Tuesday, 8 May 2018

காளி ஏன் மயானத்தில் வாசம் புரிகிறாள்?

காளி ஏன் மயானத்தில் வாசம் புரிகிறாள்?

மயானத்தில் எரிந்த மண்டை ஓட்டினுள் ஒன்றும் இருக்காது. ஒன்றுமில்லாததில்தான் எல்லாமும் இருக்கும் என்பதை உணர்த்துகிறாள். உயிர்களின் அசைவற்ற இடமே மயானம். உயிர்களின் அசைவுகளே எண்ண அலையான அசைவுகள். எண்ண அசைவுகள் இன்றி, மனதை வென்றவரான ஈசனின் இருப்பிடம் மயானம். அதனால்தான் காளியும் அங்கு வாசம் புரிகிறாள். மனம், வாக்கு, காயங்களான முப்புற தோஷங்களை எரிப்பதால் திரிபுரசுந்தரியாய் மரணத்தையே வென்ற வெற்றியின் சின்னமாய் மண்டை ஓட்டு மாலையைத் தரித்தருள்கிறாள். அதுமட்டுமல்ல. மயானம் ஊருக்கு வெளியில் எல்லையில் இருக்கும். தீயசக்திகள் ஊருக்குள் நுழையவேண்டுமென்றால் அதைத் தாண்டியல்லவா வரவேண்டும்? ஊரையும் மக்களையும் காக்கவே தேவி அங்கு அருள்புரிகிறாள்.
சுறுசுறுப்பானவள் இவள். சிறிது கூட தாமதம் பிடிக்காத தேவி. போர், கிளர்ச்சி, பூகம்பம், எரிமலை, சூறாவளி, வெள்ளம், தொற்று நோய் போன்றவை காளியின் திருவிளையாடல்களே. இந்த ஆயர்பாடி கண்ணனின் தங்கையான மகாமாயாவான காளிக்கு காமம் எனும் வெள்ளாட்டினையும் க்ரோதம் எனும் எருமைமாட்டையும் மதமென்னும் நரனையும் மோகம் எனும் செம்மறியாட்டையும் லோபம் எனும் பூனையையும் ஆச்சரியம் எனும் நம் சிந்தையிலே தோன்றும் ஒட்டகத்தையும் பலியாகத் தந்தால் அவள் அருள் பெறலாம்.
தேஜோமயமானவள்! மகாகாலர், ப்ரம்மா, விஷ்ணு, யமன், வருணன், கணேசர், இந்திரன், சூரியன், சுக்கிரன், ப்ரகஸ்பதி போன்ற தேவர்களாலும், துர்வாசர், கச்யபர், சுகர், தத்தாத்ரேயர், ப்ருகு போன்ற ரிஷிகளாலும் அனுமன், பலி போன்ற சிரஞ்சீவிகளாலும் ராமன், பரதன், பரசுராமன் போன்ற அவதார மூர்த்தங்களாலும் ராவணன், கார்த்தவீர்யார்ஜுனன் போன்ற மாமன்னர்களாலும் ஆராதிக்கப்பட்டவள் இந்த தேவி. ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன் நேரில் பேசிய தேவி இவள். ஆட்டிடையனை உலகம் போற்றும் காளிதாசனாக மாற்றிய தேவி. மது, கைடபர் எனும் இரு அரக்கர்களை அழிக்க இவளே திருமாலுக்கு உதவினாள் என தேவி பாகவதமும் மார்கண்டேய புராணத்திலுள்ள ஸப்தஸதியும் கூறுகின்றன. இதில் ஸப்தஸதியில் உள்ள மகாகாளி தியானம், கருநிறம், பத்துத் தலைகள், ஒவ்வொரு தலையிலும் மூன்று கண்கள், பத்து சரண கமலங்கள் கொண்டவளாக விவரிக்கிறது. அது பத்து திக்கிலும் உள்ளவர்களை தன் முப்பது கண்களால் அன்புடன் நோக்கி அவரவர் விரும்பும் வரங்களை வாரி வாரி வழங்குவேன் என்று கூறுவது போல் உள்ளது.
