சங்கமேஸ்வரர் திருக்கோயில், கூடுதுறை , பவானி.
காவிரி மற்றும் பவானி நதிகள் செழுமைப்படுத்தும் இடம் கூடுதுறை....
இங்கு இரண்டு ஆறுகள் மட்டும் அல்ல மூன்றாவதாக அமிர்தநதி என்னும் நதி(கண்ணுக்கு தெரியாது) இங்குள்ள அமிர்தலிங்கேஸ்வரருக்கு அடியில் தோன்றி பவாநி, காவிரி நதிகளுடன் சங்கமிப்பதால் இது முக்கூடல் அழைக்கப்படுகிறது.
பவாநிக்கு கூடல்நகர் என்ற ஒரு பெயரும் உள்ளது
வடநாட்டில் காசிக்கருகே அலகாபாத்தில் கங்கா,யமுனா,சரஸ்வதி(கண்ணுக்கு தெரியாது) ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் (முக்கூடல்) என்பார்கள்
அதை போல் பவாநியும் தென்திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
அதனால்தான் இந்தியாவின் மாபெரும் தலைவர்களின் அஸ்திகளை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கரைத்துவிட்டு பவாநி முக்கூடலிலும் இன்றும் கரைக்கிறார்கள்.
அதனால் பவாநி இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடமல்ல
மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற இக்கோயில் ஏறக்குறைய 1400 மேல் ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்க வேண்டும்.
ஏழாம் நூற்றாண்டுகளில் காவிரி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படாத நிலையில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரால் சூழப்பட்டு இருந்த இந்த இடம் எவ்வளவு ரம்மியமாக இருந்திருக்கும் என்னும் போதே மனதில் ஒரு பரவசம் ஏற்படுகின்றது .
சங்கமேஸ்வரர் கோயில் 14 நூற்றாண்டுகள் பழமையானதாக இருந்த போதிலும் இங்குள்ள மற்ற சன்னதிகள் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பல திருப்பணிகள் நடைபெற்று உள்ளது என்பதை இங்குள்ள பல்வேறு கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
இந்தக் கோயிலில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர்(1509 -1529) காலத்தில் கொங்கு மண்டலத்தின் நிர்வாகியாக இருந்த பாலதேவராசன் என்பவரது கல்வெட்டும் , தாரமங்கலத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் கெட்டி முதலியார் என்பவரது கல்வெட்டும் இங்கு நடைபெற்ற திருப்பணிகளை பற்றி கூறுகின்றது. இந்த கெட்டி முதலியார் என்பவர் தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுகளில் இங்குள்ள இறைவன் திருநண்ணாவுடையார்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரத்தின் நேராக ராஜகோபுரத்தை நோக்கியவாறு ராஜகோபுர நந்தியும் அதற்கு சற்று முன்பு இடதுபுறத்தில் விநாயகரும், மற்றும் வலது புறத்தில் வீர ஆஞ்சநேயரும் தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றார்கள்.
இத்திருக்கோயிலின் இந்த வடக்கு புற கோபுரம் ஒரு பெரிய கோட்டையின் பிரதான நுழைவாயிலைப் போல மிகவும் கவனத்துடன் பாதுகாப்பான முறையிலும், மிகுந்த கலை நுணுக்கத்துடனும் கட்டப்பட்டுள்ளது.இங்குள்ள மரகதவுகளில் இரும்பினாலான கூர்மையான கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இந்தக் கதவின் பின்புறத்தில் பக்கத்துக்கு இரண்டாக நான்கு சிறிய தளங்கள், போர்வீரர்கள் கோட்டைப் பாதுகாப்பிற்காக நின்று காவல் புரியலாம் என்று யோசிக்கும் அளவிற்கு நேர்த்தியான முறையில் உள்ளது.
நுழைவாயிலின் இடது மற்றும் வலது புறங்களில் குறுஞ்சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது, மேலும் விஜயநகர பேரரசுகளில் கட்டிடக்கலை பாணியில் , வாசலுக்கு முன் புறம் எட்டு தூண்கள் பக்கத்துக்கு நான்கு தூண்களாக நுணுக்கமான சிற்பங்களுடன் நம்மை வசீகரிக்கிறது.
இந்தப் பிரதான நுழைவாயில் கொண்ட ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் பரமபதவாசல் ஒன்றும் உள்ளது .
இந்த ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் , இடது புறத்தில் முத்துக்குமாரசாமி என்ற பெயருடன் , அழகிய முன் மண்டபத்துடன் கூடிய முருகன் தனி சன்னதியிலும் , வலது புறத்தில் ராஜ கணபதி தனி சன்னதியிலும் அமர்ந்து நம்மை வரவேற்கின்றார்கள்.
