Thursday, 25 October 2018

கொக்கொக்கக் காத்திரு! அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு

                                                        கொக்கொக்கக் காத்திரு!
                                    அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு



என்கிறார் வள்ளுவர்.

துள்ளி ஓடிடும் சிறு மீன்கள், கரையில் உள்ள கொக்கு கண்ணற்றது, செயல் திறனற்றது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கும் ஏன்? கொக்கு, தான் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறதே அதனால்.

இத்தனை மீன்கள் துள்ளி ஓடின, கரையோரக் கொக்கு ஏதும் செய்திடவில்லை, இயலவில்லை; இனி நமக்கென்ன பயம் என்று எண்ணிக் கிளம்புகிறது, சிறிதளவு பெரிய மீன்! என்ன ஆகிறது? கொக்கு கொத்திக் கொள்கிறது! கொக்கு அங்கே இருந்தது அதற்குத்தானே?

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

இரைதேடிக் காத்திருப்பதும், கிடைத்ததும் பற்றிக் கொள்வதும் கொக்குக்கு மட்டும்தானா இயல்பு; மற்றப் பலவற்றினுக்கும் உண்டே! ஏன் கொக்கினை மட்டும் குறிப்பாகக் காட்டுகிறார் வாக்குண்டாம் பாடிய ஔவையார் என்று கேட்கத் தோன்றுகிறதா? காரணத்தோடுதான், காட்டியிருக்கிறார்.

புலிகூட இரை தேடிக் காத்திருக்கிறது, பதுங்கிக் கொள்ளக் கூடச் செய்கிறது.

வல்லூறு கூடப் புறாவைத் தேடி வட்டமிடுகிறது.

ஆனால், பதுங்கி இருந்திடும் புலி, மானைக் கண்டதும் பாய்கிறது, மான் ஓடுகிறது, புலி துரத்துகிறது, பல மைல்கள் கூட அலுப்பு மேலிட ஓடி ஓடி வேட்டையாடிய பிறகே மானைக் கொல்ல முடிகிறது புலியினால்; ஒரு போராட்டம் நடைபெறுகிறது.

வல்லூறு பாய்ந்து வருவது கண்ட புறா தப்பித்துக் கொள்ளப்படும் பாடு, கொஞ்சமல்ல.

கொக்கு மீனைக் கொத்துவது அவ்விதமல்ல! என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் மீன் துள்ளி வருகிறது. கொக்கு அதைக் கொத்தப் போக, மீன் தப்பித்து ஓட, கொக்கு விடாமல் துரத்திச் சென்று கொத்திடும் முறை இல்லை. மீன் வருவதும் கொக்கு கொத்துவதும், மீன் சிக்கிக் கொள்வதும் உடனே இரையாகிவிடுவதும் எல்லாம் கண் மூடிக் கண் திறப்பதற்குள். மீன் வருவதற்கும், மீன் சிக்குவதற்கும் உள்ளே இரையாகிச் செல்லுவதற்கும், இடைவெளிகளே இல்லை; எல்லாம் ஒரே நேரத்தில் நடைபெற்று விடுகிறது. அதனால்தான் கொக் கொக்கக் கொத்திட வேண்டும் என்றார். பாம்பு கூட, ஓசைப்படாமல் தீண்டிவிடுகிறது. ஆளை வேட்டையாடிக் கடிப்பதில்லை. ஆனால், மனிதனைத் தீண்டித் தீர்த்துக் கட்டுமேயன்றித் தின்பதில்லை. கொக்கு தீண்டித் தீனியாக்கிக் கொள்கிறது மீனை. அவ்வளவு கூர்மையான பார்வை. அத்தனை நேர்த்தியான குறிபார்த்திடும் திறன், அவ்வளவு வேகமான கொத்தும் தன்மை, கொக்குக்கு! அத்தனை திறமையாக இரை தேடிக் கொண்ட கொக்கு, புலிபோல உறுமுவதில்லை, இரத்தம் குடித்த மகிழ்ச்சியில் புலி படுத்துப் புரள்கிறதே, அதுபோலவும் இல்லை, ஏதும் அறியாததுபோல, எப்போதும் போல இருக்கிறது கொக்கு, காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொண்டு! இவற்றினை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் வள்ளுவர், "கொக்கொக்க' என்று கூறினார்.
Photo

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...