவி குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், உடையவன் இல்லாத போது அது வெளியில் ஓடி அசிங்கத்தை உண்ணும் இயல்பு உடையது.
இரண்டாவது, வீட்டைக் காக்கும் நாய்தான், வீட்டிற்கு வரும் ஒரு திருடன் அந்த நாய்க்கு ரெண்டு ரொட்டித் துண்டோ, மாமிச துண்டோ போட்டால் அவன் பின்னால் வாலை குழைத்துக் கொண்டு போய் விடும்.
மனித மனமும் அப்படித்தான்.
என்ன தான் உயர்ந்த சிந்தனைகள்..
இறை சிந்தனைகள் இருந்தாலும் அந்தப் பக்கம் ஒரு அழகான பெண் போனால் மனம் சலனம் அடையும். பூஜை செய்யும் போது பக்கத்து வீட்டில் நல்ல மணமுள்ள பதார்த்தம் ஏதாவது செய்தால் மனம் அங்கே போய் உட்கார்ந்து விடும்.
புலன்களை கட்டிக் காக்க வேண்டிய மனம், சில சமயம், புலன் இன்பத்தின் பின்னால் போய் விடும். கவனமாக இருக்க வேண்டும்.
அதெல்லாம் சரி தான்..., அதற்காக எந்நேரமும் இறைவனை நினைத்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருக்குமா? அதில் என்ன அப்படி ஒரு சந்தோஷம் வந்து விடப் போகிறது? என கேட்கிறீர்களா..?
புலன்களை நல்ல வழியில் விட்டு தான் பாருங்களேன். அது எவ்வளவு போகுமோ போகட்டும். இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு அதிகம் அந்த வழியில் போகிறதோ அவ்வளவும் நமக்கு தான் நல்ல வழி..
நல்ல வழி என்றால் அது என்ன வழி?
புலன்களை இறை சிந்தனைக்கு
ஆட்படுத்தி விடுங்கள்... ஒவ்வொரு புலனையும் ஈசனை நோக்கி திருப்பி விட்டு விடுங்கள். அது பாட்டுக்கு போகட்டும். எங்கு போகும்? இறைவனிடம் தானே? போகட்டும் என்று விட்டு விடுங்கள்.. பிறகு நல்லவை எது என்பதை நாமே உணர்ந்து விடுவோம்....
ஓம் நமசிவாய.. 

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...