Sunday, 15 March 2026

முற்றிலும் தன்னலம் கருதாத அன்பே அன்பு.

 1.முற்றிலும் தன்னலம் கருதாத அன்பே அன்பு.

2.அத்தகைய அன்பு கடவுளின் அன்பே… அதை அடைவது மிகவும் கடினம்.
குழந்தை தாய் தந்தை என்று பலரை நேசிக்கிறோம். அதாவது அன்பின் இத்தகைய பல வகையான நிலைகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். அன்பு காட்ட நாம் படிப்படியாகப் பயின்று கொண்டிருக்கின்றோம்
ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து நாம் எந்தப் படிப்பினையையும் பெறுவதில்லை.
ஏதாவது ஒருவரிடமோ அல்லது ஒரு நிலையிலோ கட்டுண்டு விடுகின்றோம். சிலர் இந்த வலையில் இருந்து விடுபடுகிறார்கள்.
மனிதன் எப்போதும் மனைவி குழந்தை புகழ் செல்வம் இவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான்.
1.சில வேளைகளில் அவன் தலையில் பலத்த அடி விழுகிறது.
2.அப்போது இந்த உலகம் உண்மையில் என்ன…? என்பதை உணர்கின்றான்.
இறைவனைத் தவிர வேறு எதையும் யாராலும் உண்மையில் நேசிக்க இயலாது. மானிட அன்பு எவ்வித சாரமும் அற்றது… வெறுமையானது என்பதை மனிதன் உணர்கின்றான்.
மனிதனால் நேசிக்க இயலாது… எல்லாம் பேச்சுடன் சரி. மனைவி தன் கணவனை நேசிப்பதாக கூறி அவனை அணைத்து முத்தமிடுகிறார். ஆனால் அவன் இறந்தால் முதலில் அவள் நினைப்பது அவனது வங்கிக் கணக்கு எவ்வளவு…? மேற்கொண்டு என்ன செய்யலாம்…? என்பதைப் பற்றித் தான்.
கணவன் மனைவியை நேசிக்கிறான். ஆனால் அவள் உடல் நலம் குறைந்து அழகு குன்றினாலோ விகாரம் அடைந்தாலோ ஒரு தவறு செய்தாலோ அவ்வளவுதான்…! அவளை ஒதுக்கத் தொடங்கி விடுவான்.
உலகில் நாம் காணும் அன்பு அனைத்தும் வெறும் வெளி வேஷமே வெறுமையே…!
1.எல்லைக்கு உட்பட்ட ஒன்று அன்பு செய்ய முடியாது.
2.எல்லைக்கு உட்பட்ட ஒன்றின் மீது அன்பு காட்டவும் முடியாது.
மனிதனால் விரும்பப்படும் பொருள்கள் கணம்தோறும் அழிந்து கொண்டே இருக்கின்றது… அவன் வளர வளர அவனது மனமும் மாறிக் கொண்டே இருக்கிறது.
அப்படி இருக்கும் போது நிலையான அன்பை இந்த உலகில் எதிர்பார்க்க முடியுமா…?
1.இறைவன் மீதுள்ள அன்பைத் தவிர
2.வேறு எந்த அன்பும் நிலையாக இருக்க முடியாது.
எனவே பல வகைப்பட்ட இந்த அன்புகள் எதற்காக…? இவை யாவும் வெறும் படிகள் மட்டுமே. நமக்குப் பின்னால் ஒரு சக்தி இருந்து கொண்டு “அன்பு…” என்ற ஒன்றை நோக்கி நம்மை உந்தித் தள்ளிக் கொண்டு செல்கிறது.
உண்மைப் பொருளை எங்கே தேடுவது…? என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நமது இந்த அன்பு அதைத் தேடிச் செல்வதற்காக நம்மை முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது.
நாம் திரும்பத் திரும்ப நமது தவறை உணர்கிறோம். ஏதோ ஒன்றைப் பற்றுகிறோம். அது நம் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. உடனே இன்னொன்றைப் பற்றுகிறோம்.
1.இவ்வாறு முன்னேறிச் செல்கிறோம்.
2.இறுதியில் வருகிறது ஒளி.
3.நம்மை நேசிக்கும் ஒரே ஒருவரான ஆண்டவனிடம் நாம் வருகிறோம்.
4.அவனது அன்பு ஒருபோதும் மாறாதது… எப்போதும் நம்மை அரவணைக்கத் தயாராக இருப்பது.
நான் உங்களைத் துன்புறுத்தினால் எவ்வளவு காலம் நீங்கள் என்னைப் பொறுத்துக் கொள்வீர்கள்…? யாரிடம் கோபம் வெறுப்பு பொறாமை எதுவும் இல்லையோ… யார் எப்போதும் சமநிலையில் இருப்பாரோ… யாருக்குப் பிறப்பு இறப்பு இல்லையோ அவரால் மட்டுமே அது முடியும்.
அப்படிப்பட்டவர் ஆண்டவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்…!
ஆனாலும் இறைவனை அடையும் வழி மிக நீண்டது… கடினமானது. ஒரு சிலரே அவனை அடைகிறார்கள். நாம் தட்டுத் தடுமாறும் வெறும் குழந்தைகள்.
இந்த அன்பு நெறியைக் கோடிக்கணக்கானோர் வியாபாரச் சரக்காகக் கருதுகிறார்கள். எல்லோரும் இதைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் ஒரு சிலரை அடைகின்றார்.
ஒரு நூற்றாண்டில் ஏதோ ஒரு சிலரே அந்த இறையன்பைப் பெறுகின்றார்கள். “அவர்கள் வாயிலாக நாடு முழுவதும் ஆசி பெற்றுப் புனிதம் அடைகிறது…”
சூரியன் உதித்ததும் எப்படி இருள் அகல்கிறதோ அது போல் அவதார புருஷன் ஒருவர் தோன்றும் பொழுது நாடே பேறு பெற்றுப் புனிதம் அடைகிறது.
உலகம் முழுவதிலும் ஒரு நூற்றாண்டில் ஏதோ ஒரு சிலரே இப்படிப் பிறக்கின்றார்கள். ஆனால் அந்த அன்பைப் பெற நாம் எல்லோரும் உயர்வோம்.
யார் கண்டார்கள்…?
1.ஒரு வேளை அந்தப் பூரணமான அன்பை அடுத்தது பெறப்போவது
2.நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம்…! எனவே நாம் முயற்சி செய்வோம்

No comments:

Post a Comment