இவர்களை வணங்கி கடந்து செல்லும் பொழுது வலது புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் , வேணுகோபால சுவாமி ,லஷ்மி நரசிம்ம மூர்த்தி மற்றும் சௌந்தரவல்லி தாயார் ஆகியவர்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார்கள்.
இதற்கு அடுத்து வருவது வேதநாயகி அம்மன் கோயில். இந்தக் கோயிலின் முகப்பில் பல நுணுக்கமான பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கக் கூடிய அழகு மிகுந்த சிற்பங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் வழியே மகா மண்டபத்தை அடைந்து அர்த்த மண்டபத்தின் வழியாக கருவறையில் உள்ள வேதநாயகி அம்மனை காணலாம் .
இந்த மகா மண்டபத்தில் உள்ள தூண்களில் பலவகையான அரிய சிற்பங்களும், மகாமண்டபம் சுற்றுச்சுவரின் உன் பக்கத்தில் , சுவரும் மேல் தளமும் இணையும் இடத்தில் பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றது...
இந்தப் புடைப்பு சிற்பத்தில் பிரம்மா, விஷ்ணு,மகிஷாசுரமர்தினி, முருகன்,விநாயகர் , பூதகணங்கள் முனிவர்கள் மற்றும் யானைத் தலையும், மனித உடலும் சிங்கதின் கால்களும் கொண்ட உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமாயணத்தில் அனுமன் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள தசகண்ட ராவணனை, அவரது அமைச்சரவையில் சந்திக்கும் பொழுது , அந்த சிம்மாசனத்திற்கு சமமானதொரு ஆசனத்தை தன் வாலால் அமைத்து நேருக்கு நேராக அமர்ந்து உரையாடும் காட்சி ஒன்று தத்ரூபமாக காணப்படுகிறது.
இந்த மகா மண்டபத்திலிருந்து கர்ப்ப கிரகத்தை சுற்றி வர ஒரு உள்சுற்று பாதை உள்ளது இந்தப் பாதை, சிங்கங்களை தாங்கி நிற்கும் யானைகளை கொண்ட தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகத்தை சுற்றி பல கோஷ்ட தெய்வங்கள் உள்ளனர் , மேலும் சுற்றி முடிக்கும் இடத்தில் வல்லபகணபதி பெரிய சிலையாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.
இச் சுற்று முடிந்து மீண்டும் மகா மண்டபத்திற்குள் நுழையும்போது இடது புறத்தில் எண்கோண வடிவிலான அழகிய பள்ளி அறை உள்ளது.
வேதநாயகி அம்மன் சந்தித்து வெளியில் வரும் பொழுது தூங்கா விளக்கு மண்டபம் ஒன்றும் பலிபீடம் ஒன்றும் கோயிலுக்கு நேர் எதிரே காணப்படுகின்றது.
திருநண்ணாவுடையார் :
சங்கமேஸ்வரர் கோயிலில் நுழைய வடக்கு , கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நுழைவாயில்கள் உள்ளது வடக்குப் நுழைவாயிலின் முன்பு இரண்டு புறங்களிலும் முருகன் மற்றும் விநாயகர் சிறு கோயில்கள் உள்ளன . அதே போன்று கிழக்கு புறத்திலும் விநாயகர் மற்றும் முருகன் தனி சன்னதிகள் உள்ளன. கிழக்குப்புற வாயிலுக்கு எதிராக கொடி மரம் பலி பீடம் தூங்கா விளக்கு ஏற்றும் மிகப் பெரிய கல் தூண் ஒன்று சிறிய மண்டபத்துடன் உள்ளது இந்த அமைப்பிற்கு நேரெதிரே வெளி மதில் சுவரில் ஒரு சிறிய மண்டபத்துடனும் , ஒரு சிறிய கோபுரத்துடனும் காவிரியை நோக்கி ஒரு நுழைவாயில் உள்ளது.
இந்த வாயிலின் வழியாக காவேரிப் படித்துறை அடையலாம். கிழக்குப் புற வாயில் வழியாக கோயிலுக்குள் நுழையும் பொழுது அழகிய புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய பெரிய கல்தூண் மண்டபம் உள்ளது, இந்த மண்டபத்தில் அழகிய நந்தி ஒன்று சதா சங்கமேஸ்வரரை வைத்த கண் வாங்காமல் காவல் காத்து அமர்ந்துள்ளது....
