
முருகனின் அறுபடை வீடுகளில் திருத்தணிகை ஐந்தாவது படைவீடாகும்.*

சென்னையிலிருந்து
53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி
அமைந்துள்ளது. எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் திருத்தணி செல்ல பேருந்து
மற்றும் தொடரூந்து வசதிகள் உள்ளது.

திருமணத்தடை
உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம்
செய்கின்றனர்.இத்தல முருகனின் அருளை முஸ்லிம் பக்தர் ஒருவர் பெற்றார்.
தற்போதும் விழாக்களில், முருகன் புறப்பாடாகும் வேளையில், முஸ்லிம் ஒருவர்
முரசு வாத்தியம் இசைக்கிறார். திருத்தணிகை மலையின் வடக்கே உள்ள மலை
வெண்ணிறமாக உள்ளதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே உள்ள மலை கருநிறத்துடன்
உள்ளதால் பிண்ணாக்கு மலை என்றும் கூறப்படுகிறது.

பள்ளியறை
பூஜையின் போது ஒரு நாள் தெய்வானையும், ஒரு நாள் வள்ளியுமாக முருகனுடன்
அருள் செய்கின்றனர்.திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து
அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின்
நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம்.
தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம்.
இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.

முருகத்தலங்களில்
கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன்
கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று
முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.சித்திரை மாசியில்
பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சித்திரையில் தெய்வானை திருமணமும், மாசியில்
வள்ளி திருமணமும் நடக்கிறது. வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை
மணந்ததால் பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை
வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

முருகப்பெருமானை
இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே
இத்தலத்தில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின் போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்
பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை
முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிக அளவில் மலர்க்காவடி
செலுத்துகின்றனர்.

மூலஸ்தானத்திற்கு
பின்புறபுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார்.
கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி
திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில்
இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீது
கொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.வள்ளியை யானை
ரூபத்தில் பயமுறுத்திய விநாயகர் ஆபத்சகாய விநாயகர் என்ற பெயரில் அருள்
பாலிக்கிறார்.

வருடத்தின்
நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர்
ஆட்சியின் போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை
மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை
ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல்,
புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்.
புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம்
வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து
படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ
பூஜை நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டில் 1008 குட பால் அபிஷேகம் நடக்கும்.

திருமாலின்
மகள்களான அமுதவல்லி,சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி
தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும்,
சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர்.
சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும்
தெய்வானையும் ஒரே அம்பிகையாக *’கஜவள்ளி’* என்னும் பெயரில் அருள்கிறாள்.
இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய
நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத
வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளிவாகனத்தில் எழுந்தருளுகிறாள்.

திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன்
விளங்கினான். இவன் திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு
வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு *வள்ளி* என பெயர்
சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச்
செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும்
தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ண்ம்.
*’உலகப்பற்று’* எனப்படும் ஆசையையும் குறிக்கும்.

இது
உனக்குச் சொந்தமானதல்ல, எனக்குச் சொந்தம்’ என்று பறந்து வரும் பறவைகள்
பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கும். உலக ஜீவன்களோ இதைப் புரிந்து
கொள்ளாமல், கவண் கல்லால் அவற்றை விரட்டியடிப்பது, தெய்வத்தைப் புரிந்து
கொள்ளாத் தன்மையைக் குறிக்கும். இந்த உலகமே நிரந்தரமெனக் கருதியிருக்கும்
இது போன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம், தியானம் இது பற்றியெல்லாம்
தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே இறைவன் விரும்புவான்.

அப்படி
வள்ளியை ஆட்கொள்ளவே முருகப் பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ
அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள். இறைவனோ, அவளை ஆட்கொள்ள யானை மூலம்
பயமுறுத்தினார். அவள் அவரைத் தழுவினாள். இறைவனின் ஸ்பரிசம் பட்டதுமே
ஞானோதயம் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள்.

மக்கள் அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை
நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத் தலம் இது. முருகப் பெருமான்
திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில்
தங்கியதால் ‘தணிகை மலை’ என்று பெயர் பெற்ற இத்தலம் *’திருத்தணி’* என்று
மாறியது.

கோயில்களில் பைரவர், வேதத்தின் வடிவமான நாய் வாகனத்துடன் காட்சி தருவார்.
சில தலங்களில் இரண்டு நாய்களுடன் பைரவரைக் காணலாம். இங்கு நான்கு நாய்
வாகனங்களுடன் அவர் காட்சி அளிக்கிறார். ஒரு நாய் பைரவருக்குப் பின்புறம்
உள்ளது. மற்ற மூன்று நாய்களும் பீடத்தை சுற்றி இருக்கிறது. அவை நான்கு
வேதங்களாகக் கருதப்படுகின்றன. கல்வியில் புலமை பெற இவரிடம் வேண்டிக்
கொள்கிறார்கள்.

இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி
போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான
சக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல்
கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி
வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.
முருகனுக்குரிய *’குமார தந்திர’* முறைப்படி இங்கு பூஜை நடக்கிறது.சுபம்.
_ *

ஓம் முருகா சரணம்

*
No comments:
Post a Comment