Monday, 25 November 2024

ஆண் அழுவான்...


 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்...

*தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்...
*தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்...
*தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்...
*அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும்போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்.
*காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்...
*தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்...
*பிழைப்பை தேடி கடன் சுமைக்காக தாயகத்தைப் பிரிந்து
செல்லும்போது, தான் நேசிக்கும் அன்பானவர்கள் தன் அருகே இல்லையென ஒவ்வொரு இரவிலும் ஆண் அழுவான்...
*ஆண்கள் அழுகிறார்கள் ஆனால்... எப்படி?
இருட்டில்...
பிறர் அறியாவண்ணம்...
தலையணைகளில் முகத்தைப் புதைத்து... கழிவறையில் தண்ணீரை திறந்து...
*அவன் அழுகையின் கண்ணீரை யாரும் பார்த்துவிடக்கூடாது என நினைப்பான்...
அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை அவன் சங்கடத்தில் விடும்
பெருமூச்சு , அதற்கு சாட்சியாகும்...
*கண்களில் வெளிப்படும் ஏக்கம்...
*நடுங்கும் கைகள்
*வார்த்தையில் தடுமாற்றம்...
*பெரும்பாலான ஆண்கள் குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாதது, ஏமாற்றும் மற்றும் தேவைக்கு தேடிவரும் உறவுகள், உறவுகளின் துரோகம், போன்ற மனசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில்தான் நிறைய ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள்...
*இவன் குழப்பத்தில் இருக்கிறான், பைத்தியக்காரன், என மற்றவர் நினைக்க அது அவனுக்கு மட்டும்தான் தெரியும் உள்ளுக்குள் அவன் அழுதுகொண்டு இருக்கிறான் என...
*ஒரு விஷயத்தில் இந்த ஆண் வர்க்கம் மிகவும் கெட்டிக்காரர்கள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரிப்பது இந்த வித்தையில் ஆண் சமூகம் எப்போதுமே தேர்ச்சிப்பெற்றவையே...
ஆண்கள் இப்படித்தான் அழுகிறார்கள்.

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள்

 இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...

(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)
. பயனுள்ள பதிவு தவறாமல் படிக்கவும்...
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .
அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.
இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.
*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.
*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*
உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்...அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.
இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கவும்... நன்றி.
வணங்குகிறேன்.படித்ததில் மிகவும் பிடித்தது 

Friday, 22 November 2024

*உணவு தோஷங்கள்*


 *உணவு தோஷங்கள்*

உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.
அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி" சமைக்கிறார்கள் என்பதும் கூட தான்.
உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.
1) அர்த்த தோஷம்
2) நிமித்த தோஷம்
3) ஸ்தான தோஷம்
4) ஜாதி தோஷம்
5) சம்ஸ்கார தோஷம்
*அர்த்த தோஷம்*
பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.
உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.
மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.
பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.
தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.
வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.
இது பொருளால் வரும் தோஷம் - அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.
நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.
*நிமித்த தோஷம்*
அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.
அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.
அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.
உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.
பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.
அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.
தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.
நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.
*ஸ்தான தோஷம்*
அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.
அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.
துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.
எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.
உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.
*ஜாதி தோஷம்*
அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.
சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.
ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.
தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.
*சம்ஸ்கார தோஷம்*
அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.
ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

Wednesday, 6 November 2024

கர்மா என்பது என்ன..?

 கர்மா என்பது என்ன..?

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்!
அந்தக் கதை இதோ:
ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்..
“மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!
சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!
நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர்,
ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.
அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!
அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்!
அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது!
இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!
அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்! பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார்..
“இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!
மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்..
நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்...
எனவே,
நல்லதையே தேடுவோம்...
நல்லதையே சிந்திப்போம்...

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...