இவற்றைக் கடந்து மகா மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இரண்டு பெரிய துவாரபாலகர்கள் சிலையும், உள் சுற்று சுவர் ஆரம்பிக்கும் இடத்தில் சுவற்றில் ஜான் உயரமுள்ள பல, வசீகரிக்கக் கூடியதும், அழகிய முகபாவங்த்துடனும் கூடிய புடைப்புச் சிற்பங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இவற்றை ரசித்துக்கொண்டே மகா மண்டபத்தில் நுழைந்து சற்றே தலை சாய்ந்த நிலையில் உள்ள சங்கமேஸ்வரரை காணலாம்.
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
பாகமாய் ஞால மேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்
கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகள் மோத
மயிலாலுஞ் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி
அடிபணியுந் திருந ணாவே
திருஞானசம்பந்தர்
மகாமண்டபத்தில் மைய மேல் தளத்திற்கும், பக்கத்தில் உள்ள தளத்திற்கும் இடையே உள்ள உயர வேறுபாட்டில் முழுவதுமாக சாளரங்கள், சூரிய ஒளியும் மற்றும் காற்று சுழற்சிக்கும் பயன்படும் வகையில் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
மகா மண்டபத்திலிருந்து தெற்குப் புறத்தில் உள்ள வழியின் மூலமாக உள் சுற்றுப் பாதையை அடையலாம், இந்த ஒரு சுற்றுப்பாதையில் இடதுபுறத்தில் 63 நாயன்மார்களின் சிலைகளும், சப்த கன்னிகள் மற்றும் வீரபத்திரர் சிலையும், வலது புறத்தில் விநாயகர் மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் தனி சிலைகளும் காணப்படுகின்றது. தக்ஷிணாமூர்த்திக்கு அருகில் அழகிய கல் சங்கிலியுடன் கூடிய நான்கு தூண்கள் உள்ளது.
மேற்குப் புறத்தில் இடதுபுறத்தில் விநாயகர் மற்றும் பஞ்சபூத லிங்க சிலைகள், அதற்கடுத்தாற்போல் வள்ளி, தெய்வயானை முருகன் சிலைகளும், வலது புறத்தில் லிங்கோத்பவர் மற்றும் சிறிய அளவிலான விஷ்ணு மூர்த்தி மற்றும் நான்முகனின் அழகிய புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றது.
சுற்றுப்பாதையில் வடக்குப் புறத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணு துர்கா கர்ப்பகிரக சுவரிலும்,அதற்கு சற்று பக்கத்தில் கர்ப்ப கிரகத்தை நோக்கி சண்டிகேஸ்வரர் சிறு கோயில் ஒன்றும் உள்ளது.
இதற்கு அடுத்தாற்போல வெளி மதில் சுவரில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள சிறிய கோபுரத்தின் வழியாக வெளியே சென்றால், சகஸ்ர லிங்கேஸ்வரர், காமாட்சி லிங்கேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் சிறிய கோயிலாகவே உள்ளது.
இவற்றைக் கடந்து செல்லும்போது இரண்டு படித்துறைகள் கூடும் இடத்தையும் , இரண்டு அழகிய நதிகள் சங்கமிக்கும் அந்த அற்புதமான காட்சியைக் காணலாம் .
பொன்னிநதியின் நளினத்தையும், பவானி ஆற்றின் அழகையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.... வெகு நீண்ட வனப்பான பயணத்தை காவேரி நதி இந்த இடத்தில் பவானி ஆற்றுடன் பகிர்ந்து கொண்டு மேலே செல்கிறாள்....
இந்த இயற்கை வனப்பையும், கூடல் சங்கமத்தையும் கண்டு மீண்டும் கோயிலின் தெற்குப் புற வாயிலாக உள்நுழைந்து, இடது புறம் சென்றால் கோயிலின் தல விருட்சமான இலந்தை மரமும், அதற்கு அடியில் விநாயகர் சிலை ஒன்றும் காணப்படுகின்றது.
மேலும் வடக்கு நோக்கி செல்லும் போது சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் வேதநாயகி அம்மன் கோயிலுக்கும் இடையில் தனி சன்னதியில் முருகனும், அவருக்குப் பின்னால் இடதுபுறத்தில் சனி பகவான் மற்றும் வலது புறத்தில் ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியும் காணப்படுகின்றது....
பல நூற்றாண்டுகள் பழமையுடைய கோயிலாக இருந்தாலும் நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு பல சிற்ப அற்புதங்களை நமக்கு காட்சியாக்குகின்றது....
No comments:
Post a Comment