Sunday, 22 April 2018

சிவ_தனுசு..

சிவ_தனுசு..

ஓம் சிவசிவ ஓம்*
சிவ_தனுசு...
சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவ தனுசு என்றே கூறுகின்றோம்.
மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார்.
இதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.
சிவபெருமாளே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது.
ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரை தான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன் படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும்.
இதை பூரணமாக உணர்ந்தவன் தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான்.
நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவ மானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவ தனுசுவின் சக்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது.
அனைத்து லோகங்களையும் வென்ற இராவணன் கடைசியில் பிரம்ம லோகத்திற்கும் சென்றான். பிரம்மாவையும் வென்று தன் அடிமையாக்க வேண்டும் என்பது அவன் விருப்பம்.
பிரம்ம லோகம் சென்ற ராவணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இராவணனின் தவறான செய்கைகளால் தன் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்த சிவ தனுசு இராவணன் பிரம்ம லோகத்தை அடைந்தவுடன் முழுதுமாகத் தன் சக்தியை இழந்து விட்டது.
இதைச் சற்றும் எதிர் பாராத இராவணன் செய்வ தறியாது திகைத்தான். பிரம்ம லோகத்தை ஆளும் பிரம்மாவை எதிர்க்க முடியாமல் வெட்கம் அடைந்து தலை குனிந்தான் இராவணன். தன் செய்கையால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைந்து வருந்தி உடனடியாகத் தன் சொந்த அரக்க லோகத்திற்கு வெறுங்கையுடன் திரும்பி விட்டான்.
இனி சிவ தனுசால் என்ன பயன் என்று எண்ணி அதைத் தூக்கி எறிந்து விட்டான். இதைப் பார்த்தார் ஜனக மகாராஜா. சிவ பிரசாதம் என்றுமே சிவப் பிரசாதம் அல்லவா? இதை இராவணன் அறியவில்லையே என்று வருந்தி அந்த சிவ தனுசுவை தான் எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு தினமும் எல்லா விதாமன அபிஷேக ஆராதனைகளையும் பூஜைகளையும் பன்னெடுங் காலமாக ஆற்றி வந்தார் ஜனக மகாராஜா.
காலச் சக்கரம் சுழன்றது…
குழந்தை பாக்கியம் இல்லாததால் சீதையைப் பூமியில் கண்டெடுத்து தன் மகளாக ஜனகர் வளர்த்து வந்தார் அல்லவா? சீதை சிறுமியாக இருக்கும் போது ஒரு நாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பந்து உருண்டு போய் சிவ தனுசுவின் கீழ் மறைந்து விட்டது. பந்தைத் தேடி வந்த சீதை தன் இடது கையால் சிவ தனுசுவைச் சாதாணமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.
இந்தக் காட்சியைக் கண்ட ஜனக மகராஜாவுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அந்த சிவ தனுசுவை 10,000 வீர மல்லர்கள் சேர்ந்தால் தான் நகர்த்தவே முடியும். ஆனால், இந்தக் குழந்தை அலட்சியமாக இடது கையால் தூக்கி விட்டதே. அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் இன்னொரு வருத்தமும் அவருக்கு எற்பட்டது.
இந்தப் பராக்கிரமம் பொருந்திய கன்னியை எவருக்கு மணம் முடிப்பது? இவளுக்கே இவ்வளவு ஆன்மீக பலம் இருந்தால் இந்தச் சிறுமியை மணக்கும் வீரன் எத்தகைய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்? உண்மையில் அப்படி ஒருவன் ஈரேழு உலகத்திலும் இருக்கிறானா என்பதே சந்தேகம். இருந்தாலும் எப்படி, எங்கே அவனைத் தேடுவது? இப்படி பல்வேறு சிந்தனைகளிடையே உழன்றார் ஜனக மகாராஜா.
மகளுக்கு திருமண வயது வந்தவுடன் தகுந்த மணவாளணைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய அற்புதமான யோசனைகளையெல்லாம் கூறினர்.
இறுதியில் சிவ தனுசுவை நாணேற்றி உடைப்பவருக்கே சீதா தேவி மனைவி ஆவாள் என்று அறிவித்தார். அதன் பிறகு நடந்தவைகள் உங்களுக்கு நன்றாக தெரியும். ஸ்ரீராமர் சிவதனுசை நாணேற்றி உடைத்து விட்டார். அதன் பிறகு அவருக்கு திருமணம் நடந்தது.
அதற்குப் பின் முறிந்த சிவ தனுசு என்னவாயிற்று? என்பதனைப் பற்றி பார்ப்போம்.
நாம் நினைப்பது போல சிவ தனுசு என்பது சண்டைக்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வில் மட்டுமன்று. சிவ தனுசு சிவபெருமானுடைய திரண்ட சக்தியின் ஒரு கூறு. சிவ தனுசில் ஆயிரக் கணக்கான தனுர் வேத தேவதைகளும் தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும் வாசம் செய்தனர்.
தனுசு முறிந்ததால் அனைத்து தெய்வ சக்திகளும் வெளிவந்து தாங்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தன. எல்லோரும் ஜனக மகாராஜாவை வணங்கி, சுவாமி, பன்னெடுங் காலமாக நாங்கள் இந்த சிவ தனுசிலே குடி கொண்டுள்ளோம்.
இப்போது இந்தத் தனுசு முறிந்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது? எங்களுக்கு சாத்வீகமாக எதிலும் ஈடுபட முடியாது. தனுர் வேதத்தில் இலயித்துள்ள எங்களுக்கு வீரம், சண்டை இவற்றில் தான் மனம் ஈடுபடும். எனவே, தாங்களுக்கு எங்கள் மார்கத்திலேயே ஒரு நல்ல வழியைக் கூற வேண்டும், என்றவுடன் ஜனகர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.
பின்னர் சிவ தனுசிலிருந்து வெளி வந்த எல்லா தேவ, தெய்வ சக்திகளையும் 1008 அஸ்திரங்களில் ஆவாஹணம் செய்தார். அந்த 1008 அம்புகளையும் ராமபிரானுக்கே வெற்றிப் பரிசாக அளித்து விட்டார். அந்த தனுர் வேத சக்திகளும் ராமபிரானுடைய அம்பாரத் துணியிலேயே குடி கொண்டு ராமருக்கு உறுதுணையாக நின்றன.
இலங்கையில் ராவணனுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் இராவணனின் உடலைத் துளைத்து அவனைப் பரலோகத்திற்கு அனுப்பியதும் இந்த 1008 அஸ்திர சக்திகளே. இராவணன் சிவ தனுசை முறையாகப் பயன்படுத்தாது யாரை எல்லாம் அதர்மமாகத் துன்புறத்தினானோ அவர்களுடைய சாபங்களே சிவ தனுசு அஸ்திரங்களாக மாறி அவன் உயிரைக் கவர்ந்தன.
உண்மையில் இராமர் இராவணனைக் கொல்ல வில்லை. இராவணனுடைய தீவினைகளே அவன் உயிரைக் கவர்ந்தன. தன் வினை தன்னைச் சுடும் என்று முதுமொழிக்கு நிரூபணமாக நின்றதும் சிவ தனுசே.
*சிவ சிவ சிவ ... ராம ராம ராம ஹரே ராம்*..

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...