ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

▼

Wednesday, 30 October 2019

கந்தர் சஷ்டி விரதம்

  முருகப் பெருமானுக்கு உ

கந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை வார விரதம்; நட்சத்திர விரதம்; மற்றும்திதி விரதம்;
வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது.
நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது;
திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.
நட்சத்திர விரதம்: கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக,
சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.
விரதம் இருக்கும் முறை: கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து,
மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும்.
மாலையில் வீட்டில் உள்ள முருகப் பெருமான் திருவுருவப் படத்தை அலங்கரித்து, தூப தீபம் காட்டி, அரிசியும், துவரம்பருப்பும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து, அந்தப் பொங்கலையே பிரசாதமாக உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். தேவரிஷிகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரத மகரிஷி,
விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார்.
திதி விரதம்: வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.
வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி,
விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள் கூட,
ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை: ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறு நாள்கள் விரதம் இருக்கவேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள பூஜையறையில் பூர்ணகும்பம் வைத்து, அதில் முருகப் பெருமானை உரிய மந்திரங்களால் ஆவாஹணம் செய்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யவேண்டும்.
பகலில் ஒருவேளை மட்டும் உணவு கொள்ளலாம். இப்படி ஆறுநாள்கள் விரதம் இருக்கமுடியாதவர்கள், சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே போற்றப்படுகிறது. அதனால்தான், 'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று கூறுகிறார்கள்.
சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள்.
முருகப் பெருமானுக்கு உரிய இந்த மூன்று விரதங்களை நாம் முடிந்தவரை அனுஷ்டித்தால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.
ஸ்கந்தா சரணம் ! ஸ்கந்தா சரணம்...!
சரவணபவ குஹா சரணம்...!
முருகனின் சரவணபவ என்ற மஹாமந்திரத்தின் பொருள் என்ன....?
மு - முகுந்தன் என்கிற விஷ்ணு, ரு - ருத்ரன் என்கிர சிவன், க - கமலத்தில் இதித்த பிரம்மன். ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.
ஆறுமுகமான சண்முக தத்துவம்:
ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு
இரு முகம் - அக்னிக்கு
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு
நான்முகம் - பிரம்மனுக்கு
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு
சரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம்:
ச - லக்ஷ்மிகடாக்ஷம், ர - சரஸ்வதி கடாக்ஷம், வ - போகம், மோக்ஷம், ண - சத்ருஜயம், ப - ம்ருத்யுஜயம், வ - நோயற்ற வாழ்வு. ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.
ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகள்:
திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம், பழனி - மணிபூரகம், சுவாமிமலை - அனாஹதம், திருத்தணிகை - விசுத்தி, பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் கந்த சஷ்டியில் துதித்து வழிபடுவது நல்வாழ்வை அமைத்து தரும். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின்சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது.



at October 30, 2019
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

sriannathaipechiamman
View my complete profile
Powered by Blogger.