ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

▼

Monday, 23 September 2019

எண்ணம் போல் வாழ்க்கை

ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தான்....அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு., அவர் பாதம் கழுவி பின் குருவை பணிந்து வணங்கி நின்றான்....
அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார்.
அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான். நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான்!
குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே.,
அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு., கன்னங்களை தட்டிக்கொடுக்க..... அவனுக்கு முணுக்கென கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு., என் சிஷ்யன் கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்தியவர்., நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்., பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார்!
ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான்.
ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு., பசி., தாகம்., கொஞ்சம் பயம் வேறு.
சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து விட்டான். அது ஒரு கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது!
ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால்., அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி., அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான்!
சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான்., அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும்., களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்த பழங்களை உண்டு பசி ஆறினான்!
பிரயாணக் களைப்பு., உண்ட மயக்கம்., தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அடடா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்., உடனே ஒரு கட்டில் வந்தது!
ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்.... டங் என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள்!
அசந்து தூங்கினான். திடீரென்று முழிப்பு வந்து விழித்துக் கொண்டான். என்னடா இது., நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே., ஒரு வேளை இது ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ... அந்த பிசாசு இங்க வந்துட்டால்..? என்று நினைத்தான். டங் என்று ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே.
ஐயோ., இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ..? என்று நினைத்தான்., அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது!
இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம் என்று சற்று நிறுத்தியவர்.....
பிறகு தொடர்ந்தார்.
நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன்., ஐயோ., இவளுக்கா ஆசைப் பட்டேன் என்று நொந்து கொள்ளுகிறான்!
ஆசை ஆசையாக வீட்டை வாங்குகிறான்., கட்டுகிறான். அக்கம் பக்கம் தொல்லை., ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது!
பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன மனம் கிடந்து கவலையில் உழல்கிறது!
இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதளிக்கும் படி ஆகி விடுகிறது என்று சொல்லிவிட்டு., சற்று நிறுத்தியவர்... கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று அவனை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார்!
அவனுள் ஞானம் பிறந்தது.
பிறகு., அவருக்கான பணிவிடைகளை செய்து விட்டு., திரும்பவும் என் குருவின் காலடியை தொட்டு வணங்கிவிட்டு அவன் இருப்பிடம் நோக்கி திரும்பினான்.
*இதைத்தான் மாணிக்கவாசகர்...*..
*அவன் பார்த்து செய்யட்டும் என்று எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விடு என்கிறார்......*
*பாடல்*
*வேண்டத் தக்க தறிவோய் நீ*
*வேண்ட முழுதுந் தருவோய் நீ*
*வேண்டும் அயன்மாற் கரியோய் நீ*
*வேண்டி என்னைப் பணி கொண்டாய்*
*வேண்டி நீயா தருள்செய்தாய்..*
*யானும் அதுவே வேண்டின் அல்லால்*
*வேண்டும் பரிசொன் றுண்டென்னில்* *அதுவும் உன்றன் விருப்பன்றே.*
தென்னாடுடைய சிவனே போற்றி !!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!
.♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
சிவ சிவ சிவ சிவ சிவ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥



V Shanmuga Raj

at September 23, 2019
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

sriannathaipechiamman
View my complete profile
Powered by Blogger.