சித்கனக சந்த்ரிகை எனும் நூலில் காளிதாசர் 12 விதமான காளி உபாசனைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஸ்கந்தபுராணம் காளி, காத்யாயனி, சாந்தா, சாமுண்டா, முண்டமர்தினி, பத்ரகாளி, பத்ரா, த்வரிதா, வைஷ்ணவி என்று 9 வடிவங்களில் காளிதேவியை வர்ணிக்கிறது. மூச்சுக் காற்றையே காளி உபாசனையாக புரிந்தால் காளியின் திருவருள் சடுதியில் சித்திக்கும். பஞ்சபூதங்களால் ஆன நம் உடல் அழியும். ஆனால் நம் வாழ்வில் நாம் புரிந்த நற்செயல்களும் குணநலன்களும் அழியாது. நம் தாயார் சாதாரணமாக சாந்த முகத்துடன் இருந்தாலும் நாம் தவறு செய்யும் போது கோபம் கொண்டு முறைக்கிறாள். நாம் பயந்து இனி தவறு செய்ய மாட்டேன் என அம்மாவிடம் சொன்னால் அம்மா கோபம் தணிகிறாள். அது போல் இந்த லோகத்திற்கே தாயான காளி நம்மை கோபிக்காமல் இருக்கும் வண்ணம் தவறிழைக்காத நற்குணங்களோடு அவள் தியானத்தில் ஈடுபடச் செய்ய அருள பிரார்த்தனை செய்ய வேண்டும். பாரதத்தில் வங்காளம், ஆந்திரம், அஸ்ஸாம் போன்ற பிரதேசங்களிலும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும் காளி உபாசனை செய்யப்படுகிறது.
தக்ஷிணகாளிகே என்றதும் காளியின் சாந்நித்யம் ஏற்பட்டுவிடும். தட்சிணாமூர்த்தி வடிவினரான பைரவரால் ஆராதிக்கப்பட்டதால் தக்ஷிணா. தக்ஷிணா(வலது) புருஷனையும் வாமா(இடது) ஸ்திரீயையும் குறிப்பதால் தக்ஷிணசக்தி, சிவன்; வாமசக்தி காளி. சிவனையும் மிஞ்சி பக்தர்களைக் காத்து முக்தியளிப்பவளாக போற்றப்படுகிறாள் என்கிறது காமாக்யா தந்திரம் எனும் நூல். தக்ஷிணா எனும் பதம் தெற்கு திசையையும் குறிக்கும். தெற்கு யமனின் திசை. அவன் காளி எனும் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிச் சென்றுவிடுவானாம். தக்ஷிணா எனில் வல்லவள் என்றும் ஒரு பொருள் உண்டு. பக்தர்களுக்கு வரமளிப்பதில் மற்ற தெய்வங்களை விட வல்லவள் இவள். மோட்சப் பிரதாயினி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணி, தேஜஸ்வினீ, பராசக்தி, திகம்பரீ, சித்விலாஸினி, சின்மயி, அறம், பொருள், விரும்பியதை நல்கும் தர்மம், மோட்சம் என்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் அருளும் பலஸித்திதாயினீ என அவள் பத மலர்களைப் பணிவோம். கலியில் காளிதேவி சட்டென்று அருள்பவள். இந்த தேவியை உபாசனை செய்தால் இன்பம், துன்பம், அழகு, கோரம், அன்பு, வெறுப்பு, அறம், அதர்மம் என யாவுமே ஒன்றாகவே தெரியும். எருக்கம்பூ, வாழைப்பூ, அரளி, செந்நிறமலர்கள் ஆகியவற்றால், அஷ்டமி, நவமி, அமாவாசை, சிவராத்திரி, பரணி நட்சத்திரம் ஆகிய தினங்களில் அர்ச்சித்தால் வறுமை நீங்கி வளமான வாழ்வு பெருக, தேடி வந்து அருள்வாள் தேவி. இவள் பூஜையில் நறுமணம் மிக்க சாம்பிராணி, குங்குலியம் போன்ற தூபங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த காளியின் மந்திரத்தை நதிக்கரையோரம், கடற்கரையோரம், ஏரிக்கரை ஓரம், நல்லநீர் தளும்பும் குளத்தின் கரையோரம், மயானம் போன்ற இடங்களில் ஜபிக்க வேண்டும். இவளை துதிப்பதால் அளவற்ற தைரியம், வாக்குவன்மை, நிகரற்ற செல்வம், தீர்க்க தரிசனம், முக்தி போன்றவை கிட்டும். வாக்கு, மனங்களுக்கு எட்டாத சக்தி படைத்த பராசக்தியான காளியை, வணங்கி வாழ்வில் வளம் பல தந்தருளும் தேவியைவழிபடுவோம். பலனடைவோம்

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...