ரமண மகரிஷி திருவண்ணாமலைக்கு என்று வந்தாரோ அன்றிலிருந்து இறுதி நாள் வரை திருவண்ணாமலையை விட்டுச் செல்லவில்லை. கைகளால் பணத்தை தொட்டதில்லை. வாகனத்தில் பயணித்தது இல்லை. ஒரு சிறிய ஆடையைத் தவிர வேறு எதுவும் அணிந்ததில்லை.
ரமண மகரிஷியின் முக்கியமான பக்தர்களில் குஞ்சுஸ்வாமிகள் என்பவரும் ஒருவர். இவர் பாலக்காட்டிற்கு அருகில் உள்ள செறக்கோடு என்ற ஊரில் 1897ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார். சிறு குழந்தையாக இவர் இருக்கும்பொழுதே சிவபெருமானுடைய பரிபூரணமான அருள் இவருக்கு கிடைத்தது. அந்த ஊரில் உள்ள குளத்தில் இவர் நீராடுவதற்குச் செல்வார். அப்பொழுது அந்த ஊரில் உள்ள சிவபக்தர்கள் தங்கள் கைகளில் அழகான பட்டுப் பையில் திருநீறு வைத்துக்கொண்டு பூசிக்கொள்வதைப் பார்த்தார். தனக்கும் அதைப் போல் ஒரு பட்டுப் பை வேண்டும் என்று ஆசை வருகின்றது.
அன்று இரவு அவருக்கு ஒரு கனவு. அந்தக் கனவில் கைலாசபதியான சிவபெருமான் தரிசனம் தந்து, அந்த ஊரில் உள்ள ஒரு மரத்தடியை கனவில் காட்டிவிட்டு மறைந்து விடுகின்றார். மறுநாள் காலை அந்தக் குழந்தை அந்த மரத்தின் அடிக்கு சென்று பார்க்கின்றார். அதன் அடியில் பன்னிரண்டு அணா காசுகள் கிடக்கின்றது. அதை எடுத்துக் கொண்டு விபூதி பை வாங்க கடைக்குச் செல்கின்றார்.
விபூதி பையின் விலையும் சரியாக பன்னிரண்டு அணா என்பதை அறிந்து அதிசயிக்கின்றார். அடுத்ததாக சிவனடியார்கள் கையில் ருத்திராட்ச மாலை வைத்துக்கொண்டு ஜபம் செய்வதைப் பார்க்கின்றார். அவருக்கும் ஒரு ருத்திராட்ச மாலை வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அன்று இரவும் சிவபெருமான் கனவில் வந்துவிட்டார். அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய குளத்தையும் அதில் மலர்ந்துள்ள ஒரு பெரிய தாமரையையும் காட்டிவிட்டு மறைந்துவிட்டார்.
மறுநாள் காலையில் அந்தக் குளத்தில் அப் படியே ஒரு பெரிய தாமரை இருப்பதைப் பார்த்து வியப்படைந்தார். நீரில் இறங்கி அந்த தாமரையின் அருகில் சென்று பார்க்கின்றார். அந்த தாமரை மலருக்குள் தங்கத்தில் கட்டிய அழகான ருத்திராட்ச மாலை இருந்தது.
திருநீறு பை கிடைத்தது. அழகான ருத்திராட்ச மாலையும் கிடைத்துவிட்டது."ஜபமாலையை வைத்து எந்த மந்திரத்தை ஜபம் செய்வது?" என்று தெரியாமல் விழித்தார். அன்று இரவு மீண்டும் சிவபெருமான், அவருடைய கனவில் வந்து "நமச்சிவாய" என்ற ஐந்தெழுத்தை உபதேசம் செய்தார்.
இப்படியாக வளர்ந்து வந்த குஞ்சு ஸ்வாமிகளை அவருடைய பெற்றோர்கள் அவர்களுடைய குலகுருவிடம் கொண்டுவந்து விட்டார்கள். குஞ்சுஸ்வாமிகளுக்கு அந்த குலகுருவிடம் மனது ஈடுபடவில்லை. அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் வாழும் ரமணமகரிஷியைப் பற்றி ஒருவர் தெரிவிக்கின்றார்.
ரமண மகரிஷியை பற்றி கேட்டவுடன் குஞ்சுஸ்வாமி களுக்கு உடலில் ஒரு இனம்புரியாத மாற்றம் ஏற்பட்டது. உடனே திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷிகளை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் சொல்லாமல் திருவண்ணாமலைக்கு கிளம்பிவிட்டார். கையில் போதுமான பணம் கிடையாது. சரியான விவரம் தெரியாது.
திருவண்ணாமலையில் பிளேக் நோய் பரவியிருந்ததால் ஊருக்குள் செல்வதற்கு பலவிதமான தடைகள் இருந்தது. சிவபெருமானுடைய அருளால் எல்லா தடைகளும் விலக, திருவண்ணாமலை வந்து தனது குருநாதரான ரமண மகரிஷியின் திருவடியை வந்தடைந்து பரம சாந்தியை அடைந்தார். ரமண மகரிஷி யாருக்கும் வாய்முகமாக எந்த உபதேசமும் செய்வதில்லை என்று கேள்விப் பட்டார். அதனால் முதல் முதலாக ரமண மகரிஷி எதை தன்னிடம் பேசுகின்றாரோ அதையே உபதேசமாக எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்தார்.
அந்த சமயம் ஒரு தேங்காய் சிரட்டையில் சூடான கஞ்சியை நான்கு நாய்க்குட்டிகள் குடிப்பதற்கு ஓடி வந்தன. அந்த குட்டிகளுக்கு அந்த கஞ்சி சுடப்போகின்றது என்ற கவலையினால் ரமண மகரிஷி குஞ்சுஸ்வாமிகளைப் பார்த்து "நான்கையும் பிடி, ஒன்று ஒன்றாய் விட" என்றார். அதன்படியே நான்கு நாய்க்குட்டிகளையும் பிடித்து ஒவ்வொன்றாக விட்டார். "சரி, இதில் என்ன உபதேசம் இருக்கின்றது என்கின்றீர்களா? ஆமாம். இது உபதேசம்தான். முக்தியை விரும்புகின்ற ஒருவன் நான்கு செயல்களை நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு அவைகளை ஒவ்வொன்றாய் விட்டுவிட வேண்டும். நல்ல நூல்களைப் படித்தல், மந்திரத்தை ஜபம் செய்தல், தியானம் செய்தல், ஆத்ம தத்துவத்தை விசாரம் செய்தல் என்ற நான்கையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஜபம் நன்றாக கைகூடி வந்துவிட்டால், பாராயணத்தை விட்டுவிட வேண்டும். தியானம் நன்றாக கைகூடிவிட்டால் ஜபத்தை விட்டுவிடலாம். ஆத்ம தத்துவ விசாரம் கைகூடிவிட்டால் தியானத்தை விட்டு விடலாம்” என்பதே அது.
ரமண மகரிஷிக்கு சேவை செய்து கொண்டும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்தும் முக்தியடைந்தார். நூறு வருடங்கள் வாழ்ந்த இவர் திருவண்ணாமலையிலயே சித்தியடைந்தார். இன்றும் அவருடைய சமாதி ரமணாஸ்ரமத்திற்குள் இருக்கின்றது. ரமணாஸ்ரமம் செல்லும் பொழுது குஞ்சுஸ்வாமிகளின் சமாதியையும் தரிசனம் செய்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்.
அருணாசலேஷ்வரா.
No comments:
Post a Comment